Saturday 15 January 2022

ஆண்டாள் அரங்கக்குப் பன்னு திருப்பாவை :

ஆண்டாள் அரங்கக்குப் பன்னு திருப்பாவை :
அன்ன வயல் புதுவை ஆண்டாள் அரங்கர்க்குப் பான்னு திருப்பாவை பல்பதியம் - பராசர பட்டர் திருவாக்குப்படி திருப்பாவை 30 ம் திருவரங்கன் விஷயமானவை . எப்படி என்பதை இங்கு பார்க்கலாம்.
1. நாராயணன் - ஸக பத்நியா விசாலாக்ஷியா நாராயண உபாகமது - வால்மீகி வாக்குப்படி ரங்கநாதன் தான் ஜகந்நாதன் - பெருமாள் ஆராதித்த பெரிய பெருமாள்.
2. பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் - கார்ய வைகுண்டத்திலுள்ள க்ஷீராப்தி நாதன்தனான வியூக வாசுதேவன்தான் ஸ்ரீ ரங்கத்துக்கு பிரதானம் - பிரத்யக்ஷ பரமம் பதம் ஸ்ரீரங்கம்.
3. திங்கள் மும் மாரி - லக்ஷ்மிநாத ஸமாரம்பாம் என்று குருபரம்பரையில் பிரதம குருவாய் நின்று ரஹஸ்ய த்ரியங்களை ஸ்ரீரங்க நாச்சியாருக்கு உபதேசிக்க, அவள் வழி விஸ்வக்ஷேனர் , நம்மாழ்வார் உபதேசித்த கிரமம் - மும்மாரி
4. ஆழி மழை - சார்ங்கம் உதைத்த சரமழைபோல் என்று சார்ங்கவில் சேவகனாக இராமபிரானைப் பற்றி பிரஸ்தாவம் இதில். - ராமோ த்விர் நாவிபாஷதே என்று கத்யத்தில் நம்பெருமாள் தன்னை ராமனாகக் கொண்டு சொன்ன வார்த்தை .
5. மாயனை - அரவின் அணைமிசை மேயமாயனார் என்று திருப்பாணாழ்வார் சொன்ன தாமோதரன் பெரிய பெருமாள்தானே.
6. முனிவர்களும் யோகிகளும் ஹரி என்று - சிற்றெயிற்று முற்ற மூங்கில் அற்ற பற்றர் வாழும் அந்தணீர் அரங்கன் - விமானத் தூண் ஹ + ரி என்ற வாசகத்தோடே ஆனது .
7. கீச்சு கீசு - கிளிச் சோழன் கிளி மண்டபம் இங்குதான் உண்டு.
8. தேவாதி தேவன் - தேவரையும் அசுரனையும் திசைகளும் படைத்தவனே யாவரும் வந்து அடி வணங்க அரங்கநகர் துயின்றவனே என்று குலசேகர ஆழ்வார். தேவாதி பிரம்மா அவன் ஆராதனம் செய்த பெரிய பெருமாள். செங்கோல் உடைய திருவரங்கச் செல்வனார் - ஆண்டாளுக்கு.
9. மாமாயன் மாதவன் வைகுந்தன் - அரங்கன் அழகிய மணவாளன் நம்பெருமாள் என்ற மூன்றும் பரத்வம் ஸ்ரீயப்பதித்வம் சௌலப்யத்துக்கான திருநாமங்கள் தானே.
10. மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் - லோகாசாரங்க முனி திருப்பாணாழ்வார் விஷயமாக அபசாரப்பட, பின் அவர் திருவாராதனத்துக்கு வந்த போது அரங்கன் சன்னதி கதவு திறக்காமல் மௌனியாய் காலம் தாழ்த்தி, பிறகு ஆழ்வாரை எழுந்தருள பண்ணி அவருக்கு அதுவரை திறவாத வாசலை திறந்துவிட்டவன் அரங்கன்.
11. முற்றம் புகுந்து - அரங்கன் முற்றம் சேறு செய்யும் தொண்டர் - சுற்றத்து தோழிமார் எல்லாரும் 105 திவ்யதேச எம்பெருமான்கலும் பள்ளி கொள்ளுமிடம் திருவரங்கம்.
12. அனைத்தில்லத்தாரும் அறிந்து - சாத்தின சாத்தாத 10கொத்து பரிவாரங்களை நியமித்து எம்பெருமானார் திருவரங்கத்தை நிர்வகித்து போந்த படி இங்குதான்.
13. பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் - பிள்ளைகள் திருவரங்கம் காவிரிக்க கரையில் அன்ன கூட உற்சவம் விளையாடும் போது ஜீயோ! என்று அழைக்க , எம்பெருமானார் மணல்சோற்றை தமருகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தமருகந்தது எப்பேர் மற்றப்பேர் என்பதாக அதை பிரசாதமாகவே நினைத்து பெற்றறுக் கொண்ட சரித்திர சங்கேத்யம். 14. வாய் பேசும் நங்காய் நாணாதாய் நாவுடையாய் - வாயழகர் என்னரங்கத்து இன்னமுதர்; திருவரங்கர் தாம் பணித்த மெய்மை பெரு வார்த்தை ; பேசி இருப்பனவைகள் பேர்க்கவும் பேறாவே ; ஸ்ரீரங்கே ஸுகமாஸ்வ என்று எம்பெருமானாருக்கு அருளிய வார்த்தைகள் எல்லாம் அரங்கன் நாவுடைமைக்கு சான்று.
15. எல்லாரும் போந்தாரோ ? - அத்யயன உற்சவத்தில் ஆழ்வார்கள் எல்லாரும் திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி இருந்து 21 நாட்கள் தமிழ்மறை திருநாள் கண்டருளுவதில் திருவரங்கம் திருப்பதி பிரதானம், காரணம் இவரே பதின்மர் பாடும் பெருமாள் . பாசுரங்களின் எண்ணிக்கை 247 போலே தமிழ் உயிர் மெய் எழுத்துக்கள் தொகையும் 247.
16. வாசல் காப்பான், கோயில் காப்பான் - உத்தர வீதி, சித்தரை வீதி, நான்முகன் கோட்டை வாசல் (ரங்கா ரங்கா கோபுரம்) கார்த்திகை கோபுர வாசல், ஆரிய படாள் வாசல் (கருட மண்டபம்), நாழி கேட்டான் வாசல் (துவஜ ஸ்தம்பம்), ஜெய விஜயாள் வாசல், திருமணத்தூண் திருவாசல் களில் உள்ள துவார பாலர், க்ஷேத்ர பாலர்கள் எழுப்பினது.
17. அம்பரமே தண்ணீரே சோறே அறம் - அரங்கனுலா சென்ற காலத்து ஆழ்வாருக்கு வஸ்திரமும், ஸ்ரீவைஷ்ணவ வெள்ளத்தானுக்கு ஈரவாடை தீர்த்தமும், ஆழ்வான் திருகுமாரர்கள் அவதரிக்க ஹேதுவாய் பிரசாதம் அனுப்பிய விருத்தாந்தங்கள் இந்த வகை கணக்கு.
18. உன் மைத்துனன் பேர்பாட(வசவு பாட) - ஸ்ரீரங்கம் பங்குனி உத்திரமுதல் நாள் நடக்கிற பிரணய கலக்கத்தன்று அனைவரும் நாச்சியார் பரிகரமாக நின்று, அரங்கனை ஏசினபடிக்கு .
19. மைத்தடம் கண்ணினாய் - உல்லாச பலவித (பட்டர்) , சேதனனை அருளாலே திருத்தும். ஈஸ்வரனை அழகாலே திருத்தும் தத் இங்கித பராதீன : நம்பெருமாள். (ஆழ்வான்) என்று ஸ்ரீரங்க நாச்சியார் வைபவம் .
20. செப்ப முடையாய், திறலுடையாய் - நம்பி இராமானுசனை முதலில் அரையர்மூலம் நேர்மையாக கேட்டு பெறாது போக, இரண்டாம் முறை காஞ்சி தேவப்பெருமாளை பாட்டுக்கு போர இசைய வைத்து , ஸ்ரீரங்கம் அழைத்துக் கொண்ட திறல் = சாமர்த்தியம் அரங்கனுக்கே அன்றோ?
21. ஏற்ற காலங்கள் எதிர் போங்க - முதலில் ஆழ்வாரைக் கொடுத்தார். அவர் பவிஷ்யத் ஆச்சாரியரைக் கொடுக்க, அந்த ராமானுசர் எதி புனராவதாரமான மாமுனிகள் எதிர் பொங்கி மீதளித்த பிரபாவம், முதலில் கொடுத்த அரங்கனுக்கே ஆச்சாரியனான படி இது.
22. செங்கண் சிறுச்சிறிதே - திருப்பாணாழ்வார் - காரியவாகி புடை பரந்து என்று பாடிய படி. உய்யக் கொண்டார் வழி ஆளவந்தாருக்கு ராஜ்ய வியாபாரத்தை விட்டு சம்பிரதாயத்துக்கு ஆக்கின படி; பிள்ளை உறங்காவில்லி தாஸர் பொன்னாச்சியோடு அரங்கனுக்கு ஆட்பட்டது ராமாநுசர் சொல்லிக் காட்டிய அக் கண்ணழகுதானே.
23. சீரிய சிங்கம் போதருமா போலே - நடைக்கு கோயில். குடைக்கு பெருமாள் கோயில். வடைக்கு திருமலை. முடிக்கு யாதவாத்ரி பிரசித்த மிறே.
24. அன்றிவ் உலகம் அளந்தாய் - எல்லை மண்டபம், ஜீபயர்புரம், உறையூர் என்று எல்லை நடந்து அளந்தது திருவானைக் காவல் கோஷ்டியாரிடம் இருந்து மீட்டது.
25. ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஒருத்தி மகனாய் ஒளித்து வளர - ராமானுசர் கைப்பிள்ளையாய் பிறந்து பிள்ளை லோகாச்சார்யார் மகனாய் ஜோதிஷ்குடியில் ஒளித்து வளர்ந்தது.
26.மார்கழி நீராடுவான், மேலையார் செய்வனகள் - மார்கழி நீராட்டமாகிற அத்யயன உற்சவமான திருவாயமொழித் திருநாளாக நம்பெருமாளிடம் பிரார்த்தித்து திருமங்கை ஆழ்வார் தொடங்கி வைக்க , நாதமுனிகள் காலத்தில் பகல் பத்து நாளும் சேர்த்து அது 21 நாள் உற்சவமாக ஆயித்து. அதுவே நமக்கு மேலையார் செய்வனகள் ஆயிற்று.
27. நாடு புகழும் பரிசு - ஸ்ரீரங்க விமானத்தோடு பெரிய பெருமாளை , பெருமாள் விபீஷணனுக்கு கொடுத்தது. உபய விபூதியையும் எம்பெருமானார் இட்ட வழக்காக்கி அவரை உடையவர் என்று நியமித்தது இவை பார் புகழும் பரிசு.
28. சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே - முதலியாண்டான் - வாங்கீபுரத்து நம்பி பேச்சு - பெருமாள் உற்சவமாக எழுத்தருளும்போது என்ன பாடினீர் என்ன, ஜெய விஜயீ பவ ஸ்ரீரங்க விபோ ஜெய ஜெய என்றேன் என்ன - நெய் உண்பீர் , பாலுண்பீர், பட்டுடுப்பீர், நூறு பிராயம் புகுவீர் என்று இன்னொருவர் சொல்ல, முரட்டு சமஸ்கிருத பெரிய பேர்கள் இங்கு எதற்கு என்று, வர்த்திக்கிற தேசத்தைக் கொண்டு அத்தை சிறுபேறாக அவர்கள் கணிசத்தபடி.
29. பொற்றாமரை அடியே போற்றும் பொருள் - ரங்கமணி பாதுகா பிரபாவம் பற்றி ஸ்வாமி நிகமாந்த தேசிகன் 1000 ஸ்லோகம் பண்ணக் கூடிய மகிமை. ஆசன பத்மத்திலே அழுத்தின திருவடி அவன் கைவிட்டாலும், அவன் பாதுகையான நம்மாழ்வார் இல்லை மாறன் அடிபணிந்துய்ந்த எம்பெருமானார் கைவிட மாட்டார் என்கிற பெருமையும் கொண்ட திருவடி அரங்கனுடையது.
30. ஈரிரண்டு மால் வரைத் தோள் செங்கண் திருமுகத்து சொல்வது திருமாலால் - பட்டர்- அனந்தாழ்வான் ஸம்வாதம். ஸ்ரீ வைஷ்ணவ திவயதேசங்கள் பலதும் இருக்க பட்டரோ ஸ்ரீரங்கநாத பக்ஷபாதி. எப்படி என்றால் நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழி ஆயிரமும் வான்திகழும் சோலை மதிள் அரங்கர் வான் புகழ்மேல் ஆன்ற தமிழ்மறை ஆயிரம் என்று அங்கு சொன்னது போல திருப்பாவை முப்பதும் அன்ன புகழ் புகழ்புதுவை ஆண்டாள் அரங்கர்க்கு பன்னு திருப்பாவை என்று ஸ்ரீரங்கநாதன் விஷயமாக்கி தனியன்கள் சாதித்தார். அவரைப் பார்த்து அன்னத்தாழ்வான் ஒருமுறை, நீர் வைகுந்தம் சென்றால் அங்கு பராமநாதன் த்விபுஜனாக இருந்தால் சேவிப்பீரா, சதுர் புஜனாக இருந்தால் சேவிப்பீரா என்று வினவ, அதற்கு பட்டர் சதுர் புஜனாக இருந்தால் நம்பெருமாள் என்று நினைப்பேன். த்விபுஜனாக இருந்தால் பெரிய பெருமாள் என்று நினைத்து சேவிப்பேன். பெரிய பெருமாளாகவோ, நம்பெருமாளாகவோ சேவை தரவில்லை என்றால், கூரயைப் பிய்த்துக் கொண்டு ஸ்ரீரங்கத்துக்கே குதித்து விடுவேன் என்றாராம். அதை நிரூபிக்கும் வகையில் ஆண்டாளும் நான்கு திருத்தோள் என்று சொல்லாமல் ஈரிரண்டு மால்வரைத் தோள் மாதவன், கேசவன் என்றது நம்பெருமாள், பெரிய பெருமாளாக நினைத்து அவள் பாடினாளாகக் கூறலாம்.
மாதவன், கேசவன் - ஆண்டாளை திருக்கல்யாணம் பண்ணி அங்கப் பறை கொண்ட மன்னார் - அரங்கன் தாமே.
-- Excerpts from Sri U. Ve. Velukkudi Swami Discourse 2020.
P.C. Venkatagiri Ravichandran.

-- தாசரதி தாஸன் , (அகரம்) கிடாம்பி ஸ்ரீநிவாஸ ரங்கன் ஸ்ரீநிவாஸ தாஸன்.




Friday 24 April 2020

மாலை கட்டிய மாலை

ஶ்ரீ: ஶ்ரீமதே ராமாநுஜாய நம:

மாலை கட்டிய மாலை

ஆழ்வார் திருமகளார் ஆண்டாள், பெரியாழ்வார் பெண்பிள்ளையாய் அவதரித்து, அஞ்சுகுடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள் தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் வளரப்பெற்றாள். வட பெரும் கோயிலுடையானோடே தழுவி முழுசி பரிமாறவும் பாரித்தாள். அர்ச்சா சமாதியில் இருந்த அவன் முகம் காட்டாதே ஒழிய, இன்னாப்படைந்தவளாய், அவனோடு கலந்து பரிமாறின  திருவாய்ப்பாடிப் பெண்கள் விருத்தாந்தம் கேட்டு தானும் அநுகரித்து தரிக்கப் பெற்றாள் என்கிறதான  அவளுடைய சரித்திரத்தை  பலரும் அறிவர் .  மடலெடுக்காதே, அவள் நோன்பிலே கை வைத்தது கிருஷ்ணனுடைய உபாயாந்தர அஸஹிஷ்ணுத்வத்தை கருத்திலே கொண்டு என்பர்.

பெரியாழ்வார் பகவத் ஸம்ருத்தியை ஆசைப்பட்டிருந்தார். ஆண்டாளோ பாகவத ஸம்ருத்தியை ஆசைபட்டாள். ஆண்டாள் பாடிய திருப்பாவை இதுக்கு ப்ரதீகம். பெரியாழ்வார் பிரதம பர்வத்திலே நிற்க, இவளோ சரம பர்வத்திலே ஊன்றினளாய்- சத்ருக்நாழ்வான் படியிலே நிற்கப்பெற்றாள். ”விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேலது காண்டும்”என்கிற நாச்சியார் திருமொழி பாசுரம் (௧0-௧0) இதுக்கு விஷயம்.

அந்த வகையிலே அவள் பாடிய பாசுரங்கள் ஒவ்வொன்றுமே ஒரு புஷ்ப குஞ்ஜா (ஹாரம்) என்று சொல்லலாம். பாசுரங்களின் ஈற்றடியிலே வருகிற சொற்றொடர் களைக் கொண்டே அந்தந்த மாலைக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது இங்கு.  இதற்கு முன்னால் இப்படி மாலை மலையால் கட்டியவர்கள் உண்டோ என்னில், ஆம் ! உண்டு என்றே சொல்லலாம் .

இலங்கைக்குத்  தூது சென்ற திருவடி பிராட்டியைக் கண்டு சக்ரவர்த்தித் திருமகன் கூறியதாக சில அடையளங்களை பெரியாழ்வார் ''நெறிந்த கருங்குழல் மடவாய்...'' (3-10-1) என்கிற பதிகத்திலே 'எல்லியம் போதினி திருத்தல் இருந்ததோர் இடவகையில் மல்லிகை மாமாலை கொண்டு அங்கார்த்தும் ஓரடையாள ம் '  என்று பாசுரம் இட்டருளினார்.  அதன்படி சீதாபிராட்டி ராமனை மல்லிகை மாலையால் விளையாட்டாக கட்டியது  ராமாயண பிரசித்தம்.  பெரியழ்வாரோ நந்தவனம் அமைத்து மாலை கட்டி சமர்ப்பித்த தோடு  ஆண்டாளை ரங்கமன்னாருக்கு  மணாட்டியாய்க் கட்டிக் கொடுத்து மாமனாராகவும் ஆனார்.  ஆக,  'மாலை மாலையால் கட்டிய மாலை' என்றே ஆண்டாள் பற்றி ஒரு வழக்கு உண்டு.  அதாவது - திருமாலை பாமாலை கொண்டு கட்டிய கோதையாகிற மாலை - என்பதே  அதன் பொருள்.

1. பாரோர் புகழ் மாலை :

அதாவது முதல் பாட்டின் ஈற்றடியில் ’பாரோர் புகழ படிந்து ஏலோரெம் பாவாய்’ என்று வருவதால் இந்த பாசுரம் ’பாரோர் புகழ் மாலை’ ஆகிறது. அநந்யப் பிரயோஜன பரர்க்கு, புகழ்சி புருஷார்த்தமாகக் கூடுமா? கியாதி, லாப, பூஜையில் கண்வைத்து பாசுரம் பாடலாமா? என்னில் ஸ்வவிஷயத்தில் அல்லாமல் பரார்த்தமான கியாதி உத்தேஸ்யமே.

மகிழ்சி ஒருவர் புகழ்தல் காரணமாக வருமது. ஆக காரணத்தைச் சொல்ல வேண்டிய இடத்தில் கார்யத்தைச் சொன்னதாகப் பார்க்கில், ’பாரோர் மகிழ படிந்து ஏலோரெம்பாவாய்’ என்று கொள்ள இடமுண்டு. ஸ்வயம் பிரயோஜனமாகாதே பாரோர் மகிழ்வதைத்தான் ஆண்டாள் இங்கே பேசுகிறாள். ’படிந்து’ என்பதில் உள்ள ஸ்வாரஸ்யம் ’விதேயனாய்’ இருந்து நாரயணன் நமக்கு கிருபை செய்வான் என்பதை விசேஷித்து நோக்கத்தக்கது. ’நாராயணனே நமக்கே பாரோர் புகழ படிந்து பறை தருவான்’ என்று அன்வயித்துக் கொள்ள வேண்டும்.

கிருபை செய்யுமிடத்து எம்பெருமான் ஆஸ்ருத பரதந்திரனாய் இருந்து கார்யம் செய்யும் என்பதை ஆழ்வார் ’அருள்பெறுவார் அடியார்தம் அடியனேற்கு ஆழியான் அருள் தருவான் அமைகின்றான், அது நமது விதிவகையே’ (திருவா. ௧0-௬-௧) என்று முன்மொழிந்ததை, வழிமொழிகிறாள் ஆண்டாள். அதாவது, பிராப்ய-பிராபக விவேக ஞானம் உடைய பிரபன்னாதிகரிகள் விஷயத்தில் எம்பெருமான் இப்படி கார்யம் செய்யும் என்பதிலே நோக்கு.

இப்படி பர ஸமிர்த்தியால் இவர்களுக்கு வந்த புகழ் என்பதால் இது ஏற்புடைத்து அல்லவே?

2. இரண்டாம் பாட்டு -’உய்வு மாலை’ :

இப்பாட்டின் ஈற்றடி ’உய்யுமாறெண்ணி உகந்து’ என்பது. நோன்பில் ஒருப்பட்ட ஆண்டாள் தத்விஷயமாய் விடவேண்டியவை இன்னது, அநுஷ்ட்டிக்க வேண்டியவை இன்னது என்கிற கிருத்யாகிருத்ய விவேகம் பண்ணி யருளுகிறாள்.

அந்த வகையில் ஆண்டாள் சாதித்த ஆறு நியமங்களும்,

காஞ்சி தேவப்பெருமள் ஆறு வார்தைகளும்,
ஆழ்வார்கள் ஆறு வார்த்தைகளும் போல

நமக்கு உஜ்ஜீவன ஹேது என்றால் மிகையாகாது.

தேவப்பெருமாள் ஆறு வார்த்தைகளாவன :
௧. அஹமேவ பரம் தத்வம்;
௨. தர்சனம் பேதயேவச;
௩. உபாயேஷு பிரபத்திஸ்யாத்;
௪. அந்திம ஸ்மிருதி வர்ஜனம்;
௫. தேஹாவஸாநே மோக்ஷம்ச
௬. பூர்ணாசார்யம் (பெரிய நம்பி) ஸ்மாஸ்ரயேத் - என எம்பெருமானாரோடு மிக்குள்ள நம்மையும் விஷயீகரிக்க திருக்கச்சி நம்பிகள் மூலம் அருளிச் செய்த வார்த்தைகளாகும்.

ஆழ்வாரகள் ஆறு வார்த்தைகளாவன :

௧. வதுவை வார்த்தை(திருவா.௫-௧0-௨);
௨. நெய்யூண் வார்த்தை(திருவா.௫-௧0-௩);
௩. வெண்ணை வார்த்தை(திருவா.௬-௨-௧௧);
௪. நடந்த நல்வார்த்தை(-"-௭-0௫-௯);
௫. மெய்மைப் பெருவார்த்தை (நாச்.௧௧-௧0);
௬. விடுத்ததோர் வார்த்தை (பெரி.௨-௮-௬).

வதுவை வார்த்தையாவது - எருதுகள் ஏழையும் நிரசித்தார்க்கு நப்பின்னையை மணமுடிப்போம் என்கிற வார்த்தை. அது பிறந்தவளவிலே ஏறுகள் ஏழின்மேல் விழுந்து கண்ணன் கொன்ற விருத்தாந்தமும் ,

நெய்யூண் வார்த்தையாவது - நெய்களவு கண்டான் என்னும் வார்த்தை பிரஸ்துதமாக, தாய் யசோதை கையில் கோல்கொள்ளவும் தன் தாமரைப்பூ போன்ற கண்களில் அச்சத்தோடே நீர்மல்க நின்ற கண்ணனின் எளிவரவும் ,

வெண்ணை வார்த்தையாவது - வெண்ணை களவு போயிற்று என்கிற வார்த்தையிலே ’கண்ணனே களவு செய்தான்’ என தாயார் வைக்கோல் கொண்டு புடைத்தாளாக, கண்ணும் கண்ணீருமாய் நிற்கிற அவன் நிலை எதைப்போன்றது என்றால் - ஒரு சத்திரத்தில் வழிப்போக்காக தங்க வந்த யாத்ரிகர்களிலே ஒருவர், மடம் இவ்வளவு பெரியதாக உள்ளதே, இதனை மெழுகி கோலமிடுவார் யாரே? (அதி சிரமமான காரியமாகவிருக்கும் என்கிற அர்த்தத்தில்) வினவ, யாரோ ஒரு அஸ்ரோத்ரியன் என்று இன்னொருவர் பதில் இறுத்தார்.  ’இவ்வளவு பெரிய மடத்தை தன்னாலே மெழுகப்போகாது’ என்றானாம் அவர்களிலே ஒருத்தன். இப்படி அவன் தன்னை அஸ்ரோத்திரியன் என்று வெளிப்படுத்தினாப் போலே, வெண்ணை களவு போயிற்று என்கிற வார்த்தையிலே தன்னைத்தான் சொல்கிறார்கள் என்று கண்ணன் அழத் தொடங்கினது, என்னே அவன் மௌடியம்.

நடந்த நல்வார்த்தையாவது - கண்ணனெம்பெருமான் தன்மேன்மையை அழித்துக்  கொண்டு  தாழவிட்ட நீர்மை குணத்தை உணரலாகா தண்ணிய பூமியினின்றும் விடைப்பெற்று தன்னுடைச் சோதிக்கு எழுந்தருளிய போது திரௌபதி விஷயமாய் ’தன்னைக் கடன்பட்டவனாக’ அதிருப்தியோடே மொழிந்த சீரிய வார்த்தைகள்.

மெய்மைப் பெருவார்த்தையாவது - மாயன் அன்றைவர் தெய்வத் தேரினிற் செப்பிய கீதா-சரம ஸ்லோகத்தின் செழும்பொருளை விட்டுசித்தர் கேட்டு அதன்படி இருப்பர் என்கிற ஆண்டாள் நாச்சியாரின் பெருமிதமான வார்த்தை.

விடுத்ததோர் வார்த்தையாவது  - கஞ்சன் வஞ்சிப்பதற்கு விடுத்த வார்த்தைகளாகும். அஸரீரி வாக்கியம் கேட்டவன்று தொடங்கி, தீயபுத்தி கஞ்சன் இருள்தான் ஒருவடிவு கொண்டாப்போலே கறுத்த நிறத்தையும், அக்நிஜ்வாலை போலே சிவந்த தலைமயிரையும் உடையளான பேய்சியை, நேர்கொடு நேர்சென்றால் சாதிக்கலாகாது, வஞ்சத்தால் சாதிப்பாய் என்று ஏவிவிட்ட வார்த்தை, கண்ணன் பிறந்தபோதே உண்டு என்ற இப்பெரியாழ்வார் வார்த்தையும் நமக்கு ஸ்மாரகம்.

எம்பெருமானார் ஆறு வார்த்தை :
பிரஸ்தான திரியங்களை வாசித்து வாசிப்பிப்பது , மாட்டிற்றாகில்
ஸ்ரீ பாஷ்யத்தை வாசித்து வாசிப்பிப்பது , மாட்டிற்றாகில்
அருளிச்செயல்களை வாசித்து வாசிப்பிப்பது , மாட்டிற்றாகில்
ரஹஸ்ய திரியங்களை வாசித்து வாசிப்பிப்பது , மாட்டிற்றாகில்
இவை அறிந்த ஸ்ரீவைஷ்ணவனோடே சகவாசம் பண்ணுகை, மாட்டிற்றாகில்
திருநாராயண புரத்திலே ஒரு குடில் கட்டி நித்யவாஸம் செய்வது.

”அநந்யசாத்யா சாபீஷ்டா... ” என்ற பிரமாண வசனத்தின்படி சரணாகதிக்கு நம்பக்கல் இருக்க வேண்டிய ஆறும் உத்கிருஷ்ட உஜ்ஜீவனோபாயம் என்பதில் விசம்வாதம் உண்டோ? இல்லை.

௧. பரமனடி பாடுகை,
௨. (நோன்புக் கனுகுணமாக) நெய், பால் உண்ணாமை, மை தீட்டல், மலர் சூடுகை இவை தாமாக செய்து கொள்ளாமை,
௩. (மேலையார்) செயாதவைகளை தவிர்கை,
௪. தீகுறளை (பகவத், ஆசார்ய சன்னிதியில்) விண்ணப்பிக்காமை,
௫. ஐயம் (சாஸ்திர விஹித) தானங்களையும்,
௬. பிச்சை (ஆஸ்ரம விஹித) தானங்களையும்,
ஆம்தனையும் அநுஷ்டித்துப் போருகை, ஆண்டாள் நமக்கிட்ட கட்டளை களாகும்.

’அது, இது, வுது என்னலாது, ”உன்செய்கை” என்னை நைவிக்கும்’ என்கிறபடியே பகவானால், பகவானுக்காக, பவானை குறித்து சொல்லப்பட்ட இவை அனத்துமே நமக்கு உஜ்ஜீவன ஹேது.

3 -> 6 ???

7. ஏழாம் பாட்டு - தேச மாலை :

--’தேசுடையாய் திற’ என்பது ஈற்றடி. இங்கு தேசு என்பது தேஜஸ் என்ற பொருளிலும், தேசம் என்ற பொருளிலும் வந்துள்ளது. அதாவது, பிரஹ்ம ஞானமாகிற தேஜஸால் வந்த புகரை உடையவள் இந்த பெண்பிள்ளை என்பது.

--’பண்டை நாளாலே நின்திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு (திருவாய்.௯-௨-௧) என்று ஆழ்வார் தமக்கு எல்லா உறவின் காரியமும் குறைவில்லாமல் அருளப் பிரார்த்திதுப் பெற்ற சேஷத்வமே இங்கு தேஜஸ். அத்தையே இவர்களும் கண்ணனுக்கே உற்றோமாய் இருப்பதை ’பறை’ என்று இலை மறைவு காய் மறைவாய் வெளியிட்டார்களிறே.

--எம்பெருமானார் மாறனேர்நம்பி போல்வார் ஹஸ்த ஸ்பர்சம் கொண்டு காவிரியில் ஸ்நானம் முடித்து கரைக்கு மீண்டவராய்  ஸன்னதி ஏற புறப்படுவார் என்றால் அது ஐஸ்வர்ய, ஆபிஜாத்யத்தால் வந்த அங்கீகாரம் அன்றி, ஆசார்ய பிரதிபத்தியால் வந்ததொன்று.

--தேசம் என்ற பொருளில், பகவத் சன்னதி, இவள் இட்ட வழ்க்காய் கண்ணன் ஆக்கி இருக்கிறபடி.  எம்பெருமானார் ’உபய விபூதி’ ஸம்பன்னராய் இருந்தாப்போலே ஒரு பெண்பிள்ளை இவள் எனலாம்.

--’பொன்னுலகு ஆளீரோ? புவனமுழுதாளீரோ? (திருவா.௬-௮-௧) என்று எம்பெருமானுக்கே சொந்தமான பரமபதத்தை ஆழ்வார் பக்ஷிகளுக்கு அளிப்பதும் இவருக்கு விதேயமாய் அதனை பகவான் ஆக்கிவைத்த படியாலே.

--நம்பிள்ளை காலக்ஷேப கூடம் விரியடைய வேண்டி, அருகிருந்த மனையும் கேட்டுப் பெற அதுக்கு ஈடாக பரமபத்ததுக்கு சீட்டு எழுதிப் பெற்றாள், மனைக்குறிய ஒரு பெண்பிள்ளை  என்பதிலே இது த்ருடீக்ருதமாகிறது அல்லவா?

8. எட்டாம் பாட்டு - அருள் மாலை :

ஆவா வென்றருள்! என்பது ஹ! ஹ!! என்கிற சந்தோஷ சூசகம் அன்றி வருத்தக் குறியும் ஆகக்கூடும்.

--ஸந்தோஷமாக பேசினதுக்கு இடம் திருப்பாணாழ்வாரின் ’நீலமேனி ஐயோ! என்னை சிந்தை கவர்ந்ததுவே’ என்பதனைக் காட்டலாம்.

--’தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால் ஆவவென்று ஆராய்ந்து அருள்’ என்று முடிகிறது பாசுரம். கண்ணன் தான்சென்று அருள வேண்டி இருக்க, இவர்கள் நம் திருமாளிகை தேடி வந்ததோடு பிரார்த்திக்கும்படியும் ஆனதே என்று வருத்தம் இரட்டிப்பாக, ஆ! ஆ!! என்று ஆவர்த்தி சொல்லிற்று.

--சபரி, குகன், வீடணன் இவர்கள் விஷயத்தில் பரகதமான பகவத் ஸ்வீகாரம் தானும் இவர்கள் விஷயத்தில், ஸ்வகதமாகக் கடவதே? என்கிற  வருத்தம் அவனது.

--ராஜ்யத்துக்கு எலுமிச்சம் பழம்போல், ரத்னதுக்கு பலகரையும் பகவத் கிருபைக்கு பிரபத்தி அஸதுர்சம். அல்ப்பம். அவனை இவன் பற்றும் பற்று அஹங்கார கர்பம். அவத்யக்ரம், என்று ஸ்வாமி பிள்ளை லோகாசார்யர் திருவாக்கு.

--மர்கட கிஷோரம் போல் ஸ்வகத ஸ்வீகாரம். மார்ஜால கிஷோரம் போல் பரகத ஸ்வீகாரம்.

--அருள் பெறுகை அடியார்க்கு லக்ஷணம். அவர்களுக்கு விதேயனாய் இருந்து அத்தை பண்ணுவிக்கை, ’ஆராதனைக்கு எளியவன்’ என்கிற அவனுடைய ஸௌலப்யம் பிழைக்கவும் ஒரே வழி பரகத ஸ்வீகாரத்தாலேயே அன்றோ?.

9. ஒன்பதாம் பாட்டு - திருமாம மாலை :

மாயா வயூனம் ஞானம் என்கிற நிகண்டு படி, எம்பெருமான் தன் இச்சா சக்தி-சங்கல்ப ஞானத்தைக் கொண்டு பிறக்கிறான் என்பதை தானே கீதா ஶாஸ்திரத்தில் - பிரக்ருதி ஸ்வாம் அதிஷ்டாய ஸம்பவாமி ஆத்ம மாயயா என்றானிறே. அத்தை ஆழ்வாரும் ”ஆதியம் சோதி” உருவை அங்கு வைத்து இங்கு பிறப்பதாக பேசியருளினார். தைவீக்யேஷா குணமயி மம மாயா துரத்யயா என்று ஆத்மாக்களை பந்திப்பதும், மாமேவ ஏதாம் தரந்திதே என்று விடுவிப்பதும் தானே என்றும் பேசினபடியை நோக்கலாம். இது தவிற அவனுடைய ஆஸ்சர்யகரமான சேஷ்டிதங்கள், மநுஷ்யத்வே பரத்வத்துக்கு விவக்ஷிதங்கள் என்றால் மிகையாகாது.

மாதவன் : என்றால் பெரிய பிராட்டிக்குத் தவன் - கேள்வன் என்றும், ”மற்றவரை சார்த்தி இருப்பார் தவம்” என்கிற நான்முகன் திருவந்தாதி (௧௮) பாசுர கணக்கில், தவமாவது சேதன லாபத்துக்காக அவன் உத்யோகிக்குமது தொடக்கமானவை.

அன்றிலே. தவமாவது ஈஶ்வரனை ஆஶ்ரயிப்பது. மாதவமாவது அவன் அடியார்களை ஆஶ்ரயிப்பது என்று கொண்டால் அவர்களுக்கு பரதந்ரனாய் கார்யம் செய்து தலைக்கட்டுவது, அவன் மாதவனாக இருந்தமைக்குப் பிரயோஜனம் எனலாம்.

வைகுந்தன் : ’வேர் முதல் வித்து’ என்று தன் பரத்வே பரத்வம் தோற்ற பரமபதத்தில் இருக்கும் இருப்பு.

பகவத் விஷயத்தில் சொன்ன இவைதமயே ஆசார்ய பரமாக பார்ப்போமாகில் -

மாமாயன் என்பதை ”பார்த்தான் அறுசமயங்கள் பதைப்ப, இப்பார் முழுதும் போர்த்தான் புகழ் கொண்டு, புன்மையினோரிடைத்தான் புகுந்து தீர்த்தான் இருவினையும் தீர்த்து அரங்கன் செய்ய தாளிணையோடு ஆர்த்தான், இவை எம்பி இராமாநுசன் செய்யும் அற்புதமே” (௫௨) என்கிற இராமானுச நூற்றந்தாதிப் பாசுரத்தைக் கொண்டு பார்க்கில், . எம்பெருமானைப் போலவே, எம்பெருமானாரும் புற மதத்தவர்களை ஒருபாடு நடுங்கச்செய்தது; ஆஶ்ரயித்திருக்கு மவர்களை தன்னைப் போலவே ஆத்ம குண ஸ்ம்பன்நர்களாக்கி பாபங்களையும் கட்டோடு கழித்து, நம்பெருமாள் திருவடிகளுக்காக்கும் இவர் செயல்களும் ஆச்சரிய்மானவையே அன்றோ?

மாதவன்: என்பது ஸ்வாத்யாய நிரதம். இதுவும் ஒருவகையில் தபஶுதான். பரபக்ஷ நிரஸனுத்துக்காக வேத, வேதாந்தங்களிலே அந்வயித்தவராய், அருளிச்செயல்களே பொழுது போக்காய் தலை நின்றவர் எம்பெருமானார்.

வைகுந்தன்: என்பது இவர் விஷயத்தில் வைகுண்ட பிரதத்வமாகிற ”உபாய” கிருத்யமாகும். ’வைகுண்ட மணிமண்டப மார்கதாயி’ என்று இவர் ஸம்பந்தம் உண்டாமால் மோக்ஷம் என்பது ஸம்பிரதாயம்.

ஆக, எம்பெருமான் விஷயமாகவும், ஆசார்ய விஷயமாகவும் பல நாமங்களைச் சொன்னோம் - நாமம் பலவும் நவின்று - என்று பூங்கண்ணி புநைதமையைப் பேசினாள் ஆண்டாள். இதுவே அவள் கட்டிய ”திரு நாம மாலை”.

10. பத்தாம் பாட்டு - தேற்ற மாலை :

தேற்றமாய் வந்து திற. நீயும் தேறி, எங்களையும் தேறும்படியாக வந்து திற என்பது பொருள்.

தேற்றம் தெளிவு. அதாவது, ஞானத்தில் தெளிவு. திருநெடுந்தாண்டகப் பாசுரம் (௨௧) ’இருவராய் வந்தார் என்முன்னே நின்றார்’ என்றவிடத்தில் வியாகியானம் இருவராம்படி வந்தார் என்று காட்டியுள்ள படியால், தேற்றமாய் வந்து என்ற இந்த இடத்திலேயும் தெளிவு ஏற்படும் படி என்கிற அர்த்தத்தை தருவித்துக் கொண்டால்,  இந்த பாசுரத்தில் எழுப்பப் படும் பெண்பிள்ளை இவள் வாயைத்  திறக்க, கலங்கிய பிறர் புத்தி தெளியும் என்றபடி.

பகவத் விஷயத்தில் பேற்றுக்கு உபாயமாக ஒன்றை செய்ய முற்படுகை கலக்கம். ’மாம் ஏகம் சரணம் விரஜ’ என்ற கீதாசாரியன், உபாயாந்தர்ங்களை விட்டே தன்னைப் பற்ற வேண்டும் என்றருளிச் செய்தான். திருவேங்கட மலையிலே அத்தை அபிநயித்து காட்டியும்  நிற்கிறான். இதையே, பகவத் பிரவ்ருத்திக்குத் தடையான ஸ்வப்பிரவ்ருத்தி நிவிர்த்தி சரணாகதி என்பர் . ’சித்த வேண்டா, சிந்திப்பே அமையும்’என்று  பேசினார் ஆழ்வாரும்.

சாஸ்த்ரிகள் தெப்பக் கையரைப் போலே சாஸ்த்ர விஹிதமான கர்மாக்களையும், எம்பெருமான் ஆகிய இரண்டையும் பற்றி பிறவிக் கடல் நீந்துவர். ஸாரக்ஞர்கள் விட்டத்தில் இருப்பாரைப் போலே இருகையும் விட்டு கரைகுறுகும் காலம் பார்த்திருப்பர். இப்படி செய்த வேள்வியராய் பர ஸமர்பணம் செய்து விஸ்வசித்து இருக்க, மார்பிலே கைவைத்து உறங்கலாம்.

கலக்கமும், அதன் பரிஹாரமும் :

தேஹாத்மபுத்தி கழிய வேண்டுவது மகார வாச்யனான ஆத்மா ஞாநானத்தால் தேஹ வியதிரிக்தன் என்கிற அறிவு.

ஸ்வாதந்ரிய புத்தி கழிய வேன்டுவது பகவத் சேஷ வஸ்து ஜீவாத்மா என்கிற அறிவு. அகாரத்திலே ஏறிக்கழிந்த லுப்த சதுர்த்தி இதைத் தெளிவிக்கும்.

அன்ய சேஷத்வ புத்தி கழிவது உகாரத்தால். ஏவ என்ற பொருளில், பகவானுக்கே சேஷப்பட்டவன் ஜீவாத்மா என்ற இத்தால்.

ஸ்வரக்ஷணே ஸ்வான்வய புத்தி கழிவதும் நம: பதத்தாலே. ம: ந என்று, பகவதேக ரக்ஷணத்வம் காட்டப்பட்டது இதிலே.

ஆபாச பந்துக்கள்பக்கல் புத்தி விலகுவதும் நாரயணனே ஸர்வவித பந்து என்று விஸ்வசித்த போது.

விஷய சபல புத்தி கழிகையும், ஆய என்கிற வியக்த சதுர்தி அநந்யப் ப்ரயோஜனதையை விளைவித்து.

பிராப்திக்கு வேண்டுவது ருசியும் விலக்காமையும். திரௌபதியும், கஜேந்திர ஆழ்வானும், ஸ்வயத்னத்தை விட்டவளவிலே - நம: பதார்த்தம் தெரிந்து அநுஷ்டான பர்யந்தம் ஆனவளவிலே - ரக்ஷணம் பிறந்தது. ’சசால சாபஞ்ச விமோச வீர: என்று ரக்ஷணதுக்காக பிடித்திருந்த வில் விலகின அளவிலே, ’இன்றுபோய் போர்க்கு நாளை வா’ என்கிற வார்த்தை பிறந்தது. தலை வணக்கி அப்போதே வாழ்ந்து போயிருக்கலாம். அதற்கு அவகாசம் கொடாதே, தாக சாந்திக்காக உண்டான தடாகத்திலே கழுத்திலே கல்லைக் கட்டி விழுந்து சாவாரைப்போலே, மாண்டு போனான் ராவணன்.

நீயும் தேறி, எங்களையும் தேறும்படியாக வந்து திற என்பதிலே உண்டான தெளிவு இவையே.

11. பதினோறாம் பாட்டு - பொருள் மாலை :

நீ எற்றுக்குறங்கும் பொருள் ஏல் என பிரச்னம் இடுகிறாள் ஆண்டாள். இதுபோன்ற பிரச்னங்கள்தாம் ஞாத பிரிச்னம் என்றும், அஞாத பிரச்னம் என்று இரண்டு வகை. தெரியாத விஷயத்தை தெரிந்து கொள்ளவே பிரச்னங்கள் எழுகின்றன.

பொருள் = அர்த்தம், பிரயோஜனம் ஏது என்று வினவுகிறாள் ஆண்டாள்.

எம்பெருமான், ஒரு ’வெள்ள வெள்ளத்தின்மேல் யோக நித்திரை’ செய்வது வைதிக உறக்கமாகும். நம்மவர்கள் உறக்கம் தமோகுண கார்யம். பகவான் கிருஷ்ணன் கீதை ௨-௬௬ ஸ்லோகத்தில், ’யா நிஷா ஸர்வ பூதாநாம்’, ’யஸ்யாம் ஜாக்ருதி பூதாநி’ எது என்று விளக்க மளிக்கிறான். இதர விஷயங்களில் வைராக்யம் உறக்கம். பகவத் விஷயத்தில் ஈடுபாடு உணர்த்தி என்று பொருள் படும் இதற்கு.

’ஸுப்ரபாதாஸ்ச மே நிஷா’ என்று அக்ரூரரும் ’அன்று நான் பிறந்திலேன், பிறந்தபின் மறந்திலேன்’ என்று திருமழிசை ஆழ்வாரும் பகவானின் முகத்தில் விழித்தலையே விடியலாக, ஸத்தா பிரயுக்தமாக நோக்க, மற்றது அதற்கு எதிர் தட்டான, இரவு (அ) அசத்கல்பம் என்னவும் வேண்டுமோ?

12. பன்னிரண்டாம் பாட்டு - அறிவு மாலை :

அனைத்தில்லத்தாரும் அறிந்து ஏலோரெம்பாவாய். அதாவது இவள் ஸகாசத்திலே எல்லோருக்கும் உணர்த்தி ஏற்பட்டது என்கிறாள். எம்பெருமானார் பிறந்தாற் போலே ஆயித்து, இவள் சேர்த்தியிலே எல்லோரும் பகவத் விஷயமறிந்தது.

ஓராண்வழியாச் சென்ற உபதேசம் தான் ’ஆசையுடையோர்க் கெல்லாம் ஆரியர்காள்! கூறுமின்’ என்று பேசி வரம்பறுத்தார் எம்பெருமானார்.

’போதுவீர் போதுமினோ’ என்று இச்சையே அதிகார மாக்கினதும் இவளைக் கூடினபோதிறே. ஏல்லோரும் அறிய வேண்டும் என்கிற விசாலமான திருவுள்ளம் படைத்த எம்பெருமானார் போல்வாள் ஒருத்தி யல்லளோ  இவள்?

’மனத்துக் கினியான்’ என்று திருவாய்ப் பாடியிலே கண்ணனைத் தவிற வேறு ஒருத்தரைப் பாடுவதா? ராமன் மனத்துக்கு இனியான் ஆகில், கண்ணன் இன்னாப்புக்கு விஷயமா என சில பெண்கள் கிளர்சி செய்ய, இவள் ஒருத்தி ’இருவரும் ஒரே வியக்திதான்’ என்று சமாதனப் படுத்தி, எல்லோரும் அத்தை உணரும்படிச் செய்தாள். அதுக்குச் சேர,  கிருஷ்ண விருத்தாந்தமும், ராம விருத்தாந்தமும்  மாறி மாறி பேசும்படியான  ’புள்ளின்வாய் கீண்டானைப் போல்லாவரக்கனை' பாசுரம் பிறந்தது அடுத்தது என்று அந்வயம்.

13. கள்ளம் தவிர் மாலை :

போதரிக்  கண்ணினாய் : போது = போதம் என்பது போது  என்று ஆகியுள்ளது. அரிதலாவது அந்த ஞானத்தை சேகரிப்பதாகும்.  ஆசாரியனானவன் எப்போதும் ஞானத்தை சேகரிப்பதிலே  கண்ணும், கருத்தாய் இருப்பர்.
பாவாய் : ஸ்த்ரீத்வம் அல்லது பாரதந்த்ரியத்துக்கு உடல். பரதாழ்வானைப் போலே வைத்த இடத்தில் இருக்கும் இருப்பு. இங்கே ஒரு ஐதிஹ்யம் காணலாம்.

ஒரு சமயம் பாஹ்யர்களால் ஸ்ரீரங்கத்துக்கு ஆபத்து வர, பெரிய நம்பிகள் எம்பெருமானாரிடத்தில் வந்து விண்ணப்பித்தார். பகவத் விஷயத்தில் ஆபத்தை போக்க அவனிடத்திலேயே பிரார்த்திக்க வேணுமாய் ''சூழ வலம் செய்ய கடுவினை களையலாமே'' என்கிறபடி திருவரங்க வீதிகளிலே பிரதக்ஷணமாய் வர ஆபத்து விலகும், அதற்கு பெரிய நம்பிகள் தன்பின்னே நிழல் போல் வருவாரைப் பிரார்த்தித்து வேண்ட, உடையவரும்  கூரத்தாழ்வானை அனுப்பி வைத்தார் என்பது குருபரம்பரை சரித்திரம். முகுறும்பு அறுத்தவரான ஆழ்வானும் ப்ராசாரியரின் பின்னே செல்ல தயங்குவாரோ? ஆனபோது எம்பெருமானாருக்கு பரதந்திரராய்  மாற்றுப்  பேச்சு உண்டோதான்?

ஸ்ரீமத்  ராமானுஜ சரனௌ சரணம் பிரபத்யே |
ஸ்ரீ மதே ராமானுஜாய நாம: ||

என்ற ஜகதாசாரியர் விஷயமான துவய மஹா மந்திரத்தில் ''மதுப்பு'' பிரத்யாத்தல்  பகவத் விஷயமான துவயத்தில் பிராட்டிகீடாக இங்கே பேசப் படுமவர் கூரத்தாழ்வான் என்றால் அவருக்குண்டான ஸ்த்ரீத்வ பூர்த்தி யோடேயான ஆசாரியனைச் சொல்லுகிறது இங்கு.

கள்ளம் தவிர்கையாவது ''ஓராண் வழியாய்ப்'' மற்றையோர்க்கு ஒளித்துப் போந்ததை ''ஆசை உடையோர்க்கு'' எல்லாம் ஆக்கின கிருபாமாத்ர பிரசன்னா சாரியர்  இருந்தபடி.

ஸ்வயம் பாகத்திலே வயிறு வளர்க்காமல் ''சாது கோஷ்டியில் உட்கொள்ளப் படுவாரே'' என்கிறபடி எம்மையும் அங்கீகரித்து அனுபவத்தை பகுமுகமாக்கப் பிரார்த்தனை.

14. பதினாலாம் பாட்டு - பாடல் மாலை :

சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாடு.

’ராமம் மாநுஷம் மந்யே’ என்று ராமன் தன்னை மநுஷ்யனாகவே காட்டிக்கொள்ள ஆசைப்பட்டான்.  அதற்காகவே, சதுர் புஜங்களை மறைத்து, த்விபுஜனாகவே அவதாரத்தை நடத்தி முடித்தான். என்றாலும் ஹநூமான், மண்டோதரி போல்வாருக்கு தன் நான்கு தோள்களை காட்டினான் என்பதை ருஷி வெளியிட்டுள்ளார்.

மண்டோதரி வியக்தமாக கண்டதுபோல் ஹநூமான் காணவில்லை ஆனாலும், ’ஆயதாஸ்ச, ஸுவ்ருதாஸ்ச’ என்கிற பகு வசன சப்தங்களால் இதனை ஊகிக்கமுடிகிறது. ராம லக்ஷ்மணர்களைச் சேர்த்து பகுவசனப் ப்ரயோகம் என்று மறுக்க வழியுண்டானாலும், வால்மீகி, த்விவசன இலக்கணம் கொண்டே அதனை ஸ்லோகமாக்கி யிருக்கலாம். அப்படியல்லாமல், பகுவசனமாகவே ஸ்லோகம் அமைத்ததுக்குத் தாத்பர்யம், ராமன் ஹனூமானுக்கு  நான்கு தோள்களோடே தன்னைக் காட்ட ஹனுமான் அவனக் கண்டார்  என்பது உறுதியாகிறது.

எம்பெருமான் திருக்கண்கள் காதுவரை நீண்டதின் தாத்பர்யத்தை பராசர பட்டர், ராஜாக்கள் நாடு பிடிக்கும் ஆசையில் பக்கத்து தேசங்கள்மேல் படை எடுத்து வசமாக்குவது போல், அவனுடைய கண்களும் அருகிருந்த காதுவரை நீண்டு பாய்ந்தாக் கிரமித்ததாய் அருளிச் செய்தார்.

உய்ந்த பிள்ளை என்கிற அரையர், பெரியாழ்வார் திருமொழியில் உள்ள, ’அப்பூச்சி’ காட்டும் பிரகரணத்துக்கு அபிநயம் பண்ணா நிற்க, எம்பார் உள்ளீரோ? என்று கேட்டதான, எம்பெருமானார் விஷயமான ஐதிஹ்யம் இங்கு நோக்கத்தக்கது.

15. பதினைந்தாம் பாட்டு - மாயனைப் பாடு ஏலோரெம்பாவாய்.

’நானேதான் ஆயிடுக’ என்று பாகவத விஷயத்தில் இருக்கும் இருப்பு சொல்லப்பட்டது இதிலே.

கந்தாடை தோழப்பர் நம்பிள்ளை விஷயத்திலே இல்லாத குற்றங்களை ஏறிட, அதற்கு பிள்ளயும் இசைந்தித்டார், ”என்ன உலகாரியனோ?” என்று அவரால் அழைக்கப்பட, அப்பேர் அவருக்கு விலகாமல் வந்து பரந்தது.

செய்யாத குற்றத்தை ஏறிட்டாலும், இசைந்து, அதற்கு க்ஷமாபணம் வேண்டுவது உத்தம ஶ்ரீவைஷ்ணவ லக்ஷணம்.

இப்படிபட்ட ஆத்ம குணம் உடைய பெண்பிள்ளையை எழுப்புகிறாள் ஆண்டாள். எழுந்திருந்து செய்ய வேண்டிய காரியம்தான் என்ன, என்று வினவ, மாயனை பாட வேண்டும் என்கிறாள்.

கண்ணன் மாயங்களாவன வல்லானை கொன்றது, மாற்றார்களை அதாவது சாணூர-முஷ்டிகர்களை அழித்தது இத்யாதி.  தொண்டரடிப் பொடியாழ்வார் ’கவளமால்யானை கொன்ற கண்ணன்’ என்றும், நமாழ்வார் ’வார்கடாவருவி யானைமாமலையின் மருப்பினைக் குவடிறுதுருட்டி(திருவா. ௮-௪-௧)என்றும் பாடி விஸ்மயித்தனர்.

ராக்ஷசர்களில் ஒருத்தனான ஹிரண்யனனைக் கொன்று, ப்ரஹ்லாதனை ரக்ஷித்தான். ராவணனைக் கொன்று, விபீஷணனை ஏற்றான். பக்ஷிகளில் ஒன்றான காகாசுரனை நிக்ரஹித்து ஜடாயுவை வானேற்றினான். நாகங்களின் ஒன்றான காளியனை விரட்டி, கருடனின்று காத்து தக்ஷனுக்கு அடைகலம் கொடுத்தான். இதுவல்லவா அவன் மாயம்.

முதல் ’பாடல் மாலைக்கு’, பகவத் அநேக குணங்கள் விஷயம். இரண்டாவது ’பாடல் மாலைக்கு’ அவனுடய வீர தீர பிரதாபங்கள் விஷயம்.

16. பதினாறாம் பாட்டு - நீ நேய நிலைக் கதவம் நீக்கு என்றபடியாலே இது ஒரு ”நேச மாலை” :

இதிலே உள்ள வெஞ்சார்த்தம், ஸ்வாமி எம்பெருமானார் விஷயமான ஸ்வாபதேசம் எனலாம்.

நந்த கோபன் குமரன் - எதிராஜ சம்பத் குமாரர்க்கு பிதாவான இவர்,

நந்த கோபனுடைய கோயில் - தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்த கோயில் சாவியை திருவரங்கத்து அமுதனார் கையினின்றும் ஒரு உபாயத்தால் பெற்றார்,

கொடித் தோன்றும் தோரண வாசல் காப்போன் - ’கொடியணி நெடுமதில் கோபுரம்’ (திருவா. ௧0-௯-௮) பரமபதமாகிற விஷ்ணுலோக மணிமண்டப மார்க்க தாயியாகிற நீர்,

மணிக்கதவம் - நவ ரத்னங்கள் போன்ற கிரந்தங்கள் வாயிலாக, வேதாந்த விழுப்பொருள்களை,

தாள் திறவாய் - காலக்ஷேபம் ஸாதித்தருள வேண்டும்.

மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான் - ’பவிஷ்யத்’ புராணதிலேயும், ஆழ்வருமாக ’பொலிக, பொலிக பொலிக’ பதிகத்திலே இவர் அவதாரத்தை சூசிப்பித்ததோடு ’பவிஷ்யத்’ ஆசார்ய விக்ரகத்தையும் உபகரித்த  படியால்,

தூயோமாய் வந்தோம் - உபாய, உபேயங்களில் சுத்தியோடே வந்த எங்கள்,

துயிலெழப் - ’அநாதி மாயயா ஶுப்த’ என்கிற அக்ஞான அந்தகாரத்தை விலக்கக் கடவீர்.

பாடுவம் - ’கலியும் கெடும் கண்டு கொள்மின்’ என்கிற பாட்டு பிரஸ்துதமாகக் கடவது.

நீ நேச நிலைக் கதவம் நீக்கு -

கதவு இரண்டு கபாடங்களாக விருக்கும். நிலைக்கதவம் நிலைத்த ரக்ஷண லாபத்துக்காக நேசத்தோடே ஒன்றொடு ஒன்று கவ்வி இணந்திருக்கும். அந்த வகையில் மந்த்ரம், மந்த்ர சேஷம் என்று இரண்டு பாகமாய் இருக்கும் திருமந்த்ரம்; நிலை நின்ற ரக்ஷண ஆஸ்வாசகர பகவத் வசனமாகிற சரம ஸ்லோகமும்; பூர்வார்த்தம்-உத்தரார்தம் என்று இரண்டு பகுதியாய்; அதுபோலே பூர்வ கண்டம், உத்தர கண்டம் என்று இரண்டு கண்டங்களோடே கூடியதுமான துவய மஹ மந்த்ரம் - நேர்த்தியான பிராட்டி ஸம்பந்தத்தோடே கூடியதாய், மந்த்ரத்துக்கு உள்ளீடான வஸ்துவை கோயில் கதவம் போலே ரக்ஷிகின்றன. இவைகளின் விசேஷார்த்தங்களை ஸ்வாமி, உம்முடைய நிர்ஹேதுக கிருபை கொண்டு உபகரிக்க வேண்டும் என்கிறாள் இந்த ’நேச மாலை’ கொண்டு ஆண்டாள்.

17. பதினேழாம் பாட்டு - உறங்காமாலை :

உம்பியும் நீயும் உறங்கேல் எம்பாவாய்.

இதிலே சொல்லப் பட்ட ஸ்வாபதே சார்த்தம் ஆசாரியன், திருமந்திரம், திருமந்திரார்த்தம் மற்றும் மந்திர ஸாரம், முறையே நந்தகோபன், யசோதை, கிருஷ்ண, பலராமர் இவர்களைக் கொண்டு சூசிப்பிக்கப் படுகின்றன.

நந்தகோபன் என்கிற பதம்  ஆனந்தம் அளிப்பவர், ஶ்ரீசூக்திகளை ஸம்ரக்ஷிபவர் என்கிற தத் விந்யாசத்தின்படி, ஆசாரியனைக் காட்டும்.

பர்தாவினுடைய படுக்கையும், ப்ரஜையையினுடைய தொட்டிலையும் விடாதே இருக்கும் யசோதை, பிரதம சரம பதங்களை விடாதே பற்றி இருக்கும் மத்யம பதம் (’உ’ காரம்) போலே அமைந்தது,  இவர்கள் மூவரின் கிடக்கை

அம்பரம் ஊடறுத்தது ஓங்கி உலகளந்த வியாபாரம் வியாப்திக்கு விஷயமாகையாலே, நாராயண பதார்தமுமாக, திருமந்திரம்,

அடுத்ததான, கிருஷ்ண, பலராமர்களின் ஸ்நிக்த்த பாவம் திருமந்திர சாரத்தையும்  உபன்யஸிக் கின்றன..

ஆசாரியன் அம்பரம், தண்ணீர், சோறு என்று அவர் செய்யும், தானம்-உபகாரம்தான், பரமபதம், விரஜை ஸ்நானம், மற்றும் அஹமன்னம், அஹமன்னம் என்கிற ஆத்ம ஸமர்பணத்துக்கான வழி.

மந்திர ஸாரமாவது, ’நின் திருவெட்டெழுத்தும் கற்று, உற்றதும் உன் அடியார்க்கடிமை’ என்கிறபடியே ததீயத்வத்தை ஸ்தாபிப்பது, பலராமனுக்குத் தம்பியாக பிறந்திருக்கிற படியாலே, அவதாரத்துக்குச் சேர சேஷத்வமும், அண்ணனானாலும் பலராமன் ஸ்வரூபத்துக்க்ச் சேர சேஷத்வம் பாராட்டி உணர்த்தி மறுக்கில் நாம் இழந்தே போம் அத்தனை.

ஆசார்ய ருசிபரிக்ரஹீதமான பகவத் பிரேமம், பகவத் ருசிபரிக்ரஹீதமான ஆசார்ய அபினிவேசம் இவைதானும், ஒன்றை மற்றொன்றிலே மூட்ட, ’பெரிய வண்குருகூர் நம்பிக்கு ஆள் உரியனாய் திரிதந்தாகிலும் தேவபிரானுடை கரிய கோல திருவுருக் காண்பன் நான்’ என்னக் கடவதிறே. ஆதிநாதன்-தேவபிரான் தன்ணளி பெறுகையும் இதுகொண்டு.

ஆழ்வாருக்கு ’நெடுமாற்கடிமை’ பதிகம் பாட, கீழில் ௮-பத்து வரை செல்ல வேண்டியிருந்தது. இவ்விடத்தில் ஒரு ஐதிஹ்யம் காட்டப் படுகிறது. ஸ்வந்திரனாய் இருந்து ஒருவன் மீண்டு பகவத் சேஷத்வத்துக்கு இசைந்தவனாய், பின் பாகவத சேஷத்வத்துக்கு வரக் காணில், பகவான்தானும் முகம் சுளிக்குமோ? என்று பட்டர் வினவ, ’அல்லிக் கமல கண்ணனாய்’ இருக்கும் என்று அவர் சிஷ்யர் நஞ்சீயர் பதில் அளித்தார் என்று காட்டப் பட்டுள்ளது. அதாவது ’ஈஸ்வர சேஷம்’ என்று அறிந்த வன்று பிரமித்து மிளலாம். ததீய சேஷத்வ பர்யந்தமாக உணர்ந்தால் மீள வேண்டாவிறே.

18. பதினெட்டாம் பாட்டு - வந்து திறவாய் மகிழ்ந்து - மகிழ் காலை :

நப்பிந்னை நங்காய் என்று ஸ்திரீத்வ பூர்த்தியும், புருஷகர பூர்த்தியும் உடையவள். எங்கனே என்னில், ஈஸ்வரனை அழகாலே திருத்துமவள், சேதனனை அருளாலே திருத்தும். கிருஷ்ணா வதாரத்திலே புருஷகார பூதை நப்பிந்னை பிராட்டியாதலால், திருவாகிறாள்.

கந்தம் கமழ் குழலி, செந்தாமரைக் கை, சீரார் வளை ஒலி என்று மூக்கு, கண், காது இவை பட்டினி போகாதே தளிர்க்கும்படி வந்து திறவாய் மகிழ்ந்து, என்பது ஆண்டாள் விண்ணப்பம். ஆசாரியனுக்கும் உபாய வைபவம் உண்டாகையால்,  அவனைக் காட்டுவதாகவும் தொன்யர்த்தால் விளங்கிக் கொள்ளலாம்.

பந்து - சிஷ்ய வர்கத்துக்கு உபலக்ஷணம். செந்தாமரைக் கை அவருடைய உபதேச முத்திரைக்கும், வளை ஒலிப்ப என்பது பாசுரங்களின் தொன்யர்த்த விளக்கங்களுக்குமாய், வந்து திறவாய் மகிழ்ந்து - திருமாளிகை கதவை திறந்து, வாயைத் திறந்து, பட்டினி கிடந்து அறிய வேண்டிய அர்த்தங்களை ’ஆசையுடையோர்கெல்லாம் ஆரியர்காள் கூறும்’ என்ற வகையிலே, ’கூடு மனமுடையீர்கள் வந்து கூடுமின்’ என்றிவைகளிலே சொன்ன மர்ம சிரத்தை உடைய அதிகாரிகளாகிய எங்களுக்கு, ’நனும் சொன்னேன், நமரும் உரைமின்’ என்று அத்தை ஸர்வாதிகர மாக்கி உபதேசிக்க வேண்டும். இத்தால் பயன் எமக்காய், மகிழ்சி உம்மதாக வேண்டும் என்கிறாள். இதுவே ஆண்டாள் காட்டிய ’மகிழ் மாலை’.

19. பத்தொன்பதாம் பாட்டு - தத்துவமன்று, தகவன்று ஏலோரெம் பாவாய் - தகவு மாலை :

மைத்தடங் கண்ணி - பக்தி சித்தாஞ்சனம் ஆகிற பகவத் விஷயத்தில் ஈடுபாடு.

நீ, உன் மணாளனை - ஈஸ்வராய நிவேதிதும் என்றும், நாரீணாம் உத்தமை என்றும்  சிஷ்யனை ஈஸ்வர சேஷமாக்குகை.

எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் - ஆத்மாக்கள் எல்லாம் அவனுக்கு மஹிஷி பிராயரே ஆயினும், ஆசாரியன் அபிமத மஹிஷியாகிறர். பிராட்டி பரிகரங்களாய் இருக்கிற நம்மை, தன்பரிகரமாக்கி முந்துர காரியம் செய்ய வேண்டி ஸ்வகதமாக தான் விழைபவன்.

தத்துவ மன்று - ”தது+த்வம்” அன்று. ’தத்வமஶி’ ஸ்வேதகேதோ! என்கிற வேத வாக்யத்துக்கு சொல்லப்பட்ட அத்வைத பரமான அர்த்தம் தவறு என்று காட்டி மீட்காவிடில்,

தகவன்று - உம்முடைய கிருபைக்குச் சேராது. இதுவே ’தகவு மலை’.


20. இருபதாம் பாட்டு - இப்போதே எம்மை நீராட்டு - நீராட்ட மாலை :

’இஹிபஸ்யதி ஶரீராணி’ என்று தண்டகாரண்ய ருஷிகள் ராமனிடம் காட்டியது போல, விரஹம் தின்ற தங்கள் உடம்பைக் காட்டி ’எம்மை நீராட்டு’ என்கிறார்கள்.

உன்மணாளனையும் தந்து - விசிரி, கண்ணாடி அத்தோடு உன்மணாளனையும் தர வேண்டும். ’எம்தமை விற்கவும் படுவார்களே’ என்கிற ரீதியில், அசேதன வஸ்துக் களுக்கீடாக எடுதாளும்படித் பகவானும் தன்னை ஆக்கி வைதிருக்கிற ஸௌலப்யம்.

 இப்போதே எம்மை நீராட்டு - கைங்கர்யம் கொள்ளாமை அவனுக்கு தாபம் என்றால் அதை இழக்கை எமக்கு வெக்கை. ’க்ரீஷ்மே ஸீதமிவக்ருதம்’ என்கிறபடியும், ’த்வதீக்ஷண ஸுதாஶிந்து வீஶிவிக்ஷேப ஸீகரைஹி’ என்கிறபடியும் உன் திருக் கண்நோக்காகிற தீர்த்தம் கொண்டு நீராட்டு என்றபடி.

’ஒருபகல் ஓர் ஊழியாலோ’ என்று பேசினபடி பிரியில் தரியாமை யாகிற வாற்றாமை, விலகும்படியாக இப்போதே எம்மை நீராட்டு என்று த்வரிக்கிறார்கள்.

21. இருபத்தோராம் பாட்டு - போற்றியாம் வந்தோம் புகழ்ந்து - புகழ் மாலை :

துயிலுணர்ந்தவாறே வந்த வரத்துக்குக் காரணம் போற்றிப் புகழ்தல் என்கிறார்கள். குணத்துக்குத் தோற்று வந்தவர்களாதலால், அவைதம்மையே விஷயமாக்கிப் பாடுகிறார்கள்.

ஊற்றமுடையாய் - ’ஶாஸ்த்திர யோனித்வாத்’ என்கிறபடியே, ஶாஸ்த்திர வாக்கியங்களைக் கொண்டே ”ப்ரஹ்மம் ” அறியத்தக்கது .

பெரியாய் - யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மநஶாஸஹ’ என்கிறபடியே, வேதத்தாலேயே அறியப்படுமவனாகிலும், ’வேதாதிகன்’

உலகினில் தோற்றமாய் நின்ற - வேதாதிக்னாய் இருந்து வைத்தும், ஸகல மனுஜ நயன விஷயமாம்படி பிறந்து, அத்தால்

சுடரே - பிரகாசிக்கிறான். ’ஸ உ ஸ்ரேயான் பவதி ஜாயமாந:’ என்று பெருமை அடைகிறான். இதிலே ’உ’ என்பது ’ஏவ’ என்கிற பொருள்பட, பிறந்தே பெருமை அடைகிறான் என்றும், பிறந்து பெருமையே அடைகிறான் என்றும், பிறந்து பெருமை அடைந்தவனாகவே ஆகிறான் என, புரத: பஶ்சாதபி ஸ்தாந: என்பதாக ஸ்தானத்ரயத்திலும்  அந்வயம்.

அன்றியே,
ஊற்றமுடையாய் - ஆஶ்ருதர்களை ரக்ஷிப்பதில் சுதி இல்லாதவன். வானர முதலிகள்  விபீஷணனை ’கெட்டவன்’ சேர்கக்கூடாது என்ன, ஹநூமான் ’நல்லவன்’ சேர்த்துக் கொள்ளலாம் என்ன, இருவரையும் ஒப்புவித்து, ’கெட்டவன் அதனால் சேர்த்துக் கொள்ளலாம்’ என்று அங்கீகரிக்கிற விரத்ததை உடையவன்.

பெரியாய் - மறுதலித்த ஸுக்ரீவன் தானும், ராமனை இதற்காக கொண்டாடும்  படியாக அமைந்த பிரபாவத்தை உடையவன்.

தோற்றமாய் நின்ற - தன்னுடைய ஆஶ்ருத பக்ஷபாதம் பிரகாசிக்கும் படியாகவும், அத்தை ’தன் பேறாகவும்’ செய்து முடிப்பவன். ’பீஷ்ம, த்ரோண அதிக்ரம்ய, மாம்ஸ்ச மதுஸூதந. கிமர்த்தம் புக்தம் விருஷட போஜனம்’ என்று கேட்கும்படியாய் அமைந்த பக்ஷபாதம்.

சுடரே - ’ஐவர்க்கு அருள் செய்து, பார்மல்கு சேனை அவித்த, பரம் சுடர்!’ என்றும், ’இன்னார் தூதன் என நின்றான், எவுள் கிடந்தானே’ என்றும் அவனுடைய, நீர்மை, எளிவரவால் வந்த ஔஜல்யம்.

இப்புடைகளிலே போற்றிப்-புகழ்ந்து வந்தோம் என்பதான ’புகழ் மாலை’.


22. இருபத்திரண்டாம் பாட்டு - எங்கள்மேல் நோக்குதியேல், எங்கள்மேல் சாபம் இழிந்து - சாப நிவர்த்த மாலை :

நம்முடைய அபராதங்கள் எம்பெருமான் கண்களை செம்பளிக்கப் (மூடப்) பண்ணும். அவனுடைய அபராத ஸஹத்வம் (க்ஷமை) திருக்கண்களை அலரப்பண்ணும். கோடை ஓடிய பயிரிலே ஒருபாட்டம் மழை பெய்தாப் போலே, ஸாத்மிக்க, ஸாத்மிக்க அவனுடைய அருள் நோக்கை வேண்டுகிறாள், இப்பாசுரத்தில் ஆண்டாள்.

’இவையும், அவையும் உவையும்’ (திருவா. ௧-௯-௧) - பதிகத்திலே ஆழ்வாருக்கு பகவான்  தனுடைய ’ஸாத்மிய போக பிரதத்வமாகிற’ குணத்தைக் காட்டிகொடுத்தான்.

போக மண்டபமாகிற ஶ்ரீரங்கத்தில், திருமணத் தூண்களைப் பற்றியன்றி பெரிய பெருமாளின் திருக்கண் நோக்காகிற பிரவாகத்திற்கு எதிர்விழி கொடுக்கப் போகாது.

’அற்றார்க்கு’ சீற்றத்துடனும், மற்றயோர்க்கு அருள் கொண்டும் நோக்க வேண்டி, திங்களும், ஆதித்யனுமாய் இருக்கிற கண்கள் என்றாள். பின்னை தவறு என்றுணர்ந்து, தேய்தல், வளர்தல், ராகு-கேதுவால் பீடித்தல் இவை உள்ள சூரிய-சந்திரர்கள் அவனுடைய திருக் கண்களுக்கு நேர்கொடு நேர் ஒவ்வார் என்று தெளிந்து, ’செங்கண்’ என்றே சொல்லி ”தத்-தஸ்ய சதுர்சம்” ஆக்குகிறாள்.

இவர்கள் சாபம் விஸ்லேஷ ஜனித விரக தாபமாகும். அதுக்கு வழி, அவன் சன்னதி யேற வந்து தலைப் பெய்தலாகிற யாதிருச்சிக சங்கதிகளை  ஆண்டாள் இயம்புகிறாள். எவை என்னில் -

தேஹாத்மாபிமானத்தை தொலைத்து -> ஆசார்ய ஸஹாசத்திலே -> ஈஸ்வர சேஷத்வத்துக்கு இசைந்தனாய் -> பகவாதேகே உபாயத்தின் மூலம் -> அவர்களின் கைங்கர்யமே பிராப்யம் என்பது வரையிலான யாதிருச்சிக, ஆநுஷங்கிக, பிராசங்கிக ஸுக்ருதங் களாகும்.

அகல்யை  திருவடியாலும், தூர்வாசர் திருகரங்களாலும், நள-கூபர்கள் முழந் தாள்களாலும், மது-கைடபர்கள் தொடையினாலும், ருத்ரன் மார்பு வேர்வையினாலும் சாபம் விலகப் பெற்றனர். அவனுடைய ஜாயமான கடாக்ஷத்தால் வந்த ஞானம், அவன் திருவடிகளிலே விழப்பண்ணும். விழுந்தவனை அஞேல் என்று கைகவித்து ரக்ஷிக்கும். ஆக, அவனுடைய, கண், கால், கை மூன்றும் உத்தேஸ்யம் நமக்கு.

பகவத் பிரபாவம் இதுவானால், ஆசாரியனின் ஒருகண் (உட்கண்) நோக்கு -திருஷ்டி யதிசயம்-  முக்கண்ணன், எண்கண்ணன், ஆயிரம் கண்ணர்களாகிற ஹரி, பிரம்மா, சிவன் இவர்கள் யாருக்கும் சமன் செய்யப் போகாது.

ஆளவந்தார், ’ஆமுதல்வன்’ என்று இளையாழ்வாரை கடாக்ஷித்த படியாலேயே அன்றோ ஸம்பிரதாயத்துக்கும், ஸம்சாரிகளுக்கும் வாழ்சி வானளவாயிற்று?.


23. இருபத்து மூன்றாம் பாட்டு - யாம் வந்த காரியம் ஆராய்ந்தருள் - அருள் மாலை(௨) :

’ஆவா வென்றருள்’ என்கிற திருப்பாவை ௮-ஆம் பாட்டில் ஒரு ’அருள் மாலை’ புனையப்பட்டது. இங்கே ௨௩ ஆம் பாட்டிலும் ஒரு ’அருள் மாலை’ பிரஸ்துதமாகிறது. அங்கே சொன்னது ’அருள்வான்’ என்று பவிஷ்யத் வசனமாக. தாங்கள் சொல்பாவினை   ’வினவி அருள்’ என்கிற பொருளிலே இங்கே இப்பாட்டு பிரஸ்துதமாகிறது எனலாம்.

அகதிகளாக வந்தோம். ஆற்றாமையால் குண ஜிதர்களாக வந்தோம். மற்றையோர்களுக்கு ஆகாதபடி வந்த எங்களை பெற்றாலும் பெறு! இழந்தாலும் இழ!! என்று வந்த சிறுமிகள் விண்ணப்பித் தார்களாக, தன்னைப் பெற்றும் அகதிகள் என்று சொல்லப் போமோ? உங்கள் காரியம் செய்ய சித்தமாய் இருகிற என்னிடம், வந்த காரணத்தை சொல்லுங்கோள் என்ன, கண்ணன் கிடந்த கிடக்கையும், ஸுப்ரபதாமும் சேவித்த தங்களுக்கு நடை அழகும், வீற்றிருந்த கோலமும் காட்டியருள வேண்டும் என்பதாக இப்பாசுரம்.

நடை, கொடை, வடை, முடி என்று கோயில், பெருமாள் கோயில், திருமலை, திருநாராயண புரம் பிரசிதமாய்  நம்பெருமள் நடை அழகு லோகவிஸ்ருதம். சிம்ம கதி, மத்த கதி, வியாகிர கதி, ஸர்ப்பகதி என்று சதுர்கதி பிரசித்தி அவருக்கு.

பெருமாள் நடையழகு காவ்ய பிரசித்தம் என்பதற்கு, சுமித்ரை வசனம் ஓர் எடுத்துக்காட்டு. ’ராமே பிரமாதம் மாகார்ஷி’ என்று லக்ஷ்மணனுக்கு அவள் செய்த உபதேச வார்த்தை இங்கு நினைவு கூறத்தக்கது.

’அக்ருதப் பிரயயௌ ராம, சீதா மத்யே, ஸுமத்யம’ என்கிற வால்மீகி வாக்குப் படி, சீதை ராகவ சிம்மத்தின் பின் நடந்தது, அவன் நடை அழகை பின் இருந்து காண ஆசைப்பட்டாப் போலே.  யாதவ சிம்மமாகிற கண்ணனெம் பெருமானுடைய  நடையழகை அனுபவிக்க ஆசைப்படுகிறாள் ஆண்டாள் இங்கு.

தாங்கள் வேண்டி வந்ததை கொடுக்கும்போது, படுக்கை அறை வார்த்தை ஆகாதபடி, கொலுமண்டபத்தில் சேர-பாண்டியன் சிம்மாசனத்தில் வீற்றிருந்து ஆராய்ந்தருள வேண்டும் என்கிறாள். எம்பெருமானார் கத்யம் விண்ணப்பித்த போது, ”அஸ்துதே|| தயைவ ஸர்வம் ஸம்பத்ஸ்யதே||” என்றருளிச் செய்தாப் போலே ’சீரிய சிங்காசனத் திருந்து’ வாக்தானம் பண்ண பிரார்த்திக்கிறாள்.

’முனிவேழம்’ (இரா.நூ-௬௪) என்றும், ’மறைவாதியராம் புலிமிக்கது’ (இரா.னூ-௮௮) என்கிற அமுதனார் வாக்குப்படி சடங்கர் வாயடங்க த்ரிவேதியாம் பத்ரவேதியிலே அமர்ந்து ’இரமானுச தர்சனத்தை’ நிர்வகித்தார், எம்பெருமானார்.

த்ரயீ வேத: என்று பொருள் படாமல், பேத ஸ்ருதிகளை நீக்கி அபேத ஸ்ருதிகளையே அவலம்பித்த சங்கரர், மற்றும் அபேத ஸ்ருதிகளை விலக்கி, பேத ஸ்ருதிகளையே கணிசித்த ஆநந்த தீர்த்தர் இவர்களைப்போல் அல்லாமல், கடக ஸ்ருதியோடு, பேத-அபேத ஸ்ருதிகள் வாசியற வேதம் முழுவதுமாக பிரமாண சித்தமாக்கின மதம் விசிஷ்டாத்வைத ஸித்தாந்தம் அல்லது இராமானுஜ தர்சனம் என்று இதற்குப் பெயர்.

அராய்ந்து அருள் - திருச்செவி சாத்தியருள் என்பதாய் அமைந்த மாலை ’அருள் மாலை’ (௨).

24. இருபத்துநாலாம் பாட்டு - இன்று யாம் வந்தோம் இரங்கு - இரக்க மாலை:

’சேனையோர் உபயோர் மத்யே ரதம் ஸ்தாபய மே அச்சுதா!’ என்ற அர்ஜுணன் வார்த்தைப்டி நடந்த கண்ணனெம் பெருமான், அவனைவிட அதிக பக்தி யுக்தையளான ஆண்டாள் சொல்ல கேட்க மேட்டானோ? ’மே ரதயம் ஸ்தாபய அச்சுதா’ என்றதை ’மே அச்சுதா’ என்று கொண்டான் கண்ணன். அப்படியானால், அன்னன்யப்ரயோஜனை களான இவர்களுக்கு உகந்து கார்யம் செய்யத் தடை என்?

பிரேமத்தால் வந்த கலக்கத்தால், அஸ்தானே பயசங்கிகளாய், ரக்ஷகனான அவனை ரக்ஷ்ய வஸ்துவாய் நினைப்பிட்டு ’போற்றி’ பாடுகிறார்கள். மங்களாசாசனம் ஸ்வரூப விருத்தமன்றோ? என்று கேட்டுக் கொண்டு, ஸவ்ரூப பிரயுக்தமே என்கிறார் முடிவில் ஸ்வாமி பிள்ளை லோகாசாரியர்.

கதே-ஜல சேது பந்தனம் போலே, அதீதகால விருத்தாந்தங் களுக்கு, காலோத்தரத்திலே மங்களாசாசனம் செய்யப் புகுவது இவளுக்கும், இவள் தந்தையான பெரியாழ்வாருக்கும் தொழில் எனலாம். அன்றிவ்வுலகம் என்று முன் அவதாரங்களில் நடந்தவைக் எல்லாம், கண்ணன் இந்த அவரத்தில் செய்தானக்கக் கொண்டு ’உன்சேவகமே ஏத்திப்பறை கொள்வான் இன்றுயாம் வந்தோம்’ என்கிறார்கள். பூர்வாவதார அபதானங்கள் என்றாலும் அத்தை இந்த அவரத்தில், பூர்வாவஸ்தோசித கார்யம் என்றே நினைப்பு இவர்களுக்கு.

கிருபையினால் கிட்டுமவை களுக்கு பிரார்த்திக்கவும் வேண்டுமா? என்னில், போஜனத்துக்கு க்ஷுத்துப் போலே இச்சையை ஆவிஷ்கரிக்கை உத்தேஸ்யம். இவன் நினைவு அவன் அறியானோ? என்னில், இவன் பாசுரம் கேட்டவாறே அவன் உகக்கும், என்பது ஸ்வாமி பிள்ளை லோகாசாரியர் திருவாக்கு..

இன்று யாம் வந்தோம் என்பதை ’இன்றியாம்’ வந்தோம் என்பதாக பார்க்குமிடத்து - கர்ம-ஞான-பக்தி யோகங்கள் லவலேசமும் இல்லாதபடிக்கு - ஆகிஞ்சின்யத்தோடு வந்தமையைச் சொல்கிறது.

அவனுடைய இரக்கத்துக்கு விருத்தமாய்
உறங்குமவனை எச்சரப் படுத்துவது,
நாலடி நடக்கும் படியாய் விக்ஞாபிப்பது
இத்யாதி காரியங்கள் - அதிபிரவ்ருத்தியாய் முடியாது இருக்க, ’இரங்கு’ என்கிறார்கள், இந்த ’இரக்க மாலை’யில்.



25. இருபத்தஞ்சாம் பாட்டு - வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து - வருத்தம்தீர் மாலை :

வந்ததும், பல்லாண்டு பாடினதும் ஒன்றை பெற்றுப் போகவோ? என்னையும் வேண்டி, பறை என்றும் இதில் எதை உத்தேசித்து வந்தீகோள்? என்ன
பிரயோஜனாந்தர பரர்கள் போல் அல்லாமல், உன்னையே அருத்திது வந்தோம். பரமபதத்தினின்றும் எங்கள் இடம்தேடி வந்த உன்னை நாடி நாங்கள் வருவதில் என்னகுறை?
’துல்ய சீல வயோவிருத்த’ என்றபடி திருவுக்குத் தக்க உன்சீர்மையும், மூவாறு மாசம் மோகிக்கப் பண்ணும் உன் விக்ரமங்களையும் பாடுவதையே பிரயோஜனமாகக் கொண்டு வந்தோம்.
பறைதருதியாகில் - நோன்பை வியாஜமாக வைத்து வந்தோம். நாட்டாருக்காக பறை என்றுசொன்ன எங்கள் காரியம் செய்ய திருவுள்ளமாகில் இசைந்து செய் என்கிறார்கள் இப்பாட்டில்.

’தம்சேயம் அஶிதேக்ஷணா’ என்று இருவருக்கும் ஸாம்யம் பலபடி இருந்தாலும், கண்ணழகில் வந்தால், பிராட்டிக்கே உன்னதி. ’நாச்சியார் விழி விழிக்க ஒண்ணாதிறே’ என்பது பட்டர் திருவாக்கு.

திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி - ’நாரீணாம் உத்தமை’ யினுடைய அவஸ்தை வரக்கடவதான பரம பத பிராப்தியும், இருவருமான சேர்த்தியிலே செய்கிற கைங்கர்யம் இரண்டையும் பிரார்த்தித்து வந்தோம் என்றுமாகக் கடவது.

வருத்தம் தீர்கையாவது - நித்ய கைங்கர்யத்துக்கு தடையான சரீரம் விலகுகை, சம்ஶாரம் கழிகை அதன்றியும் மகிழ்வாவது, அவ்விருவரின் ஆனந்தத்தைக் கண்டு இவன் ஆனந்திக்கை.

”ஆத்யந்த துக்கத் துவம்ச: மோக்ஷம்” என்பது கைவல்யர்களுடைய ஸித்தாந்தம். ஶ்ரீவைஷ்ணவ ஸ்ம்பிரதயத்தில், வைகுண்டப் பிராப்தியோடு, நித்யசூரிகளோடே கூடி இருந்து பகவத், பாகவத கைங்கர்யத்திலே திளைக்கை, மோக்ஷம். அத்தை ஆண்டாள் பிரதிபாதிக்கிறள் இந்த ”வருத்தம் தீர்” மாலையில்.


26. இருபத்து ஆறாம் பாட்டு - ஆலின் இலையாய் அருள் - அருள் மாலை (௨) :

ஒருத்தி மகனாய் பிறந்த போது, தன் மேன்மை தோற்ற வந்து ’பிறந்தான்’. தோன்றினான் என்பதைக் காட்டிலும், பிறந்தான் என்று சொல்வதிலே அவனுக்கு ஆனந்தம். ஒருத்தி மகனாய் வளர்ந்தபோது, தன் நீர்மை, எளிமை எல்லாம் பிரகாசிக்கும்படி வளர்ந்தான் என்கிற மர்மம் அறிந்து பேசுகிறாள் ஆண்டாள் இதிலே.

”பிரம்மஸூத்திராதி” களிலே அவன் பிறந்ததாக பிரஸ்தாபமில்லை. பராசர மஹரிஷியும் ’தேவகி பூர்வசந்தியா ஆவிர்பாகம்’ என்று அவன் அலௌகிக கர்பவாசம் செய்த்தாகவேப் பேசினார். ’ஆயர் குலத்தில் தோன்றும் அணிவிளக்கை’ என்று ஆண்டாளும் கீழில் பாவுரத்தில் சொல்லி இருக்க, அத்தை மாற்றி ’ஒருத்தி மகனாய்ப் பிறந்து’ என்றபோதே கண்ணன் முகம் முகிழ்ந்ததாக வாயித்து. ’பிறந்தவாறும், வளர்ந்த்வாறும்...’ என்று ஆழ்வார் சாதித்தபடி இவளும் பேசலுற்றது அவனுக்கு மகிழ்வே.

ஆனால் கம்சனுக்கு பயந்து நந்தகோபருடைய திருமாளிகைக்கு ’காரிருள் எல்லில் பிழைத்து’ வந்தேனாக சொன்னது தவறு. உண்மையில் மதுரையிலிருந்து குடிபெயர்ந்தது ’ஜாத் யிடயனுக்குத்’ தான், கும்பக் கோனார் தன் பெண்ணான, நப்பினையை மணம் முடிது வைப்பதாக அறிவித்திருந்தார். முடியுடை யதுகுல பிறப்பால் அது சாத்தியம் அகாதென்பதற்குச் சேர, குழந்தை அழுது, பால்குடிப்பது போன்ற வியாபாரங்களை திருவாய்ப் பாடிக்கு வந்தபிறகே வைத்துக் கொண்டானானான். அன்றி கம்ச பயம் தனுக்கில்லை என விவரித்து பின் நீங்கள் வேண்டி வந்த பறைதான் ஏது என்ன, நோன்புக்கு வேண்டிய உபகரணங்களை தர பிரார்த்திக்கிறார்கள்.

என்னையே வேண்டி சாதனாந்தரத்திலே கைவைப்பதே? என்று அவன் வினவ, உன் சன்னிதி கிடைக்கும் என்று இசைந்தோம் அன்றி. இப்படி அனுமதிப்ரதானம் பண்ணினவர் பக்கல் கிருதக்ஞதா ஆசக்தியாலே அவற்றை தந்தருள வேண்டும் என்கிறார்கள்.

மாலே என்று தொடங்கி, ஆலின் இலை என்று முடித்த படியால், இப்பாட்டுக்கு விஷயம் ’மால்’. அதாவது, மாலே-விலுள்ள ’மா’ மற்றும் ’ஆல்’-லிலுள்ள ’ல்’ இரண்டுமாக, ’மால்’ எனவாயித்து. மால் என்பது அவனுக்குண்டான ஆஸ்ருத வியாமோகத்தைச் சொல்லும். தூத-சாரத்தியம் பண்ணின ஸௌலபியம், அருச்சுணன் தேர்த்தட்டிலே ’மாம்’ என்று தன்னை தொட்டுக் காட்டின ’ஸர்வசக்தி யோகம் ’ இரண்டும் இதுக்கு விஷயம்.

சரணாகதையளான திரௌபதிக்காக எல்லாம் செய்து, ஒன்றும் செய்யப் பெற்றிலேன் என வியசனிப்பதும், இத்தனை எளியனானாலும் ’கொல்லாமாக் கோல் கொண்டு, பாரதத்துள் எல்லா சேனையை அவித்ததும்’ அவனுடைய ’அகடித-கடனா’ சாமர்தியத்தாலே அன்றோ?

பல்லாண்டு பாடுகைக்கு பெரியாழ்வாரையும், மங்கல தீபத்துக்கு நப்பின்னை பிராட்டியயும், கொடிக்கு பெரிய திருவடியும், விதானத்துக்கு திருவநந்தாழ்வானையு மாக நித்திய விபூதி பரிகரங்கள் எல்லாரையும் கொடுத்து ஸ்வரூபம் நிறம்பெற செய்தவனுடைய ’அருள் மாலை’ இதுவாகும்.

27. இருபத்து ஏழாம் பாட்டு - கூடியிருந்து குளிர்ந்து - குளிர் மாலை :

கூடமாட்டேன் என்கிறவர்களை சௌரிய பராக்கிரமங்களாலும்,
அபிமுகர்களை சௌசீல்யாதி ஆத்மகுணங்களாலும்,
உதாசீனர்களை சௌந்தர்யாதி சரீரகுணங்களும் கொண்டு ஜெயித்தவனாகிறான் கண்ணனெம் பெருமான்.

ராமனுக்கு பட்டாபிஷேகம் என்று முடிவு செய்த தசரதன், அவனை அழைத்துவரக் கூற, சுமந்திரன் ராமனை திருமனையில் கண்டு செய்தி தெரிவித்தான். அந்தப்புர வாயில் வரை வந்த சீதையின் காலைத் தொட்டு ராமன் அவளை அங்கேயே நிற்கச் சொல்ல, பதிஸந்மாநிதையளான சீதை கறுமுகை மாலைபோல் தன் இருகண்ணாலே இராகவனுக்கு மாலையிட்டாள். அஶிதேக்ஷணை அல்லவா அவள். அப்படியான சன்மானம் தங்களுக்கு வேண்டும் என்கிறார்கள்.

ராவணவதம் ஆனபின்பு, அபிஷிக்தனாய் இருக்குகிற ராமன் கையில், தன் குடியிருப்பை பெற்றுத் தந்த உபகார ஸ்மிருதியோடே இந்திரன் ஓர்முத்து மாலையை பரிசளிக்க, அதனை அவன் தன் பாமினியான சீதையின் கையில் கொடுத்தான். அவளும் இங்கிதத்தால் புரிந்து கொண்டு, ஹிருஷ்ட மனத்தளாய் ஹநுமனுக்கு வழங்கினாள். அப்படிப்பட்ட பரிசு தங்களுக்கு வேண்டும் என்றும் விண்ணப்பிக்கிறாள் ஆண்டாள்.

அத்தைக் கொடுக்கும்போது, பாரோர்புகழம்படி அவை இருக்க வேண்டும் என்கிறார்கள் மேல். சுக-சாரணர்கள் ராமனின் வானர சேனையின் பிரபாவத்தை ராவணனிடம் ஒற்றர் வார்த்தையாக புகழ்ந்து சொன்னது போலேயும், தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் கிருஷ்ணனை அண்டைகொண்ட பலத்தால் பாண்டவகளுக்கே ஜெயம் என்பதை சஞ்சயன், திருதராஷ்டனுக்கு படிந்து சொன்னாப் போலேயும், நாடுபுகழும் பரிசு தங்களுக்கு வேண்டும் என்கிறார்கள்.

’மாறாளன் கவராத மணிமாமைக் குறைவிலமே’ (திருவா.௪-௮-௧) என்று ஆழ்வார் இரந்தது போல, கண்ணனைப் பிரிந்த காலத்திலே ’மலரிட்டு நாம் முடியோம்’ என்ற ஆண்டாளும், அவனை கூடியபோது பெற வேண்டிய பரிசுகள் இன்னவை என்று பட்டியல் இடுகிறாள் அடுத்து. சூடகம், தோள் வளை, தோடு, செவிப்பூ என்று கண்ணன் பிடித்த கைக்கும், அணைந்த தோளுக்கும், குழல் கொண்டு தூது விட்ட காதுக்குமாக அலங்கார அணிகலனும், பால் சோறு, கூறை இவையோடு கூடி இருந்து குளிர வேண்டும் என்கிறாள்.

இவர்கள் நீராட்டம் கூடி இருந்து குளிர்வதே. அன்றி திருமுக்குளத்தில் சென்று குளிப்பதோ, பால்சோறு உண்கையோ அல்ல. ”த்வதீக்ஷண ஸுதாஸிந்து வீசிவிக்ஷேப ஶீகரை:| காருண்ய மாருதாநீதை: ஶீதலை ரபிஷிஞமாம்||” என்பதே இவர்கள் நீராட்டம். அத்தை ’துணைத் தேட்டமாக’ அமையப் பிரார்த்தித்தாள். க்ஷுத்ர விஷயத்துக்குத் தனித்தேட்டம் போல், பகவத் விஷயத்துக்கு துணைத்தேட்டம் உத்தேஸ்யமே. ’அந்தமில் பேரின்பத்து அடியரோடு இருந்தமை’(திருவா.௧0-௯-௧௧) போலேயாம் மிது.


28. இருபத்து எட்டாம் பாட்டு - சித்த சாதன நிஷ்டை (துவய பூர்வ கண்டார்த்தம்) : ’ஸ்வநிகர்ஷ மாலை’ :

௧. பேற்றுக்கு உபயமக நல்லது ஏதும் எம்மிடம் இல்லை.
௨. அத்தை சம்பாதிப்பதற் கீடான ஞானமும் இல்லை என்கிற உபாயத்தில் சுத்தியுடையோம்.
௩. ஆர்ஜித ஸுக்ருதமில்லை ஆனாலும் அயத்ன-சித்த ஸுக்ருதமான கண்ணனே நீ! உள்ளாய்.
௪. எங்களாலோ, உன்னாலோ அல்லது இருவரும் கூட்டாகவோ ஒழிக்க ஒழியாத நவவித சம்பந்தமும் உள்ளபடியால்,
௫. பூர்வபராதங்களை, தட்டியில் வார்த்தைகளான நாராயண நாம ஸ்வீகாரத்துக்கும், ஸ்வாராத்யனை துராராத்யனாக காட்டினமைக்கும் மாகச் சேர்த்து க்ஷாமணம் வேண்டுகிற எங்களுடைய
௬. உபாய கிருத்யத்தை, புருஷகார பூதையான நப்பின்னையின் பேரில் ஏறிடாதே இறைவா! நீ தாராய் பறை என்று அர்த்திக்கிறாள்.

யக்ஞசிஷ்டாசநி என்கிற கர்ம யோகம்,
சாஸ்திர வஸ்யதை என்கிற ஞான யோகம் இரண்டும் இல்லை ஆனாலும்,
பும்ஸாம் நயதீயிதி புண்ய: என்கிற சாக்ஷாத் புண்யம் எங்களிடம் உண்டு.

கர்ம, ஞான யோகங்கள் கார்ய வேளையில் புருஷனையும், பல வேளையில் ஈஸ்வரனாகிய உன்னையும் எதிர்பார்த்து இருக்கும். நீயோ ஸ்வீகார வேளையில் புருஷனையும், புருஷகார பூதையான பிராட்டியையும் அபேக்ஷித்தாலும், கார்ய வேளையில் உபய-நிரபேக்ஷனாய் தானே கார்யம் செய்யக் கடவாய் - என்கிற சித்த சுத்தியும், கார்ய சுத்தியும் உடைய எங்கள் கார்யம் செய்துமுடிப்பாய் என்கிற ’ஸ்வநிகர்ஷ மாலை’ இதுவாகும்.


29. இருபத்து ஒன்பதாம் பாட்டு -கைங்கர்யப் பிரார்த்தனை (துவய உத்தர கண்டார்த்தம்)- பிராப்ய மாலை :

’பறை’, ’பறை’ என்று ஒன்பதுமுறை சொன்னதின் தாத்பர்யம் இதில் விளக்கப்படுகிறது .

௧. பிராப்ய ருசி இருக்க ஒட்டாதே விடியோரை வந்தோம்.
௨. பிராப்யமான திருவடியை பிராபகமாகவும் கொண்டோம்.
௩. கைங்கர்ய பிரதிசம்பந்தியான உனக்கு அத்யாபகை களானோம்.
௪. எங்கள் கண்ணிலும், முலையிலும், இடையிலும் அன்யபரதையை விலக்கி அதாவது ஞான, பக்தி, வைராக்கியங்களிலே தப்தனாகாதே, பிரியில் மூச்சடங்கும் படியான தரதன் போன்ற உறவும்,  சீதை, லக்ஷ்மணன் போல ’நாங்களும் அக்குளத்தில்’ மீனாக வேண்டும்.
௫. பரமபதத்தில் இருந்து எங்களைத் தேடி வந்த கண்ணனான உனக்கே நாம் ஆட்செய்வோம்.
௬. கைங்கர்யத்தில் களையாகிற ஸ்வபோக்த்ருத்வ புத்தியாகிற காமத்தைக் களைந்து  எங்கள் சேஷத்வம் நிறம்பெறச் செய்வாய் என்றும் நியமிக்கிறபடி இதுவாகும்.

உபேயத்தில் சுத்தியாகிற பரார்த்த-கைங்கர்யம் இவர்களுக்கு உத்தேஸ்யம். எம்முடைய ஆனந்தம், எமக்கும் உனக்குமான ஆனந்தம் என்றல்லாமல், உனக்கேயான ஆனந்தம் ஏற்படும்படியாக குற்றேவல்லளைக், ஏவிட்டு பணிகொள்ள வேணும் என்கிறாள் என்னவுமாம்.

”தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே” என்று ஆழ்வார் ’எம்மாவீட்டில்’ புருஷார்த்த நிஷ்கர்ஷம் பண்ணினபடியும் இதுவாகும்.

 அடுத் து :

கோவிந்தா - அகாரம்.
உனக்கே - ஏவகார சப்தத்தால் உகாரம்.
நாம் - மகாரம்.
பொற்றாமரை அடி - உபாய வாச்யமாய் ’நமஸின்’ அர்த்தம்.
உற்றோமேயாவோம், உனக்கே நாமாட்செய்வோம் - நாராயண பதம்.
மற்றைநம் காமங்கள் மாற்று - ஆய பதார்த்தம் என்கிற வின்யாசத்தாலே

பெரிய திருமந்ரார்த்தமும் இதுக்குள்ளே உண்டு என்பர்.

முதற் பாட்டில் ’நாராயணனே நமக்கே பறை தருவான்’ என்று ஸங்க்ரஹேண சொன்ன ’ப்ராப்ய-ப்ராபகங்கள்’ விவரிக்கப் பட்டன இந்த இரண்டு பாடல்களால். ’தூயோமாய் வந்து நாம்’ என்கற ௫ஆம் பாட்டு உபாயத்தில் சுத்தியும், ’தூயோமாய் வந்தோம்’ என்கிற ௧௬ஆம் பாட்டு உபேயத்தில் சுத்தியுமாக சொல்லப்பட்டவை, இங்கு மேலும் விளக்கப் பட்டன என்பதும் நோக்கத்தக்கன.

30. இனி பலஸ்ருதியான முப்பதாம் பாட்டு ’திருவருள் மாலை’ எனலாம்.

பலம், பிராப்யம் நமக்கு மிதுன சேஷத்வமாகையாலே, பிராட்டி ஸம்பந்தத்தையிட்டே உபஸம்ஹரிகிறாள் ஆண்டாள். பட்டர்பிரான் கோதை என்று தன்னை ஆசார்ய சம்பந்தத்தையிட்டும் நிரூபிக்கிறாள். ஈஸ்வரன் புருஷகாரமானால் அல்லது காரியம் செய்யான். ஆசார்ய சம்பந்தமோ நேரே பிராப்யத்தைப் பெற்றுத் தரும் என்பதற்கு ஆண்டாள் அவதார முடிவே நமக்கு நிதர்சனம்.

’செங்கண் திருமுகம்’ - பகவத் அனுக்ரஹம் தானும் ஸ்வாதந்ரியம் கலசினபடியாலே பயஹேது. பிராட்டி அனுக்ரஹம் கேவலம் கிருபை மட்டுமே.

செல்வத் திருமால் - திருமந்திரம், சரம ஸ்லோகம் இரண்டிலும் ஶ்ரீசம்மந்தத்தை ஸ்தான விசேஷத்தாலும், அர்த்த பலத்தாலும் தருவித்துக் கொள்ள வேண்டும். அப்படியல்லாமல் துவய பூர்வ, உத்தர கண்டங்களில் சொன்னபடியே இதில் பிராட்டி ஸம்பந்தம் சுஸ்பஷ்டம்.

எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் - பெரிய பிராட்டியாலே பேறாகையாலே-இவள் புருஷகாரமானால் அல்லது ஈஸ்வரன் கார்யம் செய்யான், ஆகையால், அவளுடைய வருளாலே ஸம்சாரதிலும், பரம பதத்திலுமாய் - பகவத் ஸாந்நித்யத்தைப் பெற்று இன்புறுவர் என்கிறாள்.

ஆண்டாள் இயற்றிய திருப்பாவை பாமாலையானது - பூமாலையும் ஆகக்கடவது என்று உபகிரமித்தது அர்த்த புஷ்டியோடே முற்றிற்று.

These are Excerpts from Vidwan U. Ve. Shri. Ilaya Villi S. BhoovarahachAr Swamy ThiruppAvai discourses held at Sri Ethugiri Yethi Raja Mutt, Bangalore-3 between 15-12-2013 to 14-01-2014. Compilation by:

--தாசரதி தாஸன், கிடாம்பி ஶ்ரீநிவாஸ ரங்கன் ஶ்ரீநிவாஸ தாஸன்.



Monday 30 December 2019

திருப்பாவை சாரம்

திருப்பாவை சாரம் -

பால வாகம்ருதவர்ஷி ஸ்ரீ. உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி உபன்யாசத்தில் முத்துக்கள்.

1. பேடிகா விபாகம். 

ஐந்தினோடு பத்துமொரு மூன்றும் பதியொன்றும்
தந்தநம் கோதை திருப்பாவை-- அந்தமோடு
ஒன்றுமாய முப்பதும் எப்போதும் செப்பவே
ஒன்றுமவள் பேறு நமக்கு.


முதல் பாசுரம் - ஆண்டாள் பஞ்ச நாராயண பிரதிஷ்டை :
ஸ்வாமி எம்பெருமானார் , கிருமிகண்ட சோழன் உபத்தரவம் பொறுக்க மாட்டாமல் மேல்நாட்டில் எழுந்தருளி இருந்த காலத்தில் பிட்டிதேவன் என்கிற விஷ்ணுவர்த்தனான ஹொய்சள மன்னரின் உதவியோடு
தலக்காடு கீர்த்தி நாராயணன்
தொண்டனூர் நம்பி நாராயணன்
மேலகோட்டை திரு நாராயணன்
பேலூர் கேசவ நாராயணன்
கடக் வீர நாராயணன்
என்பதான பஞ்ச நாராயண க்ஷேத்ரங்களை பிரதிஷ்டாபித்தார் என்பது வரலாறு. கோயில் அண்ணரான இராமானுஜர் எவ்வழி அவ்வழியில் தங்கையான ஆண்டாளும் இந்த பாசுரத்தில்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் நாராயணன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம் நாராயணன்
கார்மேனி நாராயணன்
செங்கண் நாராயணன்
கதிர் மதியம் போல் முகத்த நாராயணன்
ஆகிய பஞ்ச நாராயணர்களை பிரதிஷ்டாபனம் பண்ணுகிறாள் என்பதை யுக்தி ரசத்தோடு பார்க்கலாம்.


கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் ->
திருமந்திரார்த்த பிரதனான ஆச்சாரியனைச் சொல்லும். எப்படி என்றால் தனக்கு விதேயனாக இருக்கிற கண்ணனெம்பெருமானை ரக்ஷிக்க வேண்டி , கூரிய வேலை பிடித்தவன் நந்தகோபன். ஆசாரியனும், பகவத் ரக்ஷண தத்பரர் ஆகையால், பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையர். இருடைய மங்களாஸாசன தத்பரத்தையே இவர்கைவேல். திருமந்திரம் இவருக்கு விதேயமாய் சிஷ்யனுடைய ஆத்ம ரக்ஷணத்தில் காரியம் செய்கையாலும், நந்தித்தவமும் கோப்திருத்வமும் இவருக்கும் உண்டு ஆகையால் நந்தகோபன் குமரன் நாராயணன் என்றபடி.

ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம் நாராயணன் ->
என்பது கண்ணியாக உள்ள துவய மந்திர பிரதிபாத்யன் நாராயணன் என்றபடி. கண்ணனுடைய பிரதாபங்கள் எல்லாம் யசோதை இடத்திலாய், அவள் கண்வட்டத்துள் நின்று அகலாது முந்தாணையில் முடியாலாம்பட்டி இருக்கிற தன்மைகொண்டு - ஆசாரியன் கைபுகுந்தவாறே திருமந்திரம் கை புகுரும் என்ற கணக்கிலே மந்திரத்துக்கு உள்ளீடான வஸ்துவான நாராயணனைச் சொல்லுகிறது இத்தால்.

கார்மேனி நாராயணன் ->
என்றது மேகத்தைப்போல் இன்னார் இனையார் என்று பார்க்காது , அவர்கள் இருக்கிற இடம் சென்று வர்ஷிக்கிற வர்ஷாகால மேகத்தைப்போலேயான ஒளதார்யமும், சௌலப்யமும் சொல்லிற்று. நீர் அந்த்ரேண சம்ஸ்லேய : என்று மழைநீர் அது விழுகிற இடத்தின் தன்மையை - செம்மண் பூமியானால் செந்நிறமும், பால்நிற பூமியானால் பால் நிறமும் பெறுவதுபோல - ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாது உம்பி எம்பி என்று தோழமை கொண்டதும், மாடு கன்றுகளோடும், இடையர்களோடும் பொறையற கலக்கின்ற சௌசீல்யகுணத்தையும் சொல்லிற்று எனலாம்.

செங்கண் நாராயணன் ->
என்றது செவ்வரியோடிய நீண்டவப் பெரியவாய கண்கள் என்று ஸ்வாமிதவ, ஸ்ரீமத்வ சூசகங்கள். மையகண்ணாள் என்று பிராட்டியையும், செய்யக்கோல தடங்கண்ணன் என்று ஸ்ரீரயப்பதித்தவமும், ஸ்ரீமத்வமும் இறே இவனுக்கு நிரூபணங்கள். இந்த ஸ்வாமித்வ, சௌலப்ய, சௌசீல்யாதிகள் அல்லவோ ஆஸ்ருத ஆஸ்ரயண சௌகர்ய ஆபாதக குணங்கள்?

கதிர்மதியம்போல் முகத்த நாராயணன் ->
என்றது தண்ணளியும், பிரகாசமும் ஒருங்கேயான ஸ்வாமிதவ, சக்தி சாமர்த்தியாதி களுக்கு உப லக்ஷணம். இவை ஆஸ்ருத காரிய ஆபாதக குணங்களாய் நாராயண ஸப்தார்த்த குண போக்யதைகளையும் சொல்லிற்று.
அப்படிப்பட்ட நாராயணனே
மந்திரத்திலும், மந்திரத்துக்கு உள்ளீடான வஸ்துவிலும், மந்திர பிரதனான ஆசாரியன் பாக்கலிலும் பிரேமம் கனக்க உண்டான நமக்கே
ஸ்வரூபனுரூபமான கைங்கர்யமாகிற பறை தருவான் என்கிறது இப்பாசுரத்தில்.

4. ஊழி முதல்வன் :

பொன்னை மெழுகொற்றி தேற்றுமா போலேயாய்
தன்னைக் கொடுதரணி எல்லாமும் -- முன்னைபோல்
தான்தோற்று மஃது சமநோக்கே! ஊன்உயிர்
கண்ஏற்றல் ஆம்தனி நோக்கு.

நாராயணனே நமக்கே பறை - தண்டுழாய் நமகன்றி நல்கான் - தனி நோக்கு - (விஷம) வியஷ்டி ஸ்ருஷ்டி
நாமும்-நாங்கள்-நாங்களும் மார்கழி நீராட - பொது நோக்கு - ஸமஷ்டி ஸ்ருஷ்டி.



5. தூயோமாய் வந்து தூய பெருநீர் தூமலர் தூய் :

தன்கைகால் மெய்வாயும் கொடுஅளைந்த காளிந்தி
போன்கரணம் மூன்றும் கொடுகண்ணன் -- தன்நினைவால்
எண்ணம் மொழிசெய்கை ஒன்றிச் செய்கிரியை
வண்ணம் அழகியபூ நாறு.



6. பிள்ளாய் :
கற்றதன்றி உற்ற தவன்னடியார்க் காள்எற்றோ ?
பெற்ற பரமன் நமைஉடைத்தாய் -- மற்றையார்
விற்கவும் பாற்றென போக்க இசைந்தது
ஏற்கை நமஎன்பார் சாற்று.

7. கலந்து பேசின பேச்சரவம் :

வதரிவான் வைகுந்தம் பார்த்தன்தேர் முன்னாய்
கதிரொளி மால்கண்ணன் கேசவனன் -- றோதிய
மெய்மைப் பெருவார்த்தை ஒவ்வொன்றும்
மால்மாறன்
வாய்மொழிக் குள்ளாதல் கொள்ளு.


8. வந்து நின்றோம் :

காசை இழந்தவன் பொன்னை இழந்தவன்
ஆசை மணியை இழந்தவன் -- பேசநின்ற
மால்நிற்க பத்தர் பரவுவார், வீடணன்போல்
கோல்கொழுந்த தற்றே அவர்.

9. பாகவத ஸம்பந்தம் ஸ்வதந்திரோபாயம்:

இருகால் விலங்கு இறகுடை பட்சி
ஒருகால் திருமால் அடியார் -- அருள்நோக்
கிலக்கதேல் ஞான மநுட்டான மில்லா
நிலையரேனும் சேரும்மால் வீடு.

9. மாமான் மக்களே :உனக்கேநாம் ஆட்செய்வோம் என்று தொடங்கி
உனக்கும் உனதடிய ராவார் — தமக்குமாய்பின்
மாலே! உனதடியார் பாலேயாய் கோலுமது
ஏலுவதும் என்கொள் குறிப்பு?

ஆசார்ய ருசி பரி கிருஹீத பகவத் சேஷத்வத்திலே இழிந்தவாரே பகவத்பாகவத கைங்கர்யமாகிற ஈரஅரசு படுதல் தேட்டமேலும் அதுக்கு எல்லை நிலமான ததீயத்வேக சேஷனாகை எப்பிரார்க்கு இனியவாறே.


10. ஆற்ற அனந்தல் :

ஆறும் அடைவும் அவன்தாள் எனவாகக்
கூறும் நினைவும் உறுதியும் -- பேறெனத்
தேறி அதன்வழி வாழுநற் சோம்பர்
உறவும் முறையும் விழைவு.

11. பொற்கொடி :

தனக்கும் பிறர்க்குமாய் அன்றி உறவு
எனக்குநீயே அன்றோ? எனவாய் — புனக்காயா
மேனி புனிதன் புணர்தியில் ஆம்உணர்த்திக்
கானகூட்டு மாலடியார் மாட்டு.


12. மனத்துக்கினியானை அனைத்தில்லத்தாரும் அறிந்து :
பெண்ணுக்கும், பேதைக்கும் ஞானபக்தி கார்மிகர்க்கும்
நண்ணித் தொழுவார்க்கும் நண்ணல் — விழையார்க்கும்
அண்ணல் இராமா நுசனை இராமனும்போல்
எண்ண இனிக்கும் உளம்.


மண்டோதரி, தாரை, சூர்பணகை ஆகிய பெண்களின் மனத்துக்கு இனியர் பெருமாள் .
திரிபுராதேவி, கொங்கில் பிராட்டி, திருக்கோளூர் பெண்பிள்ளை ஆகிய பெண்சிஷ்யைகள் மனத்துக்கு இனியர் ராமாநுசர்.

பேதையர்களான வானர ஜாதிக்கும், பட்சி ஜாதியான ஜடாயுவுக்கும், திர்யக்கான அணிலுக்கும் மனத்துக்கு இனியர் பெருமாள்.
பேதையான ஒரு ஊமையின் தலையில் தன்திருவடி ஸ்பர்சம் செய்வித்து இனியரானார் ராமாநுசர்.

சத்யேந லோகாந் ஜயதி, தானேந தீன : என்று சகல மநுஜ மனோஹாரி பெருமாள்.
ஞானிகளை ஶ்ரீபாஷ்யம் கொண்டும், பக்தர்களை சரணாகதி சாஸ்திரம் கொண்டும், அநுஷ்டான பிரதராய் கர்மயோகிகளுக்கும் ஸ்வஜன பிரியர் ராமாநுசர்.

அன்னு சராசரங்களை வைகுந்தத்து ஏத்தி என்று சாமான்யர்களுக்கு இனியர் பெருமாள்.
ஆசை உடையோர்க்கெல்லாம் ஆரியர்காள் கூறுமென்று வரம்பறுத்த பெருமாளாய் ஜகதாசார்யர் ஆனார் ராமாநுசர்.

சத்ரு சைன்ய பிரதாபர் என்கிற விருது பெற்ற பெருமாள் ராவண, மாரீசாதிகளின் புகழ்சிக்கு விஷயமானவர் பெருமாள்.
அப்பொழுது ஒரு சிந்தை செய்து- யாதவபரகாசன், யஞ்ஞமூர்தி போன்ற பரபக்ஷ வாதிகளை சிஷ்ய பிரந்தமாக்கிய மனத்துக்கு இனியர் ராமாநுசர்.

இப்படி அனைத்து கொத்துக்கும் இனிய நற்செல்வன் ராமாநுசர். அவர் தங்கையான ஆண்டாள் கோயில் அண்ணர் பிரபாவம் பேசினபடி இது.


13. கீர்த்திமை பாடிப் போய் :
ஆறும் பயனுமாய் தேறாது பாடிப்போம்
பேறு அதுவேயாய் கந்தல் -- கழிந்தமை
கூறு மொருநாலும் மூன்றும் இரண்டும்வான்
ஏற பரமனைப்போய்ப் பாடு.

அறம், பொருள், இன்பம், வீடு என்கிற புருஷார்த்த சதுஷ்டய கோஷ்டிக்கும்;
அர்த்தார்த்தி, ஜிக்ஞாஸு , ஞானிகளாகிய கோஷ்டி திரயத்துக்கும்;
முனிவர்களும், யோகிகளுமாகிற நித்ய, முக்த உபய கோஷ்டிக்கும்;
உண்ணும் சோறு பருகு நீர் எல்லாம் கண்ணன் - என்று ஆழ்வாருக்கு திருக்கோளூர் எம்பெருமானும் என்னில் முன்னம் பாரித்து தான் என்னை முற்றப் பருகினானான் என்று காட்கரையப்பனுக்கு ஆழ்வாருமாக அனன்ய சாபீஷ்ட்டா கோஷ்டிக்கும் உத்தேஸ்யம் இதுவேயாய் 
இங்குத்தையார்க்கு பகவத் ஸன்னதிக்கு (திருப்பாவை ) பாடிப் போகையே பிரயோஜனம். அங்குத்தையார்க்கு பகவத் முக்கோலாசகர கைங்கர்யனுவர்தனமாகிற - போய்ப் (சாமகாயம்) பாடுகையே பிரயோஜனம்.


16. நென்னலே வாய் நேர்ந்தான் :
கூடி இருந்ததாம் காலத்து கண்ணன்தான் 
தேடி உரைத்தவையே கொண்டுயாம் -- நாடிவந்தோம் 
நாயகநீ! கைநீட்டி ஆகாதென் ஓவாதே 
நேய நிலைக்கதவம் நீக்கு. 

பூ வராஹன் வார்த்தை - அஹம் ஸ்மராமி மத் பக்தம் - நாராயணனே நமக்க பறை என்கிற உபேய புத்தி  அத்யவசாயத்தோடே வந்தோம்.
பெருமாள் வார்த்தை - தவாஸ்மி இதீச யாசதே ததாம் ஏதத் விரதம் - பரமனடிப்பாடி பாகவதேக உபாய புத்தியோடே வந்தோம்.
கீதாசார்யன் வார்த்தை - அஹம் துவா மோக்ஷ இஷ்யாமி மாஸுச : - நெய்யுண்ணோம் பாலுண்ணோம் என்று  உபாயாந்தரங்களை விட்டு வந்தோம்.
இப்படி பேற்றுக்கு துவரிக்கையும், உபய உபேய நிஷ்டையாகிற தூய்மையோடே வந்தோம் என்றவாறு. 

விபவாவதார எம்பெருமான்கள் மட்டுமல்லாது, அர்ச்சாவதார பெருமாள்கள் மொழிந்தமை கேட்ட வந்தோம் என்பதை 
நம்பெருமாள் வார்த்தை - அத்ரைவ ஸ்ரீரங்கே ஸுகமாஸ்வ - நீராட என்று பகவத் ஸம்ஸ்லேஷத்தையும், பாடி என்று மங்களாசாஸன தத்பரதையோடே ஸாலோக, ஸாமீப்ய ஸாயுஜ்யத்தை ஆஸாசித்து வந்தோம். 

மலையப்பன் வார்த்தை - தொண்டை மன்னவன் திண்திறல் ஒருவருக்கு வளங்கொள் மந்திரம் அருளிச் செய்தவாறு - திருமந்திரத்தில் உள்ள நம பதத்தை பூர்வ உத்தர ஸ்தானாதிகளில் வைத்து பார்க்கிற வகையில் 
ஓம் நம :
நமோந் நம :
நாராயணாய நம :
என்ற கணக்கிலே 
நாராயணனே நமக்கே (1) என்றும் 
நாராயணன் மூர்த்தி (7) என்றும் 
நாற்றத்துழாய்முடி நாராயணன் (10) என்றும் 
ஸ்வ சேஷத்வம் , அன்ய சேஷத்வம் கழிந்தவர்களாய் பகவத்தேக சேஷர்களாய் பாடிக்கொண்டு வந்தோம். 

தேவப் பெருமாள் ஆறு வார்த்தை - நாகணைமிசை நம்பரர் செல்வர் பெரியர் சிறுமானிட்டவர் நாம் செய்வதென் வில்லிபுத்தூர் கோன் விட்டுசித்தன் வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே - என்ற கணக்கில் பகவத் வசனங்களே யானாலும், கபிலாவதாரம், புத்தாவதாரம் போன்ற ஆழ்வார் ஆசார்யர்கள் கைக்கொள்ளாத உபதேசங்களை கழித்து, எம்பெருமானார் மதித்த வார்த்தை என்று கொண்டு - உய்யுமாறு எண்ணி வந்தோம். 

இன்னும் திருமாலிருஞ்சோலை மலை அழகர் வார்த்தை - ராமானுஜ சம்பந்திகள் அகதிகள் அல்லர் என்றும், அவருடைய திருவடி சம்பந்தம் போலே  திருமுடி சம்பந்தமும் உத்தாரகம் என்பதை வெளியிட்ட படியே ராமானுஜ அனுயாயிகளாக - தனித்த தேட்டமாக அல்லாது, துணைத் தேட்டமாக வந்தோம்.

நாதமுனிகள்  யோக சாஸ்திரத்தை குருகை காவலப்பனிடம் வைத்துப் போக்கி, பிரபன்னாம்ருதமான திருவாய்மொழி மற்றும் ஏனைய ஆழ்வார்கள் பாசுரங்கள் 4000மும் அர்த்தத்தோடே நம்மாழ்வாரிடம் பெற்றபடி உய்யக் கொண்டார் பக்கலில் கொடுத்து மணக்கால் நம்பி, ஆளவந்தார் வழி 74 மதகுகளைக் கொண்ட வீராணம் ஏரியைப் போன்ற எம்பெருமானார் வரை சேர்த்த கணக்கிலே சாதன பக்தியைக் கழித்து, சித்தோபாயமான கண்ணனையே நாடி 
விபவத்திலும், அர்ச்சையிலும் கண்ணன் தான் வாயமலர்ந்தருளிய படிக்கும்.
ஆழ்வார் ஆச்சார்யர்கள் காட்டிக் கொடுத்த படிக்குமாய் வந்தோம் வந்தோம் .

தூமலர் தூவித் தொழுது என்று உபாய புத்தி தியாகமும்  
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான் என்று உபேயத்தில் களை அறுக்கையுமா
நீராடம் - பாஹ்ய கரண சுத்தி 
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க  - ஆந்தர சுத்தி 
ஆகிற தூய்மையோடே வந்தோம்.

நீ நேய நிலைக் கதவம் நீக்கு - என்று துவார சேஷிகள் காலில் விழுகிறாள் ஆண்டாள். 


17. அறம் :
அம்பரமே தண்ணீரே சோறே அறம்கண்ணன்
எம்பெருமான் தம்மின் இரக்கமும் -- அம்மனோய்!
செம்மைசேர் நற்தருமம் என்றாக செய்தவேள்வி
தன்மையார் நற்பேறும் அஃது.

வஸ்திர தானம், தீர்த்த தானம், அன்ன தானம் என்று வேண்டியவர்களுக்கு அத்தை கொடுத்ததைப் போல்
தாரக போஷக போக்கியம் எம்பெருமான் கண்ணன் என்றிருக்கிற எங்களுக்கு அவனைத் தந்தால் ஆகாதோ?
என்கிறார்கள்.
சாதன தர்மங்களைக் கொண்டு கண்ணனை அடைகையிலும், சித்த தர்மமான கண்ணனைக் கொண்டே அவனை அடைகை உத்தேச்யம். அவனைக் கொண்டு அவனை அடையாகிறது, அவனுடைய கிருபை வாத்சல்யத்துக்கு இலக்காகை.
ந சமஸ்ய கஸ்ச்சிது அப் அதிக குதோந்யோ? என்கிற ரீதியில், தனக்குத்தானே பிரதிபந்தியாய், தன்னை ஆஸ்ரயித்துள்ள குணங்களுக்கு இடையில் போட்டி இருந்தால், வெல்லுகிற குணம் தயையும், இரக்கமும் ஆம்.

ரக்ஷிக்கும் போது அதற்கு பிரதி பந்தகங்களான புண்ய பாபங்களைத் தொலைத்தே ஸ்வீகரிக்கிறான் இஎம்பெருமான் என்பது புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் சாம்யம் உபயிது - என்பதிலிருந்து தெரிகிறது. அப்படி புண்ய பாபங்களை கழித்தலாவது
ஈஸ்வரன் அவைகளை
தன் அஜ்ஞானத்துக்கு விஷயமாக்குகையும்
காணாக் கண் வைகையும் என்பர்.
இப்படி கிருபை உயர்ந்து, அவனுடய ஞானத்துக்கு - அஜ்ஞானமாகிற கொத்தை தோஷமன்றோ என்னில்
அநிருஸம்சயமடியாக வருகிற எதுவும் அடிக்கழஞ்சு பெறும் .

ஆக , அதுவே பற்றாசாக சரணாகதியை அனுட்டித்தவர்கள் - செய்த வேள்வியராய், சித்த தர்மம் கை புந்தவாறே, சாதன தர்மங்கள் பார்த்தியாஜ்யமோ என்றால்? அன்று. பகவத் ப்ரீதிகாரித்த முக்கோலாச கார்யம் கைங்கர்யம் என்று பகவத் ஆநிருஸம்சயத்துக்கு விஷயமாய்
வர்ண தர்மம்,
புருஷ தர்மம்
புத்ர தர்மம்
ஆகிய
சாமான்ய
விசேஷத்தர
விசேஷதம
தர்மங்களை விடாதே பாலாபிஸந்தி இன்றி, கிருஷ்ணார்ப்பணம் என்கிற அளவிலே அனுஷ்டித்துப் போர வேண்டுவது அவஸ்யாபேக்ஷித்தம் என்பதே இப்பாசுர ஸ்வாபதேசம்.


17. எம்பெருமான் நந்த கோபாலன் :
சுள்ளிக்கால் அன்ன அடியார் அவர்தலைவர்
உள்ளம் பெரியதன் போதமுடன் -- எள்ளிநமைத்
தள்ளாதே கொள்ளும் தகைமை கொழுகொம்பாய்
வள்ளிமேய பந்தல் கிடத்து.

உந்து மத களிற்றன் பாசுரம் பிராட்டியின் புருஷகார வைபவம் சொல்ல வந்தது. நாயகனாய் நின்ற பாசுரத்தில் துவார சேஷிகளின் அனுமதியை பெறுவதன் மூலம் ஸ்தாநீகர்களை முன்னிட்டார்களாய் , பின் அம்பரமே தண்ணீரே பாசுரத்தில் நந்தகோபன், யசோதை, நம்பி மூத்த பிரான் இவர்களை வேதம் வல்லார்கள் என்ற கணக்கிலே அவர்களையும் முன்னிட்டுக் கொண்டு கண்ணனை துயிலெழுப்ப பார்க்க, அது பிராட்டி புருஷகார வனந்தரம் மாகவேண்டி, அவனும் வாளா கிடந்தான் .

தூதோஹம் என்று சொன்ன திருவடி, பிராட்டி தரிசனவனந்தரம்  தாசோஹம் என்றதும் அவள் ராவணன் விஷயமாக செய்த மித்ர ஒளபயிதம் கர்த்தும் ஸ்தாநம் பரீப்ஸதா என்கிற உபதேசங்கள் அவனுக்கு பலித்ததாக கண்டில்லையாயினும்  - கண்ணனெம்பெருமான் தேர்த்தட்டில் சொன்ன வார்த்தை அருச்சனர்க்கு பலிக்காமல் -மாயன் உரைக்கிடக்கும் உள்ளத்து எனக்கு (நான்முகன் திருவந்தாதி-50) என்று திருமழிசை ஆழ்வாருக்கு  எப்படி காரியகரமாயித்தோ - அதுபோல ஹநூமானுக்கு சேஷத்வ ஸ்வரூபத்தை உண்டாக்கி பரீஷ்வங்கோ ஹநூமத : என்று ராம ஆலிங்கன பல பர்யந்தமாயிற்று.

பிராட்டி சன்னதியாலே காகம் தலை பெற்றது. அதில்லாமையால் ராவணன் மாண்டான் - இத்யாதி பிரபத்தி தர்மங்களை மீறியதான
தங்கள் தவற்றை ஆண்டாளும் கோபியர்களும் உணர்ந்து , கிருஷ்ணாவதாரத்தில் புருஷகார பூதையாக விளங்குகிற நப்பின்னை பிராட்டியைத் துயில் உணர்த்துகிறார்கள் இதில்.

இப்படி இந்த மூன்று பாசுரங்களுக்குமான சங்கதி அமைத்திருக்க, மூன்றிலுமே நந்த கோபனை பிரஸ்தாபித்தாளாய்
நாயகனாய் நின்ற நந்த கோபன் (16)
அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும் எம்பெருமான் நந்த கோபாலன் (17)
உந்து மதகளிற்றன் ஓடாத தோள் வலியன் நந்த கோபாலன் (18)
என்பதாக அழைக்கிறாள் ஆண்டாள்.
எம்பெருமான் கண்ணன் வகுத்த சேஷியாய் இருக்க, நந்த கோபனை எம்பெருமான் என்றது, பகவத் சமாஸ்ரயணசாலியான ஆசார்ய கிருதயத்தைக் பண்ணுவிப்பதைக் கொண்டு. தேவு மற்று அறியேன் என்று இருக்கிற மதுரகவி, வடுக நம்பி நிலையில் நின்றவர்களுக்கு ஆச்சர்யனே பிரதம சேஷி அன்றோ?
நந்தன் என்றால் ஆனந்த வர்த்தகன். பகவத் குணானுபவ கைங்கர்யங்களில் எப்போதும் ஆழ்ந்தவர்களுக்கு ஆனந்தத்தில் குறைவு இல்லையாய் நந்திதர் ஆவர் இவர்.
கோபன் ரக்ஷகன். தன்னை ஆஸ்ரயித்தவர்களுடைய ஆத்ம க்ஷேமத்தில் ஊன்றி இருப்பவராய், மங்களாஸாசனத்துக்கு அவர்களை ஆளாக்கும் இவருக்கு ரக்ஷகத்வம் ஸ்வாபாவிகம்.
அடுத்து , அம்பரமே, தண்ணீரே,சோறே அறம் செய்யும் நந்த கோபாலன் என்றது
அஹமன்னம் அஹமன்னம் என்பதான ஆத்ம வஸ்துவை சோறாக பகவானுக்கு சமைக்குமவர். அப்படி
எனக்காராவமுதாய் எந்தவியை இன்னுயிரை
மணக்காராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டொழியாய்
என்று போக்கிய உண்ணும்போது விக்கித் தடுமாறினால் தண்ணீர் குடிப்பதுபோல, பிராப்பியத்திலே வந்தால், என்னுடைய ஆனந்தத்துக்காக என்கிற ஸ்வபோக்த்ருத்வ புத்தியை விலக்குமவர்.
உண்டு பசியாறி அடைக்காய் திருத்துவது போலே , தேக விலக்ஷண சின்னங்களான ஆடை அலங்கார மேனிமினுக்கம் அம்பரம் - அவையும் பகவானோட்டை உண்டான ராஜகுல மாஹாத்மியத்துக்காக என்னப் பாந்தம்.
இன்னும், உந்து மதகளிற்றன் ஓடாத தோள் வலியன் நந்தகோபன் என்றது
அகங்கார செருக்காகிற மதம் கொண்டு வாதிட வரும் பரபக்ஷ வாதிகளுக்கு
சளைக்காத ஞானாதிகர் ஆசாரியன் என்பதாக கிருஷ்ணனோடு தங்களை சேர விடுதலாகிற கடக்க கிருத்யம் செய்ய வேண்டி நந்த கோபரை, ஆச்சாரியனாகவே ஆண்டாள் காட்டினபடி இவை.


19. குத்து விளக்கு :
தன்னையும் காட்டிபுறச் சூழலும் காட்டுவதாம்
மின்னனய நல்விளகு போல்ஆசான் -- துன்னிருள்
நம்மின் துறத்துவனேல் அன்னை அவளுணர்த்த
தம்மின் வழிநடத்தும் மால்.

உன்னுடைய மைத்துனனை எங்கள் மணாளன் ஆக வேண்டும் படியாய் விசிறி கண்ணாடி அத்தோடு தந்து எம்மை நீராட்ட வேண்டும் என்று நப்பின்னை பிராட்டியை பிரார்த்திப்பதாக அமைந்த பாசுரம். மாஸுச : என்றிருக்கிற பவனுடைய அபய ஹஸ்தம் தாமரைக் கை என்றால் அவன் ஸ்வாதந்திரனாய் வந்தாய்ப் போல் வாராதான் ஆனபடியால் அதற்கு அஞ்ச வேண்டா என்கிற பிராட்டியினுடைய கை செந்தாமரைக் கை ஆனபடி.
கேசவன் தமர் பதிகத்தில் ஆழ்வார் - மாசதிர் இது பெற்று நம்முடைய வாழ்வு வாய்கின்றவா - என்றதும்
ஸ்வ பிரயத்னத்தால் பகவானைக் கிட்டுவது இளிம்பு.
பாகவதேக உபாய நிஷ்டராய் அவனுடைய கிருபாதிசயத்தாலே அவனைக் கிட்டுவது சதிர்.
மா - பிராட்டி. அவள் கொடுக்கப் பெறுவது மாசதிர்
என்று காட்டினபடி உக்கமும் தட்டொளியும் தந்து உன்மணாளனையம் தந்து இப்போதே எம்மை நீராட்டு என்று பிராட்டி பரிகாரமாய் நின்று பேசுகிறாள் ஆண்டாள்.

கோதா கீதையான திருப்பாவையும் - ஸ்ரீ கிருஷ்ண கீதையாம் பகவத் கீதையைப் போன்ற அமைப்பைக் கொண்டு இருப்பது அதற்கான சிறப்பு. அதுதான் எங்கனே என்னில்?
குத்துவிளக்கு எரிய - ஞானம் பிரஜ்வலிக்கிறது என்ற பொருளில் ஒளி இருந்தால் இருட்டு போய்விடும். இங்கு சொல்லப்பட்ட இருட்டுதான் - அகவிருளும், புறவிருளும் . இத்தை போக்க
பொய்கையாழ்வார் ஏற்றிய விளக்கு - வருத்தும் புறவிருள் மாற்ற
பூதத்தாழ்வார் - இறைவனைக் காணும் இதயத்திருள் கெட
பேயாழ்வார் - கோவலூள் மாமலராள் கண்டமை காட்டும்
மூவர் ஏற்றிய ஜ்ஞான விளக்கு.

கீதாசார்யன் காட்டும் சோபான படிக்கட்டில்
படிக்கட்டு - 1
பகவத் ஸாட்சாத்காரத்துக்கு பிரதிபந்தகமாக உள்ள இதயத்திருள் கெட
நியதம் குரு கர்மத்வம் கர்ம ஜ்யாயோ ஹ்யகர்மண : - கீதை 3.8.
அப்படி கர்மாநுஷ்டானங்களை விடாது செய்யச்செய்ய
கர்மயோகத்தில் வருவதற்கான - தேஹ அதிரிக்த ஆத்ம ஞானம்
மாகிற ஓடம் அநாதிகால பாபமாகிற கடலை தாண்டுவிக்கும்.
ஜ்ஞான ப்லவேநைவ வ்ரிஜினம் ஸந்தர்ஷயஸி - கீதை 4.36.
ஓடம் மறுகரைக்கு மீண்டுவிடுமோ என்று பயந்தாயே ஆகில்
ஞாநாக்னி ஸர்வ கர்மாணி பஸ்ம ஸாத் குருதே ததா - கீதை 4.37.
இல்லை அர்ஜுனா - அதே ஜ்ஞானம், அக்கினியைப்போலே பாபா கூட்டத்தைப் பஸ்மமாக்கிவிடும்.
எல்லா பாபங்களையும் என்றால், பக்தியை ஆரம்பிக்க தடையாய் யாயா பாபங்கள் உள்ளனவோ அவை அனைத்தும் என்று பொருள் கொள்ள வேண்டும்.
படிக்கட்டு - 2
யதா தீபோ நிவாதஸ்தோ நேங்கதே ஸோபமா ஸ்ம்ருதா
யோகிநோ யதசித்தஸ்ய யுஞ்ஜதோ யோகமாத்மந : - கீதை 6.19.
எப்படி காற்று வீசாத இடத்தில் தீபமானது அசையாது நின்று ஒளிவிடுமோ அதுபோல
விஷயாந்தர சுகத்தில் மனது லயிக்காத படிக்கு ஆத்ம விஷயத்தில் மனதை உறுதிபடுத்த வேண்டும்.
படிக்கட்டு - 3
ஜ்ஞாநாஞ்சன சலாகையா ஸக்ஷுர் உன்மீலனம் - ஆசார்ய உபதேசம்.
அதற்கு ஆத்ம சிந்தனம் மட்டும் போதாது. ஆத்ம ஜ்ஞானம் பகவத் ஜ்ஞானமளவாக வளர
ஆசார்ய உபதேசங்களாகிற திறவுகோல் கொண்டு ஜ்ஞானக்கண்ணை திறந்து கொள்ள வேண்டும்.
அதற்கு ஆச்சார்ய ஸந்நிதி அவசியம்.
அடுத்து பகவத் விஷயத்தில் ஜ்ஞானம் மேன்மேலும் வளர ஆசார்யா அநுவர்த்தனம் பண்ணக் கடவதாய்
தத்வித்தி பிரணி பாதேந பரி பிரச்நேன சேவையா
உபதேஷ்யந்தி தே ஜ்ஞானம் ஜ்ஞானிந : தத்வ தர்ஸிந : - கீதை - 4.34.
என்கிற கீதையின் வழியிலேயே ஆண்டாளும்
செய்யும் கிரிசைகள் கேளீரோ என்று
நாட்காலே நீராடி
செய்யாதன செய்யோம்
தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
என்பதாக கீதையில் சொல்லப்பட்ட நியதம் குரு கர்மத்வம் என்பதை பேசினாள்.
அதை ஆத்ம வித்தையோடு செய்ய வேண்டும் என்பதையும்
நாராயணனே நமக்கே பறை - என்கிற உபாய-உபேய அத்யாவசாயம் சொன்னபடி.

கர்மாநுஷ்டானங்களால் அநாதிகால கர்ம வாசனா ரூபமான பாபங்கள் கழியும் என்பதை
போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் என்றாள்.

இனி ஜ்ஞானம் பகவத் விஷயமளாவாக வளர
அஜ்ஞானம் குறைந்து ஜ்ஞானம் வளர வேண்டும் என்பதை வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று என்றும் ,
பாபம் குறைந்து புண்யம் வளர வேண்டும் என்பதை செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பினகாண்
என்று பேசினாள் ஆண்டாள் .
தவிரவும், பகவத் விஷயத்தில் ஜ்ஞானம் மென்மேலும் வளர ஆசார்யா அநுவர்த்தனம் பண்ணக் கடவதாய்
பாசுரம் 16-17-18 களில் கடக கிருத்யரான நந்தகோபரைப் பற்றி பிரஸ்தாபித்தாள். பாசுரம் 18-19-20 களில்
நப்பின்னையை புருஷகாரமாக பற்றி கண்ணனோடு சேர்ப்பிக்க பிரார்திக்கிறாள். இங்கு உள்ள சுவாரஸ்யம் என்ன வென்றால், பாசுரம் 18-ல் ஆசார்ய சம்பந்தமும், புருஷகார பிரபத்தியும் சேர்த்து சொன்னதுக்கு தாத்பர்யம் ஆசார்யன் ஆஸ்ருதரான நமக்கு ஆத்ம-பரமாத்மா விஷயமான ஜ்ஞானத்தை கிளப்பி விடுவதை போலே, புருஷகார பூதையான பிராட்டி
பகவன் நிக்ரகத்தை அனாஸ்ருந்தார்கள் விஷயத்தில் மடை மாற்றி, ஆஸ்ருதர்கள் விஷயத்தில் ஸ்வாதந்திரியம் தலை சாய்ந்தால் தலை எடுக்கும் குணங்களை கிளப்பி விடுகிறாள் - என்பதான கிருபை இருவருக்கும் பொதுவானதாய்க் கொண்டு.


மேலும்
தமேவ சரணம் கச்ச ஸர்வ பாவேந பாரத - அந்த நாராயணனையே சரணமாக பற்று என்று கண்ணன் சொல்ல , அர்ஜுணன் - கண்ணன் இவன் தானே நாராயணன், அந்த நாராயணனை பற்று என்கிறானே - என்று குழம்ப அதை விலக்கவே பின்பகுதியில்
மாமேகம் சரணம் விரஜ - என்று பேசினான்.


ஆனால் ஆண்டாளோ - நாராயணனே நமக்கே பறை தருவான் என்றும் உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் - உனக்கே நாமாட் செய்வோம் என்றும் ஸு ஸ்பஷ்டமாக பேசினாள்.
இங்கு சாந்தோக்யம் 4வது பிரபாடகத்தில் உள்ள உபகோஸல விதை பிரகரணத்தில் சொல்லப் பட்ட
ஜாபால - உபகோஸல விருத்தாந்தம் ஸ்மரிக்கத்தக்கது .
ஆசாரியரான ஜாபாலர் சிஷ்யனான உபகோஸலனுக்கு பிரஹ்ம வித்யை பூர்ணமாக உபதேசிக்காமல் காலம் தாழ்த்த , பிள்ளைக்கு ஆசார்யானுகிரகம் ஏற்படவேயில்லையே என்று ஏக்கம் பிறந்து தவிக்க, இடையில் ஆசாரியன் காரியாந்தரமாக வெளியூர் சொல்ல வேண்டி வந்தது. எனவே சிஷ்யனிடத்தில் அக்நி சந்தானத்தை ஆராதித்துக் கொண்டு காத்திரு என்று சொல்லி பயணத்தில் உத்தியுக்தரானார். சிஷ்யப்பிள்ளைக்கு சோறு தண்ணீர் செல்லாமல் , ஆசார்யன் நியமித்த கைங்கர்யத்தை நடத்திப் போர , ஆச்சார்ய பத்நி விசாரித்தும் நிலைமை சீர்படாது போக, நித்ய ஆராத்ய அக்நி தேவதை மூவரும், பிள்ளைக்கு இரங்கி தாங்கள் சில அர்த்தங்களை உபதேசித்தனர்.
பிராணன் தான் பிரஹ்மம்.
அந்த பிரஹ்மத்துக்கான ஸ்தானம், அதை அடைய உண்டான கதி இது விஷயமாக
அக்நி தேவதைகள்
க(1)ம் பிரஹ்ம - சுகம் = பிரஹ்ம ஸ்வரூபம் ஆனந்தம்.
க(2)ம் பிரஹ்ம - ஆகாசம் = பிரஹ்மம் அபரிச்சின்னம் .
யதேவஹ க(1)ம் ததேவ க(2)ம்.
யதேவ க(2)ம் ததேஹ க(1)ம்
என்று பிரஹ்ம ஸ்வரூபத்தைச் அக்நி தேவதைகள் சொல்லி நிற்க,
அந்த பிரஹ்மத்தை அடையஅவன் ஸ்தானத்தை
உபாஸிக்க உபயுக்தமான அவன் குணத்தை
அவனை அடைவிக்கும் கதி
இவை பற்றி சொல்ல வேண்டும் என்று பிள்ளை கேட்க
ஸம்யக் வாமநத்தவம்
வாமநீத்தவம்
பாமநீத்வம்
அக்ஷி புருஷன் பிரஹ்மம் என்பதாக
முதல் இரண்டுக்கு விளக்கம் ஓரளவு சொல்லி
ஆச்சார்ய ஸ்துதே கதிம் வக்தா - என்று மார்க்கத்தை ஆச்சர்யனிடம் உபதேசமாய் பெற்றுக்கொள் என்று சொல்லி நிறுத்தினர். திரும்பி வந்த ஆச்சர்யனிடம் நடந்தத்தைக் கூறி, மார்க்கமான அர்ச்சிராதி கதியை உபதேசமாகப் பெற்றான் உபகோஸலன் என்பது சாந்தோக்யம்.

கீதை 1-6 அத்யாயம் ஆத்மோபாசனம்
7- 12 அத்யாயம் கர்மத்தால் வளர்ந்த ஜ்ஞானத்தால் வந்த பக்தி உபாசனம்.
அந்த பக்தி வளர்வதற்கான பகவத் ரூப, குண, ஒளதார்யங்களைப் பற்றி
தேஷாம் ஸதத யுக்தாநாம் பஜதாம் ப்ரீதி பூர்வகம்
ததாமி பக்தி யோகம் யேந மாம் உபயாந்தி தே - கீதை 10.10.
தேஷாமேவ அநுகம்பார்த்தம் அஹம் அஜ்ஞான ஜந்தமஹ
நாசயாமி ஆத்ம பாவஸ்த : ஜ்ஞான தீபேன பாஸ்வதா - கீதை 10.11.
-என்னுடைய அழகான திருமேனியை அவர்கள் உள்ளத்துக்கு விஷயமாக்கி குணாநுபவத்தை வர்த்திப்பித்து, கர்ம வினை பாசம் கழற்றுகிறேன்.
ஸ்தானம், குணம், கதி என்று மூன்று விஷயங்கள் போலே ஆண்டாளும் அம்பரம், தண்ணீர், சோறு என்பதாக சொல்லி உபகோசலனுக்கு அருளியமூன்று அக்நி போலே இவர்களுக்கு அருள நந்தகோபனை மூன்று முறை பிரஸ்தாபித்து, கீழே சொன்ன விளக்குகளைக் காட்டிலும் பிரஜ்வலமான விளக்கு, பகவத் ஸ்வாதந்திரியமாகிற இருட்டு களைய , நப்பின்னை பிராட்டியாகிற விளக்கு என்பதாக இந்த பாசுர ஸ்வாபதேசம்.

20. உன்மணாளனைத் தந்து :
மைத்துணன் உன்மணாளன் மாலோலன் மாலரையன்
மையகண்ணி நாதன் திருவுக்கும் — ஐய
திருவான செல்வன் மலராள் தனத்தன்
ஒருவன் அவன்தா எமக்கு!


21. ஏற்ற கலங்கள்:
ஏதிலார் எம்மனோர் ஆதரித்து ஆசரியன்
ஈதானாய் அல்பா வதிஆயுள் -- போதில்
பொழுதறிந்து போற்றி அலகில் தருமம்
விழைந்துகேட்ப்பார் ஏற்ற கலம்.

சிஷ்யன் தன் சரீரம் வஸு விஞ்ஞானம் அனைத்தையும் அதாவது சரீரம் அர்த்தம் பிராணம் ச ஸத்குருப்யோ நிவேதயேத் என்று ஆசாரியனுக்கு சமர்ப்பித்து அவர் கைகாட்டிகிற இடத்தில் அவருக்கு பிரதிநிதியாய் இருந்து அவருக்கு அளித்த மிச்சத்தில் ஜீவனம் நடத்துவதாக பாவிக்க வேண்டும்.அங்கனே ஆசார்யன் தானும் சிஷ்யனுடைய ஆத்ம உஜ்ஜீவனத்தில் உத்யோகிக்கும் போது தன்னை ஸ்வ-ஆசாரிய சிஷ்யனாய் , தன்சிஷ்யனை ஸபிரம்மசாரியாய் நினைத்து பரிமாற வேண்டும் .
இதுவே சத் பாத்ர சத் வினியோக ஏற்ற கலத்துக்கான லக்ஷணம். மாறாடி நினைகை அவத்யமாம்.

இப்படி குறைந்த ஆயுசில் அனைத்தும் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற பேராசையோடே ஸுக பிரம்மத்திடம் பரீக்ஷித்து ஸ்ரீமத் பாகவதமும் ;

வைசம்பாயனரிடம் ஜனமேஜயன் மஹா பாரதமும் ;

ஸ்ருத்வா தர்மான் அஸேஷேண என்று தர்மங்களை கேட்பதில் விருப்பம் உடையவனாய் பீஷ்ம பிதாமஹரிடம் யுதிஷ்டிரர் விஷ்ணு ஸகஸ்ரநாம அத்தியாயமும் ;

மைத்ரேயர் கேள்விகள் கேட்க கேட்க விஷ்ணு புராணம் விரிந்தார்ப்போல், ஒருத்தருக்காய் சொன்னது ஊருக்கய் பராச மஹரிஷியிரிடம் மைத்ரேயர் விஷ்ணு புராணமும்;

தான் கிருபணன். சிஷ்யஸ்தேஹம் சாதிமாம் பிரபும் என்று கீதாரியனிடம் அர்ஜுணன் பகவத் கீதையும்;

ஆழ்வாருடைய மைத்ரேய பகவான் ஆயிற்று அவருடைய அவா என்று பரபக்தி, பரஜ்ஞான, பரம பக்தி இன்னும் சாதன பக்தி, சாத்திய பக்தி, சகஜ பக்தி கொண்டு அவருடைய பிரபந்தம் வளரக் காரணம் அவருடைய பகவத் பிரேமமாகிற காதல் - பயன் அன்றாகிலும் பாங்கல்லர் ஆயினும் - நெஞ்சில் நிற்கப்பாட்டி - முயல்கின்றேன் உன்தன் மொய்கழற்கு அன்பையே என்கிற கிருதஜ்ஞதை யோடே நம்மாழ்வாரிடம் மதுரகவி ஆழ்வார் பெற்ற திருவாய் மொழியும் ;

நின்றனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே - என்று பேசிய திருமங்கை ஆழ்வாரிடம் , தான் பெரியவாச்சான் பிள்ளையாகவும் , ஆழ்வார் கலிகன்றிதாஸர் என்கிற நம்பிள்ளையாகவும் பிறக்க - அவரிடம் சிஷ்ய விருத்தி பண்ணி பிரபந்தங்கள் நாலாயிரத்துக்கும் பொருள் கேட்டு உபகரித்த திருக்கண்ணமங்கை பத்தராவி பெருமாள் போலேயும்

கேட்டவர்கள் அனைவரும் ஏற்ற கலங்கள் என்றாலும் ராமனுக்கு விஸ்வாமித்திரரும், கிருஷ்ணனுக்கு சாந்தீபினியும் ஆசார்யனாக கிடைத்தபோது அடைந்த அபூர்த்தி

பெரிய பெருமாள், நம்பெருமாள் இருவரும் கண்ணனும், ராமனுமாய் மணவாள மாமுனி பக்கல் துவயார்த்த விவரணியும் தீர்க்க சரணாகதி பிரபந்தமாயும் இருக்கிற திருவாய்மொழி ஈடு காலக்ஷேபம் பண்ணினார்களாய்,

தாம் அவருக்கு சிஷ்யனான தன்மைக்குச் சேர பகுமானமாக தன்னுடைய
சேஷாபீடத்தையும்
ஸ்ரீசைலேச தனியனும் ஸமர்ப்பித்து
அவருடைய திருவத்யயன உற்சவாதிகளை நடத்திப் போருவர்களாய்

எதிர் பொங்கி மீதளித்த பிரபாவம் மேல் சொன்ன மற்றய யாருக்கும் இல்லை என்றே சொல்லலாம்.





பதரியிலே தானே ஆச்சாரியனுமாய், சிஷ்யனுமாய் திருமந்திரத்தை வெளியிட்டருளினது போக , மாமுனிகள் பக்கல் ஆசார்ய பிரதிபத்தியோடே , சிஷ்யன் இருக்கும் இருப்பை நாட்டாருக்கு காட்டிய - ஏற்ற கலத்துக்கு - ஸத்தான திருஷ்டாந்தம் பெரிய பெருமாளே எனலாம்.


22. செங்கண் :
கழிவிரக்கம் காட்டி கழித்தன போக்கி
அழல விழித்து அகல்விப்பான் -- பாழே
பலபல செய்து புகல்அயல் இல்லா
புலையனேர்க்கு அங்கண் அருள்.

அ-கார வாச்ய சமாகமத்துக்கு ஆறு படிக்கட்டு :
ஈஸ்வரஸ்ய ஸௌஹார்த்தம்
எதுர்ச்சா ஸுக்ருதம்
விஷ்ணோர் கடாக்ஷம்
அத்வேஷம்
ஆபிமுக்யம்
சாது சமாகமம்
அதில் நடுவாக உள்ளது விஷ்ணோர் கடாக்ஷம். கதிர் மதியம் போல் முகத்தான் என்று தொடங்கி செங்கண் சிறிச்சிறிதே எம்மேல் விழியாயாவோ என்று கடாக்ஷ வீக்ஷண்யத்தை பிரார்த்திக்கிற படி இது. தேய்தல், வளர்தல், ராகு-கேதுவால் பீடித்தல் இவை உள்ள சூரிய-சந்திரர்கள் அவனுடைய திருக் கண்களுக்கு நேர்கொடு நேர் ஒவ்வார் என்று தெளிந்து, ’செங்கண்’ என்றே சொல்லி ”தத்-தஸ்ய சதுர்சம்” ஆக்குகிறாள். அங்கண் இரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல் எங்கள்மேல் சாபம் இழிந்து என்று பிராப்பிய விரோதி கழிக்கையும் இனி மேலில் பாட்டுகளில் வெப்பம் கழிந்து கூடி இருந்து குளிர்தலும் சொல்லுகிற படி. போற்றியாம் வந்தோம் புகழ்ந்து என்று இருப்பதால் இது ஒரு புகழ் மாலை.

காப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ - என்பதாக எம்பெருமான் செங்கண்ணுக்கு உபமானமாக தாமரையை சொல்லுகிறது சாந்தோக்யம் ;
அவனுடைய கண்ணுக்கு உபமானம் இட்டுச் சொல்லுகை என்பது அதனை அழகாக்குமத்தனை. உபமானம் நேர் நில்லாமையாலே உபமேயம் தன்னை விசேஷிக்கிறது.

தன்னுடை பூர்வபக்ஷ கிரந்த வாசிப்பின் போது இந்த வாக்யத்திற்கு யாதவ பிரகாசர் சொன்ன அபார்தத்தைக்க கேட்டு கலங்கி , பகவத் ராமானுஜர் காட்டுகிற விசேஷார்த்தம் இங்கு நோக்கத்தக்கது :
கப்யாஸம் = கபி + ஆஸம் = சூரிய மண்டலத்தை இருப்பிடமாக உள்ள பிரஹ்மத்தை உபாஸ்யமாக சொல்வது போல, புண்டரீகம் போலேயான அக்ஷிணியை இருப்பிடமாக உள்ள பிரஹ்மம் உபாஸ்யம் என்கிறது . கப்யாஸம் என்பதற்கு உபாசன ஸ்தானம் அர்த்தம் என்கிற முதல் யோஜனை இங்கு சேராது.
கபி + ஆஸம் - கபி = குரங்கு பிருஷ்டம் , புண்டரீகம் என்று உபமான துவயமும்; உயர்ந்த பிரஹ்மத்துடைய திருக்கண்களுக்கு தீன உபமானமும் கூடாது ஆகையால் இந்த இரண்டாவது யோசனையும் தள்ளுபடி.
ஈஷத் விகசித = சிறிதளவு மலர்ந்த என்று பொருளும் சரிப்படாது. அவன் மலங்க விழித்தால் நம்மால் தரிக்கப்போகாது. அத்தாலேயே ஆண்டாள் செங்கண் சிறுச்சிறிதே சாத்மிக்க சாத்மிக்க எம்மேல் விழியாவோ என்கிறாள்.
ஸ்வாமி எம்பெருமானார் காட்டுகிற அர்த்தமோ ஆழ்வார்கள் திருவாக்கை அடியொற்றித் தந்த விளக்கமாகும்.
கம்பீரம்பு சமத்பூத (1) ஸுவிருஷ்ட நாள அஸ (2) ரவி கர விகசித (3) புண்டரீக தள அமலஆயத ஈக்ஷணம் என்பதாக சொல்லுகிற அழகு - ஈதோர் அற்புதம் கேளீர் என்று வாய் வெறுவத் தகும்.


23. சீரிய சிங்காசனத்து இருந்து : நடுவிலாச்சிக் கீத்த படுக்கை அறைவார்த்தை
காடேற வாயித்தால் கண்ணா! -- அடிசியோம்
காண நடந்துஅரி ஆசனத்தே வீற்றிருந்து
வேணுமவை ஆய்ந்து அருள்.

ஸவ்யம் பாதம் பிரசரித துரித ஹரம் தக்ஷிணம் குஞ்சையித்வா
ஜாநூன் ஆதாய ஸ்வே இதர புஜம் நாக போகே நிதாய
பஸ்சாத் பாகுத்துவயேன பிரதிபட ஸமநே தாரயந் சங்கசக்ரே
தேவி பூஷாது ஜூஷ்டோ விதரது ஜகதாம் சர்ம வைகுண்ட நாத :
என்று பரமபதத்திலான அமரிகை காண அங்குற்றோம் அல்லோம்
வைதேஹி ஸகிதம் ஸுரத்ரு முதலே ஹைமே மஹா மன்டபே

அரியணை அனுமன் தாங்க அங்கதன் உடைவாள் ஏந்த
பரதன் வெண்குடை கவிக்க இருவரும் கவரி பற்ற
விரைசெறி குழலி ஓங்க வெண்ணையூர் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி.
என்று பட்டாபி ராமனாய் இருந்தமை அப்போதுற்றோம் அல்லோம்

எனவே இப்போது எமக்காக நாலெட்டு நடை நடந்து வந்து உன் நடை அழகையும்
சீரிய சிங்காசனத்தில் வீற்றிருக்கும் அழகையும்
நம்பெருமாள் நமக்கு திருமாமணி மண்டபத்தில் சேர-பாண்டியன் ஒலகத்தில்
அமர்ந்தமை காட்டி, யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருள் என்கிறார்கள்.


24. அஞ்சு குடி :
அன்புடை ஆழ்வார்கள் போற்றி எனஏற்றி
நன்குடனே நாளும் வழுத்துலும் -- இன்னும்
பெரியாழ்வார் அஞ்சாமைக் காட்டியதுக் கஞ்சும்
பெருமைஆண் டாளுக்கும் உண்டு.

பிறர் நன்பொருளான ஆத்மபகரம் திருட்டு. பொருள் சரீம். நன்பொருள் ஆத்மா. பிறர் நன் பொருள் பகவானுடைய சொத்தான ஆத்மா. இந்திரனுடைய சொத்தான மூன்று லோகங்களை மஹாபலி தன் சொந்தமாக்கினான். அதை மீட்க அன்று திருவிக்கிரமனாய் மூன்றடி மண் கேட்டு, இரண்டடியால் அளந்து கொண்டதோடு, மூன்றாவது அடியால் துரபிமானகள் தலையில் கால் வைத்து அவர்களையும் தனதாக்கிக் கொண்டு தளிர் பொறையும் திருவடி என் தலைமேலவே என்று அபிமானம் களைந்தான்.
அடிபாடி என்று தொடங்கி, அடிபோற்றி என்று இடையில் இந்த பாசுரமும், பொற்றாமரை அடியே போற்றும் பொருள் என்று முடிவிலுமாய் ஆண்டாள் மங்களாசாசனம்.
அளந்து தன்னதாக்கிக் கொண்டதால் ஸ்வாமித்வம் பிரகாசிக்கிறது. ஸ்வம் = சொத்து.
தளிர் பொறையும் திருவடி தலை மேலவே என்றதால் சேஷித்வம் பிரகாசிக்கிறது.
உலகமளத்த பொன்னடியே அடந்துய்ந்தேன் அணிபொழில் திருவரங்கத்தம்மானே என்றதால் சரண்யத்வம் பிரகாசிக்கிறது.
உழலை இன்ப பேய்ச்சி முலையூடவள் உயிருண்டவன் கழல்கள் அவையே சரணாகக் கொண்ட என்றும்
நாகணைமிசை நம்பிரான் சரணே சரண் என்று நாடொறும் ஏக சிந்தையனாகி என்றும் தன்னைத் தவிர்ந்த வேறு ஒன்றையும் சகியாத நிரபேட்சோபாயத்வம் சொல்லிற்று.
தாவி வையம் கொண்ட தடந்தாமரைகட்கே கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ? என்று ர்த்தித்தவம் பிரகாசிக்கிறது. தடந்தாமரை தாள் என்று சொல்லாமல் தடந்தாமரைகட்கே என்று உபமானத்தை சொல்லி உபமேயத்தை சொல்லாமல் விட்டது முற்றுவமை என்கிற ஸ்வாரஸ்யம் இங்கு நோக்கத் தக்கது.
சதுமுகன் கையில் சதுப்புஜன் தாளில் சங்கரன் சாடையினில் தங்கி வருகிற - விஷ்ணு பாதோதகமாகிற
கங்கை கங்கை என்ற வாசகம் கொண்டு கடுவினை காளையலாமே - கண்டமென்னும் கடிநகர்-தேவபிரயாகை பாசுரம் இதில் பாவனத்வம் பிரகாசிக்கிறது.
உன்வையம் தாய மலரடிக்கீழ் முந்தி வந்து முகப்பே கூவிப் பணிகொள்ளாய் என்று பரிச்சர்யம் பிரார்த்திக்கிறது .
தாளால் அளந்த அசைவேகொல் ? பின்னும் தன்வாய் திறவான் நீளோதம் வந்தலைக்கும் மாமயிலை மாவல்லிக்கேணியான் ஐந்தலைவாய் நாகத் தணை - என்று சிரமிஸித திருவடிகளை ஆஸ்வாஸ படுத்த அலை அடிப்பதாக ஆழ்வார்.
தீர்த்தன் உலகளந்த சேவடிமேல் பூதாமம் சேர்த்து அவையே சிவன் முடிமேல் தான் கண்டு பார்த்தன் தெளிந்ததொழிந்த பைந்துழாயான் பெருமை - என்று பரத்வ சூசகம் .
மாமுதல் அடிப்போது ஒன்று கவிழ்த்தலர்த்தி மண்முழுதும் அகப்படுத்து ஒண் சுடர் அடிப்போது ஒன்று விண்செலீஇ நான்முகப் புத்தேள் நாடு வியந்துவப்ப வானவர் முறை முறை வழிபட நெறீஇ தாமரை காடு மலர்க்கண்னொடு மலர்க் கனிவாய் உடையது போல் இரு ஞாயிறு ஆயிரம் மலர்ந்தன்ன கற்பக காவு பற்பல வன்ன முடிதோள் ஆயிரம் தழைத்த நெடியோர்க்கல்லதும் அடியதோ உலகே? - என்கிற மாதுர்யம், அழகு பேசப்பட்டது.
இப்படியான உன் விக்கிரமங்களுக்கு அன்று பல்லாண்டு பாடாத குறை தீர, இன்று யாம் வந்தோம். அறுசுவை அபதானங்களுக்கு ஆறு முறை போற்றி சொல்லி வந்த எங்களுக்கு நீ இரங்க வேண்டும் என்கிறார்கள். அதவா
அவனுடைய இரக்கத்துக்கு விருத்தமாய்
உறங்குமவனை எச்சரப் படுத்துவது,
நாலடி நடக்கும் படியாய் விக்ஞாபிப்பது
இத்யாதி காரியங்கள் - அதிபிரவ்ருத்தியாய் முடியாது இருக்க, ’இரங்கு’ என்கிறார்கள்,


25. ஒருத்தி மகனாய்ப் பிறந்து :
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் கருமவினை
கூற பிரிவினை இங்காகல் -- மாறமால்
தானும் பிறந்து இருமை வினைத்தீர்துப்
பேணும் கருணை பெரிது.

ஜன்ம கர்மச மே திவ்யம் யோ வேத்தி தத்வத : என்றும்
அப்யுக்தானம் அதர்மசஸ்ச ததாத்மாநம் ஸ்ருஜாம்யஹம் என்றும்
தேவகி பூர்வஸந்தியாயாம் ஆவிர்பூதம் மஹாத்மநா என்றும்
தாஸாம் ஆவீரபூத் பூமௌ ஸ்வயமான முகாம்புஜ : என்றும்
பகவான் ஸ்ரீ கிருஷ்ணனுடைய அவதாரத்தை உயர்வான வார்த்தைகளால் ஸ்ரீ கிருஷ்ணன் தானும், ரிஷிகளும் பேசி இருக்க, ஆண்டாள் அவன் பிறந்தமையை மநுஷ்யர்கள் பிறப்பைப் போலே கூறல் தகுமோ? என்னில்

ஆவிர் பூதம்
பிராதுர் பூதம்
என்பதற்கு மறைந்து இருந்தவன் வெளிப்பட்டானாக, தோற்றினதாக பொருள் படும். இல்லாதது உண்டாகாது. இருப்பதுதான் புலன்களுக்குத் தோற்ற புலப்படும். பூ = ஸத்தாயாம் என்று இருப்பைச் சொல்லி, ஆவிர்பூதம், பிராத்துர்பூதம் என்று வெளிப்படுதலைச் சொல்லுகிறது.

மாறி மாறி பல பிறப்பும் பிறந்து என்பது ஜனி = ஜாயதி என்ற பொருளில் பிறப்பு என்றாகிறது. எனவே அர்த்தத்தை வைத்துப் பார்க்கில், இருவருடைய பிறப்பும் வெளிப்படுகை அன்றி உண்டாகுகை இல்லை. என்றானால் நம்முடையது பிறப்பு, அவனுடையது அவதாரம் என்பது ஏன்?

இருப்பு இருவருக்கும் பொது. எப்படி இருக்கிறார் என்று கேட்டுக் கொண்டால் இருவருமே ஜ்ஞான, ஆனந்த ஸ்வரூபத்தோடே இருக்கிறார்கள் என்றே சொல்லலாம். இதுவரை ஸாம்யாப்பத்தி போல தோன்றினாலும் , ஆத்ம பரமாத்ம ஸ்வரூபத்தில் தாரதம்யம், மற்றும் ஆத்ம தத்வங்களிடையே தாரதமயத்துக்கும் ஹேது இன்னும் வேறு சில குணங்கள் காரணம். அவற்றில் இருவர் பிறக்கைக்கும் பிரதான காரணம் பகவானுடையது கிருபை. நம்முடையது கர்மம்.

பூ ஸத்தாயாம் என்று இருக்கும் நாம் கர்மத்தால் பாதிக்கப் பட்டு வெளிப்படுவது பிறப்பு.
பூ ஸத்தாயாம் என்று இருக்கும் அவன் கிருபையால் உந்தப்பட்டு கண்களுக்கு புலப்படும்படியாக வெளிப்படுவது அவதாரம் (அ)
ஆவிர்பூதம் . இப்படி இருவர் வெளிப்படுகைக்கும் பிரயோஜனம் , நம்முடையது சேர்த்து வைத்த, சேர்த்துக் கொள்கிற புண்ய, பாபங்களை அனுபவிக்க (அ) நஷ்டமாக்கை . அவனுடையது நம்மை தன் கிருபைக்கு இஷ்டமாக்கை .
நீள் கடல் சூழ் இலங்கைக் கோன்
தோள்கள் தலை துணிசெய்தான்
தாள்கள் தலையில் வணங்கி
நாள்கள் கடலை கழிமினே .

ஜனனோ ஜன ஜன்மாதிஹி பீமா பீம பராக்கிரம :
இருவரும் ஜன என்பது பொதுவானாலும், அவர் ஜனன : -> கர்ம பாரவஸ்யத்தால் நமக்கு சரீரத்தை கொடுத்து பிறப்பிக்குமவர். தவிர
ஜன -> ஜனங்களின்
ஜன்மம் -> பிறப்புக்கு
ஆதி -> நிமித்தம் (அ) பிரயோஜனம்
பகவான்கிற அவர்தான். ஆக, நம்முடைய பிறப்புக்கு பிரயோஜனம் அவரை அடைவது . அவருடைய பிறப்புக்கு பிரயோஜனம் ஜனங்களைத் திருத்திப் பணிக்கொள்வது.
இப்படி கர்மா கழிந்தபின் உண்டாகிற ஜ்ஞான ஆவிர்பாவத்தை உபநிஷத்
ஸதா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் ஸாம்யம் உபயிதி - என்றும்
அஸ்மாது சரீராய ஸமுத்தாய பரம்ஜியோதிர் உபஸம்பத்ய ஸ்வேந ரூபேண அபிநிஷ்பத்யதே - என்றும்
கர்மம் தொலைந்து ஜ்ஞானம் விகசித்து பக்குவமான சக்கரைப் பொங்கல் பிரசாதம் போலே இவன் விளங்க அத்தை அவன் ஆனந்தமாக விநியோகம் கொண்டு களிப்பிக்கிறான்.
இது நடத்தவே ஒருத்தி மகனாய் அவன் பிறந்து என்கிறாள் ஆண்டாள்.


26. மாலே : ஆர்த்தி பூர்த்தி :
சரணமானால் வைகுந்தம் சேர்வழக்கு கொண்டு
மரணமானால் மேவப் பெறுவதூம் -- ஆரணமால்
ஊழ்வினை நம்போக்க மற்றபற்று அற்றராய்
சூழ்வினை அவனடியார் காத்து.

ஆலின் இல்லையாய் - பரத்வம்.
மாலே - சௌலப்யம்.
மணிவண்ணா - சௌந்தர்யம்.
ஸ்ரீ ராமாயணத்தில் எப்படி சரணாகத வத்சலத்வம் ராமனுடைய பிரதான குணமோ, அதுபோல மஹா பாரதத்தில் கிருஷ்ணனுக்கு பிரதான குணம் ஆஸ்ருத வியாமோகம் என்பது .
நாராயணன்
ஓங்கி உலகளந்த உத்தமன்
தேவாதி தேவன்
என்று கீழே பரத்வத்தை பிரஸ்தாபித்த ஆண்டாள், 25 வது பாசுரம் வந்த வாறே
வந்து தலைப் பெய்த்தோம் ; வந்து நின்றோம்; இன்று யாம் வந்தோம்; யாம் வந்த காரியம் - என்று இவர்கள் தாங்கள் வந்தமைக்கு இரங்கு என்று சஹேதுகமாய் சொல்லி வந்தவர்கள், அத்தை மாறி
ஆலின் இலையாய் அருள்
என்று நிர்ஹேதுக மாக்கினர்.
வேண்டி தேவர் இரக்க வந்து பிறந்ததும் வீங்கிருள்வாய்
ஈண்டு அன்றன்னை புலம்பப்போய் ஓர் ஆய்க்குலம் புக்கதும்
காண்டலின்றி வளர்ந்து
என்கிற படியே - க்ஷீராப்தியிலிருந்து மதுரைப்போந்து, அங்கிருந்து திருவாய்ப்பாடிக்கு தான் வந்த வரத்தை கணிசித்தார்கள் இல்லையோ என்று கண்ணன் வாய் திறவாமல் இருக்க
நாராயணனே நமக்கே பறைதருவான் என்று ஸ்வயத்ன ராஹித்யம் சொன்னவர்கள் தாங்கள் வந்தமை உபாயமாக நினைப்பிட்டனரோ என்று உதாசீனனாகவும் இருந்தமை போக்கி
உன்னை அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில் என்று அனன்ய பிரயோஜனர்களாக வந்தார்களே என்று வியாமுக்தனாய் அது மணியின் நீரோட்டம் புறம் பொசிந்து காட்டுமா போலே அவனில் வெளிக்காட்ட , மாலே! மணிவண்ணா என்கிறார்கள்.

இதம் ஸ்ரீரங்கம் தியஜதாம் இஹாங்கம்
புனர்நசாங்கம் யதிஸாங்கமேதி
பானொவ் ரதாங்கம் சரணேச காங்கம்
யாநேச விஹங்கம் ஸயநேச புஜங்கம் -- ஆதி சங்கரர்.
ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் ஸாம்யம் உபயிதி - என்கிற ஸாம்யப்பத்தி மோக்ஷம் சொல்லுகிற பாசுரம்.
போல்வன சங்கங்கள்
சாலப் பெரும் பறை
பல்லாண்டு இசைப்பார்
கோல விளக்கு
கொடி
விதானம்
உக்கம்
தட்டொளி
என்கிற 8 விஷயங்களை பிரார்த்தித்து அஷ்டவித ஆவிர்பாவத்தை
ஸோஸ்நுதே ஸர்வான் காமாந் ஸஹ பிரஹ்மணா விபஸ்சிதே - என்கிற முக்த போகத்தை கேட்கிறாள்.
ததா வித்வான் -> தியானம், வேதனம், நிதித்யாசனம் இவை ஒருபொருள் பன் மொழியாய், ஜ்ஞான யோக அதிகாரி தம் முயற்சியால் பக்தி செய்து புண்யபாபங்களைத் தொலைத்து சாம்யாப்பத்தி மோக்ஷத்தைப் பெறுகிறான். அதேபோல
ததா வித்வான் -> சரணாகதனான ஒருவன் - பகவான் அவனே உபாயம் என்று பிரபத்தி பண்ணின அதிகாரி - தன் முயற்சி ஏதும் இன்றி பகவத் சங்கல்பத்தாலே புண்ய பாபங்களை உதரி சாம்யாப்பத்தி மோக்ஷத்தைப் பெறுகிறான். வித்யாசம் என்னவென்றால் இருவருடைய சஞ்சித கர்மங்களையம் பகவான் போக்கிக் கொடுத்தாலும் , உபாசகனான
பக்தியோக நிஷ்டன் தன்னுடைய பிராரப்த கர்மங்களை (இந்த ஜன்மத்தில் கழிக்க வேண்டியுள்ள புண்ய+பாபங்களின் கூட்டறவு) தானே போக்கிக் கொள்ள வேண்டும்.
யாவந்ன விமோக்ஷே அசஸம்பத்ச்யே தஸ்ய தாவதேவ சிரம் - என்பதாக இவர்களுக்கு ஜன்மாந்தரத்திலே மோக்ஷம்.
ஆனால் பிரபன்னாதிகாரியினுடைய சஞ்சித + ஆரப்த கர்மங்கள் இரண்டையும் பகவான் தானே - அஹம் துவா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி - என்று காணாக் கண்ணிட்டு தள்ளி விடுகிறான். என்றாலும் பிரபன்னாதிகாரி விஷயத்திலும்
1. விஷயாந்தர ஸம்பந்தம்
2. தேவதாந்தர ஸம்பந்தம்
3. பாகவத அபசாரம்
மூன்றின் சம்பந்தமும் இல்லாத பக்ஷத்தில் மட்டும் - அஸ்மாத் சரீராது ஸமுத்தாய பரஞ்சோதிர் உபஸம்பத்ய - என்று தேஹாவசானே மோக்ஷம் என்ற படி .



27. பாலேபோல் சீர் :
தேமதுர பாலேபோல் சீர்தன்னால் தன்பால்
நமவெனலார் தாம்தோற்ப தன்குணம் காட்டி
சமன்கொள்நல் வீடுசெய் மாலுக்கு தொண்டு
அமைந்தோமாய் கூடிக் களித்து .

கீழ் பாசுரத்தில் நோன்புக்கு உபகரணமாக
போல்வன சங்கங்கள்
சாலப் பெரும் பறையே
பல்லாண்டு இசைப்பாரே
கோலா விளக்கே
கொடியே
விதானமே
என்று தன்னதேயான
பாஞ்சஜன்யம்
பேரிகை
நம்மாழ்வார், பெரியாழ்வார்,
நப்பின்னை
கருடன்
ஆதிசேஷன்
ஆன கேட்டவை அனைத்தும்
நதே ரூபம் நசாகாரம் நஆயுதாநி . . . பக்கத்தானாம் துவாம் பிரகசாஸசே என்பதாக கொடுத்தாகி விட்டது. அது ஸாரூப மோக்ஷம் என்றால், மாரி மலை முழைஞ்சில் பாசுரத்தில் இங்கனே போந்தருளி என்று ஸாலோக , ஸாமீப்ய மோக்ஷத்தைப் பெற்றாள். இப்போது இந்த பாசுரத்தில், நோன்பு நோற்றதற்கான சன்மானம் என்ற பெயரில் ஸாயுஜ்ய மோக்ஷத்தைப் பிரார்த்திக்கிறாள் ஆண்டாள்.

பேற்றுக்கு வேண்டியது விலக்காமையும், இரப்பும் என்ற கணக்கில்
2 ஆம் பாட்டில் நெய்உண்ணோம், பாலுண்ணோம், மலரிட்டு நாம் முடியோம் என்று தாங்கள் விலகினதை இப்போது இந்த பாட்டில் சூடகமே, தோள்வளையே, தோடே , செவிப்பூவே என்று பல்கலனும் யாம் அணிவோம் . அத்தை நீ கொடுக்கும் போது விலக்க மாட்டோம் என்பதான அப்பிரதிசேஷத்தை சூசிப்பிக்கிறாள்.

சரணாகதி கத்யமும் கோத கீதையும் :
பகவத் விஷயத்தில் செய்யப் போகிற சரணாகதி பலிக்க வேண்டி முதலில் புருஷகார பிரபத்தி.
அடுத்து பகவத் குணாநுசந்தானம்.
அடுத்து அவனுடைய பூஷணங்கள்.
அதை அடுத்து பத்னி பரிவாரங்கள் பற்றி அநுசந்தித்து
ஶ்ரீமந் நாராயண! துவத் பாதரவிந்த சரணமஹம் பிரபத்யே என்று சரணாகதியை அநுட்டித்தார்.
இதுவரை துவய பூர்வகண்டார்த்த அநுசந்தானமாயித்து.
மேலே கீதா ஸ்லோகங்கள் மூன்றை உதாகரித்து ஸ்லோக த்ரியோஜித, ஸ்தான த்ரியோஜித ஞானமாகிற - பரபக்தி, பரஞான, பரமபக்தியைக் கொடு என்கிறார் ஸ்வாமி எம்பெருமானார்.
ஸம்ஸ்லேஷத்தில் தரிக்கையும், விஸ்லேஷத்தில் தரியாமையும் பரபக்தி. ஆர்த்தி தலை எடுத்து வழியல்லா வழியிலாவது அவனை அடைய நினைப்பது , தர்சன ஸமாகார ஸாட்சாத்கரம் இரண்டும் பரஞானம். பிரியாதே கூடி அநுபவிக்ககை பரமபக்தி.
பகவத் குணானுப கைங்கரயத்துக்கு பசி போலே இந்த பரபக்தி, பரஞான, பரம்பக்தி.
ஆண்டாள்
இந்த பாசுரத்தில் சொல்லப்பட்ட பாலேபோல் சீர்குணங்களை அனுபவிக்க வேண்டிய அவளுடைய அவாதான் பசி. அத்தால்  
அவனை
வாயினால் பாட , மனத்தினால் சிந்திக்க,
முகில் வண்ணன் பேர்பாட,
மனத்துக்கினியானைப் பாட
என்ற இவையே பரபக்தி, பரஞான, பரமபக்தியாய் பசி வளர வளர பகவத் குணானுபவம் சிறக்கும் படியாய்
ஸோஸ்நுதே ஸர்வாந் காமாந் ஸஹ பிரஹ்மணா விபஸ்சிது - என்று
பரமபதத்தில் பெரும் களிப்பாய் கூடி இருந்து குளிர்வதையே ஆண்டாளும் பால்சோறு மூடநெய் பெய்து கூடி இருந்து குளிர்ந்து என்கிறாள் .
இங்கு முழங்கை வழிவார கூடி இருந்து குளிர்ந்து என்பதின் ஸ்வாரஸ்யம், முக்தபோக அனுபவத்தில் , அன்நாதனாக அவனிருக்க, அன்னமாய் இவர்கள் நின்று, அவனானந்தம் கண்டு இவர்கள் ஆனந்திப்பதையே முழங்கை வழிவார என்கிறாள் .
அனுபவம் நித்யமாய், எப்போதும் நடவா நிற்பதை முழங்கை வழிவார என்று continuous tense ல் அமைத்தமை நோக்கத்தக்கது.

பாலேபோல் சீரை அனுபவிக்க முதல்நிலை பசி பரபக்தி. அது இன்னும் அதிகமாக அதிகமாக பரஞான பரம பக்தியாக பழுக்கிறது. அதுபோல அனபவாதிசயமும் விசத, விசத தர, விசத தமமாக பரார்த்த ஆனந்தம்; பரார்த்த கைங்கர்யம்; குணானுபவமே புருஷார்த்தமாக கனிவது சொல்லப்பட்டது.


28. கறவைகள் :
புறம்புண்டாம் வேத நெறியாவும் விட்டு
திறம்காட்டும் என்ஒருவன் தாள்கிட்டல் -- தேறுமென்
உரைத்த மொழிவழியே கைமுதல் வேட்டா
குறையில்லா கோவிந்தன் நாட்டு.

திருமந்திரத்தில் பிறந்து, கிருஷ்ண சரம ஸ்லோகத்தில் வளர்ந்து துவாயார்த்த நிரதராய் வர்த்திக்கை ஸ்வரூபம்.
திருமந்திரம் ஜ்ஞான பிரதானமான மந்திரம் என்றால், சரம ஸ்லோகம் விதி ரஹஸ்யம். துவய மஹாமந்திரம் அனுஷ்டான பரமான மந்திரம்.
திருமந்திரத்தில் ஆத்மாவாலே பேறு என்கிறது.
சர்ம ஸ்லோகத்தில் ஈஸ்வரனாலே பேறு என்கிறது.
துவயத்தில் பிராட்டியாலே பேறுஎன்கிறது.
ஆசார்ய சம்பந்தம் பெற்று ரஹஸ்ய த்ரிய உபதேசமும் பெற்று அனுஷ்டாதாவாய் போருகைக்கு துவயார்த்தம் நன்றாக நெஞ்சில் பட வேண்டும். அதில் பூர்வகண்ட வாக்கியம் உபாயத்தையும், உத்தர கண்ட வாக்கியம் பலம்-புருஷார்த்தத்தையும் சொல்லுகிறது. இதன் விளக்கமாக அவதரித்த ஆண்டாள் திருப்பாவை பாசுரங்கள் 27, 28 இரண்டும்.
ஆக , கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்துண்போம் பாசுரம் உபாய சுவீகாரமும், 29ம் பாசுரம் சிற்றம் சிறுகாலை கைங்கர்ய பிரார்த்தனையையும் சொல்லுகின்றன.

அனன்ய ஸாத்யே ஸாபீஷ்டே
மஹா விஸ்வாச பூர்வகம்
ததேக உபாயதா யாஞ்சா
இதி பிரார்த்தனா மதி : சரணாகதி : என்ற கணக்கில்
உபாய ஸ்வீகாரம் தானும் விதி வாக்கியத்தில் சொன்னபடி
மற்ற எல்லா தர்மங்களை விடுகையும்
பகவதாஸ்ரயணமுமாக விட்டவை எல்லாம் அவனேயாகப் பற்றுகையும்
சொல்வதே - கறவைகள் பாசுரம்.

1. கறவைகள் பின் சென்று - ஜாத்யுச்சித கருமம் செய்தீர்களாய் பிராபாந்தரங்களை விடீர்கள் இல்லீகோள் என்ன
கானம் சேர்ந்துண்போம் - கோ ரக்ஷணமாக சென்றோம் அல்லோம். உண்கையே பிரதானமாக சென்றோம். எங்கள் ஆசாரியன் மாடுகன்றுகள். பகவானுக்கு கண்டருளப்பண்ணி உண்டீர்கள் போலும் என்ன - அதுவும் இல்லை - சென்று உண்போம் அத்தால் கர்மாநுஷ்டானம் இல்லை - நீ பரமபதம் விட்டு திருவாய்ப்பாடிக்கு வந்தாயால், நாங்கள் விமுக்த்தர்கள்போலே அங்கிருந்து கானம் சென்றமை கண்டீயே என்கிறாள்.
2. அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலம் - இதுவரை இல்லையாகிலும், இன்னும் முன்னே சம்பாதிக்க வழியும் இல்லை.
வலக்கை இடக்கை அறியா ஆய்க்குல மாதலால் அறிவில்லாத - ஜ்ஞான யோகம் இல்லாத - அறிவொன்றுமில்லாத - பக்தி யோகமும் இல்லாத பிள்ளைகளோம். ஆத்தால் ஆர்ஜித ஸுக்ருதம் எதுவும் இல்லை.
3. குறை ஒன்றில்லாத கோவிந்தா! உன்தன்னைப் பிறவி பெறும் தனைப் புண்ணியம் யாமுடையோம் - அயத்ன சுக்ருதமாக உன்னையே சித்த புண்யமாக உடையோம். நீயோ நிறைவாளன். நாங்கள் ஜ்ஞான பக்திகளில் குறைவாளர்கள்.
4. உன்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது - இருவருக்குமான சம்பந்தம் தானும் அங்கு ஒழிக்க முடியாது வாஸ்தவம். இங்கு ஒழிக்கலாமோ என்னில் நித்யம். அநிவாரியம் .
5. அறியாத பிள்ளைகளும் அன்பினால் உன்தன்னைச் சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே - பூர்வாபதாரங்களுக்கு க்ஷமணம் வேண்டி
6. இறைவா நீ தாராய் பறை - நீ கொடுத்தன்றி எங்களுக்கு நிறக்க வழியில்லை என்கிறாள்.
அஹம் , மத் ரக்ஷண பரம், மத் ரக்ஷண பலம் ஈஸ்வராதீனம் - ஸ்வாமி தேசிகன்.
பிராப்தாவும், பிராப்யமும், பிராப்திக்கு உகப்பானும் அவரே இனி ஆவாரே - ஸ்வாமி பிள்ளை லோகாச்சார்யார்.

அறிவொன்றுமில்லாத ஆய்க்குலம் என்றது தாழ்குலம், கர்ம ஜ்ஞான பக்கத்தி நெறிக்கு விலக்கான குலம் என்பதல்ல. இயலாத குலம் என்று பொருள். பிராம்மணர்களாக பிறந்தவர்கள் இயன்றவர்களோ என்னில் ? அவர்களும் விட்டே பற்றுகைக்கு அசக்தி காரணம் அன்று. ஸ்வரூப பிரயுக்தமே பிரதான ஹேது.
அறிவொன்றுமில்லாத என்பது ஜ்ஞான அனுதயமன்று . சாட்சாத் தர்மமான கோவிந்தா நீயே உபாயாம் என்கிற வேதாந்த விழுப்பொருள் அறிவு ஆண்டாளுக்கு உண்டான படியாலே .
ந வேதாந்தாது சாஸ்திரம்
ந மதுமதனாது தத்வம் அகிலம்
ந ஸத்வாது ஆரோக்கியம்
ந துவயவசனத : க்ஷேமகரம் -- ஸ்வாமி தேசிகன்.
பரித்தெஜ்ய என்று விடுகை சொன்னவிடத்து ஆண்டாள் அறிவொன்றுமில்லாத ஆய்க்குலம் என்று கர்ம ஜ்ஞான பக்தி யோகங்களை செய்ய பிரசக்தியே இல்லை. விடுகை என் வந்தது என்று சொல்லி விட்டாள்.அடுத்து
மாம் ஏகம் சரணம் விரஜ - ஸ்ரீமந் நாராயண சரணநௌ சரணம் பிரபத்யே என்று பற்றுகையைச் சொன்ன விடத்து - உன்தன்னைப் பிறவி பெறும்தனைப் புண்ணியம் யாமுடையோம் - என்றது ஸ்வீகாரம் தானும் பரகதமான படிக்கு.

மாம் சரணம் விரஜ அல்ல. மாம் ஏகம் சரணம் விரஜ என்ற விதி வழி கண்ணன் தானே நடத்தி கொடுத்த படியுமன்றோ விது.

29. மற்றை நம் காமங்கள் மாற்று :
அடிமைக்கண் அன்புசெய் ஆர்வத் தறிவு
உடைமைக்கண் தேடும் மகிழ்ச்சித் -- தடையாம்
அடைந்து அனுபவிக்க புக்கால்நில் என்ன
மிடையாது நிற்றல் தலை.

சிற்றம் சிறுகாலை வந்துன்னை சேவித்து - பிராபியத்தில் த்வரை
உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய் - அதில் கலக்கம்
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து
நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாதே போகாது - ஆர்த்தியை ஆவிஷ்கரித்தல்.
இற்றைப்பறை கொள்வான் அன்றுகாண் கோவிந்தா - உபேக்ஷையைச் சொன்னது.
எற்றைக்கும் ஏழழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் - கைங்கர்ய அபேக்ஷை.
மற்றைநம் காமங்கள் மாற்று - கைங்கர்யத்தில் காளையாகிற வைராக்கியத்தை - ஸ்வபோக்த்ருத்வ புத்தியை விலக்குகிறாள்.

நாராயணனே நமக்கே தருவான் - என்றது முதல் பாசுரம்.
உனக்கே நாமாட்ச் செய்வோம் - 29 ஆம் பாசுரம். இத்தால்
நாராயணனே நமக்கே - உனக்கே நாம் = நாராயணனே உனக்கே நாம் என்றாகிறது.
நாம் என்பது ஜீவாத்மாவைக் குறிக்கும்.
எப்படிப்பட்ட நாம் என்று விசாரித்தால் - சுவாமி பிள்ளைலோகாசார்யர் காட்டுவது
அஹமர்த்தத்துக்கு ஜ்ஞானந்தங்கள் தடஸ்தமானால் தாஸ்யமிறே அந்தரங்க நிரூபகம் - என்பதாக.
ஜ்ஞானம் உடையவன் என்பதால் கர்த்ருத்வ- போக்த்ருத்வங்கள் முன் நிற்கும். ஆனால்
கர்த்ருத்வத்துக்கு தடைக்கல் பாரதந்திரியம்.
போக்த்ருத்வத்துக்கு தடைக்கல் சேஷத்வம்.
சேஷத்வம் பர-அதிசயத்துக்கே இருப்பது
பாரதந்த்ரியம் பர-வசப்பட்டு செயல் படுவது. ஆக ஜ்ஞாத்ருத்வத்தால் வந்த கர்த்ருத்வம் பரனான பகவத் ஆதீனப்பட்டுதானே இருக்க வேண்டும். அதாவது ஸ்வபிரயர்த்தன நிவிர்த்தி பாரதந்த்ரியத்துக்குப் பலம். பிரவிருத்தியே கூடாதோ என்னில் அன்று.
பாரதந்த்ரியத்துக்கு குந்தகமில்லாத கர்த்ருத்வமும்
அதேபோல சேஷத்வத்துக்கு விரோதமில்லாத போக்த்ருத்வமும் நோக்கிக் கொள்ள வேண்டும்.

ஜ்ஞான காரியமான பிரயத்னமும் பலமும்
ஸ்வரூப தர்மமான பாரதந்த்ரியமும், சேஷத்வத்வத்தையும் அனுசரித்தே ஆற்றக்கடவது.
பகவான் ஸ்வதந்திரன். நாம் பரதந்திரர். எனவே பகவத் பிரயோஜனமாக செய்கிற கர்த்ருத்வம் பாரதந்திரியம் - உனக்கே நாமாட் செய்வோம்.
எனக்கு, எனக்கும் உனக்கும் என்றல்லாமல் உனக்கே என்பதான வழுவிலா அடிமை.
பகவான் சேஷி. நாம் சேஷப்பட்டவர்கள். எனவே தத் விஷய ப்ரீதி சைதன்ய பலம். பிரகர்ஷயிஷ்யாமி என்பதாக பகவத் ஆனந்த அநுயாக போக்த்ருத்வம் சேஷத்வம் - மற்றை நம் காமங்கள் மாற்று .

ம - என்பது தாயம் என்றால்
நம - என்பது இலக்கம் 2.
பரமபத சோபனா படத்தில் (அஹம்) - ம என்கிற 1 போட்டு விளையாட ஆரம்பித்து , கடைசீ பாம்பு வாயில் விழாமல் தப்பிக்க, நம - என்று 2 போட்டு பரமபதம் சேருவர். ம - என்கிற 1 போட்டால் பெரிய பாம்பு வாயில் விழுவர். அதேபோல பிரணவத்தில் உள்ள மகாரம் அவுக்கு சேஷப்பட்டவன் என்று சொல்வதோடு , இடையில் உள்ள நம பதத்தால் பாரதந்த்ரியத்தைச் சொல்கிறது. அந்த நம பதத்தின் அர்த்தமான ''பாரார்த்யம் ஸ்வம் '' என்பதை சொல்ல வந்ததுதான் திருப்பாவை என்கிற பட்டர் திருவாக்கு பிறந்ததும் இது கொண்டு.

30. வெங்கட் கடல் : ஆண்டாள் அரங்கக்குப் பன்னு திருப்பாவை :
அன்ன வயல் புதுவை ஆண்டாள் அரங்கர்க்குப் பான்னு திருப்பாவை பல்பதியம் - பராசர பட்டர் திருவாக்குப்படி
திருப்பாவை 30 ம் திருவரங்கன் விஷயமானவை . எப்படி என்பதை இங்கு பார்க்கலாம்.
1. நாராயணன் - ஸக பத்நியா விசாலாக்ஷியா நாராயண உபாகமது - வால்மீகி வாக்குப்படி ரங்கநாதன் தான் ஜகந்நாதன் - பெருமாள் ஆராதித்த பெரிய பெருமாள்.
2. பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் - கார்ய வைகுண்டத்திலுள்ள க்ஷீராப்தி நாதன்தனான வியூக வாசுதேவன்தான் ஸ்ரீ ரங்கத்துக்கு பிரதானம் - பிரத்யக்ஷ பரமம் பதம் ஸ்ரீரங்கம்.
3. திங்கள் மும் மாரி - லக்ஷ்மிநாத ஸமாரம்பாம் என்று குருபரம்பரையில் பிரதம குருவாய் நின்று ரஹஸ்ய த்ரியங்களை ஸ்ரீரங்க நாச்சியாருக்கு உபதேசிக்க, அவள் வழி விஸ்வக்ஷேனர் , நம்மாழ்வார் உபதேசித்த கிரமம் - மும்மாரி
4. ஆழி மழை - சார்ங்கம் உதைத்த சரமழைபோல் என்று சார்ங்கவில் சேவகனாக இராமபிரானைப் பற்றி பிரஸ்தாவம் இதில். - ராமோ த்விர் நாவிபாஷதே என்று கத்யத்தில் நம்பெருமாள் தன்னை ராமனாகக் கொண்டு சொன்ன வார்த்தை .
5. மாயனை - அரவின் அணைமிசை மேயமாயனார் என்று திருப்பாணாழ்வார் சொன்ன தாமோதரன் பெரிய பெருமாள்தானே.
6. முனிவர்களும் யோகிகளும் ஹரி என்று - சிற்றெயிற்று முற்ற மூங்கில் அற்ற பற்றர் வாழும் அந்தணீர் அரங்கன் - விமானத் தூண் ஹ + ரி என்ற வாசகத்தோடே ஆனது .
7. கீச்சு கீசு - கிளிச் சோழன் கிளி மண்டபம் இங்குதான் உண்டு.
8. தேவாதி தேவன் - தேவரையும் அசுரனையும் திசைகளும் படைத்தவனே யாவரும் வந்து அடி வணங்க அரங்கநகர் துயின்றவனே என்று குலசேகர ஆழ்வார். தேவாதி பிரம்மா அவன் ஆராதனம் செய்த பெரிய பெருமாள். செங்கோல் உடைய திருவரங்கச் செல்வனார் - ஆண்டாளுக்கு.
9. மாமாயன் மாதவன் வைகுந்தன் - அரங்கன் அழகிய மணவாளன் நம்பெருமாள் என்ற மூன்றும் பரத்வம் ஸ்ரீயப்பதித்வம் சௌலப்யத்துக்கான திருநாமங்கள் தானே.
10. மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் - லோகாசாரங்க முனி திருப்பாணாழ்வார் விஷயமாக அபசாரப்பட, பின் அவர் திருவாராதனத்துக்கு வந்த போது அரங்கன் சன்னதி கதவு திறக்காமல் மௌனியாய் காலம் தாழ்த்தி, பிறகு ஆழ்வாரை எழுந்தருள பண்ணி அவருக்கு அதுவரை திறவாத வாசலை திறந்துவிட்டவன் அரங்கன்.
11. முற்றம் புகுந்து - அரங்கன் முற்றம் சேறு செய்யும் தொண்டர் - சுற்றத்து தோழிமார் எல்லாரும் 105 திவ்யதேச
எம்பெருமான்கலும் பள்ளி கொள்ளுமிடம் திருவரங்கம்.
12. அனைத்தில்லத்தாரும் அறிந்து - சாத்தின சாத்தாத 10கொத்து பரிவாரங்களை நியமித்து எம்பெருமானார் திருவரங்கத்தை நிர்வகித்து போந்த படி இங்குதான்.
13. பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் - பிள்ளைகள் திருவரங்கம் காவிரிக்க கரையில் அன்ன கூட உற்சவம் விளையாடும் போது ஜீயோ! என்று அழைக்க , எம்பெருமானார் மணல்சோற்றை தமருகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தமருகந்தது எப்பேர் மற்றப்பேர் என்பதாக அதை பிரசாதமாகவே நினைத்து பெற்றறுக் கொண்ட சரித்திர சங்கேத்யம்.
14. வாய் பேசும் நங்காய் நாணாதாய் நாவுடையாய் - வாயழகர் என்னரங்கத்து இன்னமுதர்; திருவரங்கர் தாம் பணித்த மெய்மை பெரு வார்த்தை ; பேசி இருப்பனவைகள் பேர்க்கவும் பேறாவே ; ஸ்ரீரங்கே ஸுகமாஸ்வ என்று எம்பெருமானாருக்கு அருளிய வார்த்தைகள் எல்லாம் அரங்கன் நாவுடைமைக்கு சான்று.
15. எல்லாரும் போந்தாரோ ? - அத்யயன உற்சவத்தில் ஆழ்வார்கள் எல்லாரும் திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி
இருந்து 21 நாட்கள் தமிழ்மறை திருநாள் கண்டருளுவதில் திருவரங்கம் திருப்பதி பிரதானம், காரணம் இவரே பதின்மர் பாடும் பெருமாள் . பாசுரங்களின் எண்ணிக்கை 247 போலே தமிழ் உயிர் மெய் எழுத்துக்கள் தொகையும் 247.
16. வாசல் காப்பான், கோயில் காப்பான் - உத்தர வீதி, சித்தரை வீதி, நான்முகன் கோட்டை வாசல் (ரங்கா ரங்கா கோபுரம்) கார்த்திகை கோபுர வாசல், ஆரிய படாள் வாசல் (கருட மண்டபம்), நாழி கேட்டான் வாசல் (துவஜ ஸ்தம்பம்), ஜெய விஜயாள் வாசல், திருமணத்தூண் திருவாசல் களில் உள்ள துவார பாலர், க்ஷேத்ர பாலர்கள் எழுப்பினது.
17. அம்பரமே தண்ணீரே சோறே அறம் - அரங்கனுலா சென்ற காலத்து ஆழ்வாருக்கு வஸ்திரமும், ஸ்ரீவைஷ்ணவ வெள்ளத்தானுக்கு ஈரவாடை தீர்த்தமும், ஆழ்வான் திருகுமாரர்கள் அவதரிக்க ஹேதுவாய் பிரசாதம் அனுப்பிய விருத்தாந்தங்கள் இந்த வகை கணக்கு.
18. உன் மைத்துனன் பேர்பாட(வசவு பாட) - ஸ்ரீரங்கம் பங்குனி உத்திரமுதல் நாள் நடக்கிற பிரணய கலக்கத்தன்று அனைவரும் நாச்சியார் பரிகரமாக நின்று, அரங்கனை ஏசினபடிக்கு .
19. மைத்தடம் கண்ணினாய் - உல்லாச பலவித (பட்டர்) , சேதனனை அருளாலே திருத்தும். ஈஸ்வரனை அழகாலே திருத்தும் தத் இங்கித பராதீன : நம்பெருமாள். (ஆழ்வான்) என்று ஸ்ரீரங்க நாச்சியார் வைபவம் .
20. செப்ப முடையாய், திறலுடையாய் - நம்பி இராமானுசனை முதலில் அரையர்மூலம் நேர்மையாக கேட்டு பெறாது போக, இரண்டாம் முறை காஞ்சி தேவப்பெருமாளை பாட்டுக்கு போர இசைய வைத்து , ஸ்ரீரங்கம் அழைத்துக் கொண்ட திறல் = சாமர்த்தியம் அரங்கனுக்கே அன்றோ?
21. ஏற்ற காலங்கள் எதிர் போங்க - முதலில் ஆழ்வாரைக் கொடுத்தார். அவர் பவிஷ்யத் ஆச்சாரியரைக் கொடுக்க, அந்த ராமானுசர் எதி புனராவதாரமான மாமுனிகள் எதிர் பொங்கி மீதளித்த பிரபாவம், முதலில் கொடுத்த அரங்கனுக்கே ஆச்சாரியனான படி இது.
22. செங்கண் சிறுச்சிறிதே - திருப்பாணாழ்வார் - காரியவாகி புடை பரந்து என்று பாடிய படி. உய்யக் கொண்டார் வழி ஆளவந்தாருக்கு ராஜ்ய வியாபாரத்தை விட்டு சம்பிரதாயத்துக்கு ஆக்கின படி; பிள்ளை உறங்காவில்லி தாஸர் பொன்னாச்சியோடு அரங்கனுக்கு ஆட்பட்டது ராமாநுசர் சொல்லிக் காட்டிய அக் கண்ணழகுதானே.
23. சீரிய சிங்கம் போதருமா போலே - நடைக்கு கோயில். குடைக்கு பெருமாள் கோயில். வடைக்கு திருமலை. முடிக்கு யாதவாத்ரி பிரசித்த மிறே.
24. அன்றிவ் உலகம் அளந்தாய் - எல்லை மண்டபம், ஜீபயர்புரம், உறையூர் என்று எல்லை நடந்து அளந்தது திருவானைக் காவல் கோஷ்டியாரிடம் இருந்து மீட்டது.
25. ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஒருத்தி மகனாய் ஒளித்து வளர - ராமானுசர் கைப்பிள்ளையாய் பிறந்து பிள்ளை லோகாச்சார்யார் மகனாய் ஜோதிஷ்குடியில் ஒளித்து வளர்ந்தது.
26.மார்கழி நீராடுவான், மேலையார் செய்வனகள் - மார்கழி நீராட்டமாகிற அத்யயன உற்சவமான திருவாயமொழித் திருநாளாக நம்பெருமாளிடம் பிரார்த்தித்து திருமங்கை ஆழ்வார் தொடங்கி வைக்க , நாதமுனிகள் காலத்தில் பகல் பத்து நாளும் சேர்த்து அது 21 நாள் உற்சவமாக ஆயித்து. அதுவே நமக்கு மேலையார் செய்வனகள் ஆயிற்று.
27. நாடு புகழும் பரிசு - ஸ்ரீரங்க விமானத்தோடு பெரிய பெருமாளை , பெருமாள் விபீஷணனுக்கு கொடுத்தது. உபய விபூதியையும் எம்பெருமானார் இட்ட வழக்காக்கி அவரை உடையவர் என்று நியமித்தது இவை பார் புகழும் பரிசு.
28. சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே - முதலியாண்டான் - வாங்கீபுரத்து நம்பி பேச்சு - பெருமாள் உற்சவமாக எழுத்தருளும்போது என்ன பாடினீர் என்ன, ஜெய விஜயீ பவ ஸ்ரீரங்க விபோ ஜெய ஜெய என்றேன் என்ன - நெய் உண்பீர் , பாலுண்பீர், பட்டுடுப்பீர், நூறு பிராயம் புகுவீர் என்று இன்னொருவர் சொல்ல, முரட்டு சமஸ்கிருத பெரிய பேர்கள் இங்கு எதற்கு என்று, வர்த்திக்கிற தேசத்தைக் கொண்டு அத்தை சிறுபேறாக அவர்கள் கணிசத்தபடி.
29. பொற்றாமரை அடியே போற்றும் பொருள் - ரங்கமணி பாதுகா பிரபாவம் பற்றி ஸ்வாமி நிகமாந்த தேசிகன் 1000 ஸ்லோகம் பண்ணக் கூடிய மகிமை. ஆசன பத்மத்திலே அழுத்தின திருவடி அவன் கைவிட்டாலும், அவன் பாதுகையான நம்மாழ்வார் இல்லை மாறன் அடிபணிந்துய்ந்த எம்பெருமானார் கைவிட மாட்டார் என்கிற பெருமையும் கொண்ட திருவடி அரங்கனுடையது.
30. ஈரிரண்டு மால் வரைத் தோள் செங்கண் திருமுகத்து சொல்வது திருமாலால் - பட்டர்- அனந்தாழ்வான் ஸம்வாதம். ஸ்ரீ வைஷ்ணவ திவயதேசங்கள் பலதும் இருக்க பட்டரோ ஸ்ரீரங்கநாத பக்ஷபாதி. எப்படி என்றால் நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழி ஆயிரமும் வான்திகழும் சோலை மதிள் அரங்கர் வான் புகழ்மேல் ஆன்ற தமிழ்மறை ஆயிரம் என்று அங்கு சொன்னது போல திருப்பாவை முப்பதும் அன்ன புகழ் புகழ்புதுவை ஆண்டாள் அரங்கர்க்கு பான்னு திருப்பாவை என்று ஸ்ரீரங்கநாதன் விஷயமாக்கி தனியன்கள் சாதித்தார். அவரைப் பார்த்து அன்னத்தாழ்வார் ஒருமுறை, நீர் வைகுந்தம் சென்றால் அங்கு பராமநாதன் த்விபுஜனாக இருந்தால் சேவிப்பீரா, சதுர் புஜனாக இருந்தால் சேவிப்பீரா என்று வினவ, அதற்கு பட்டர் சதுர் புஜனாக இருந்தால் நம்பெருமாள் என்று நினைப்பேன். த்விபுஜனாக இருந்தால் பெரிய பெருமாள் என்று நினைத்து சேவிப்பேன். பெரிய பெருமாளாகவோ, நம்பெருமாளாகவோ சேவை தரவில்லை என்றால், கூரயைப் பிய்த்துக் கொண்டு ஸ்ரீரங்கத்துக்கே குதித்து விடுவேன் என்றாராம். அதை நிரூபிக்கும் வகையில் ஆண்டாளும் நான்கு திருத்தோள் என்று சொல்லாமல் ஈரிரண்டு மால்வரைத் தோள் மாதவன், கேசவன் என்றது நம்பெருமாள், பெரிய பெருமாளாக நினைத்து அவள் பாடினாளாகக் கூறலாம்.
அந்த மாதவன், கேசவன்தான் - ஆண்டாளை திருக்கல்யாணம் பண்ணி அங்கப் பறை கொண்ட மன்னாரும் அரங்கன் தாமே.

--Excerpts from Sri U. Ve. Velukkudi Swamy Discourse 2020.
-- கி.ஸ்ரீர.ஸ்ரீ.தாஸன்.