பத்தாம் பாட்டு - தேற்ற மாலை :
தேற்றமாய் வந்து திற. நீயும் தேறி, எங்களையும் தேறும்படியாக வந்து திற என்பது பொருள்.
தேற்றம் தெளிவு. அதாவது, ஞானத்தில் தெளிவு. திருநெடுந்தாண்டகப் பாசுரம் (௨௧) ’இருவராய் வந்தார் என்முன்னே நின்றார்’ என்றவிடத்தில் வியாகியானம் இருவராம்படி வந்தார் என்று காட்டியுள்ள படியால், தேற்றமாய் வந்து என்ற இந்த இடத்திலேயும் தெளிவு ஏற்படும் படி என்கிற அர்த்தத்தை தருவித்துக் கொண்டால், இந்த பாசுரத்தில் எழுப்பப் படும் பெண்பிள்ளை இவள் வாயைத் திறக்க, கலங்கிய பிறர் புத்தி தெளியும் என்றபடி.
பகவத் விஷயத்தில் பேற்றுக்கு உபாயமாக ஒன்றை செய்ய முற்படுகை கலக்கம். ’மாம் ஏகம் சரணம் விரஜ’ என்ற கீதாசாரியன், உபாயாந்தர்ங்களை விட்டே தன்னைப் பற்ற வேண்டும் என்றருளிச் செய்தான். திருவேங்கட மலையிலே அத்தை அபிநயித்து காட்டியும் நிற்கிறான். இதையே, பகவத் பிரவ்ருத்திக்குத் தடையான ஸ்வப்பிரவ்ருத்தி நிவிர்த்தி சரணாகதி என்பர் . ’சித்த வேண்டா, சிந்திப்பே அமையும்’என்று பேசினார் ஆழ்வாரும்.
சாஸ்த்ரிகள் தெப்பக் கையரைப் போலே சாஸ்த்ர விஹிதமான கர்மாக்களையும், எம்பெருமான் ஆகிய இரண்டையும் பற்றி பிறவிக் கடல் நீந்துவர். ஸாரக்ஞர்கள் விட்டத்தில் இருப்பாரைப் போலே இருகையும் விட்டு கரைகுறுகும் காலம் பார்த்திருப்பர். இப்படி செய்த வேள்வியராய் பர ஸமர்பணம் செய்து விஸ்வசித்து இருக்க, மார்பிலே கைவைத்து உறங்கலாம்.
கலக்கமும், அதன் பரிஹாரமும் :
தேஹாத்மபுத்தி கழிய வேண்டுவது மகார வாச்யனான ஆத்மா ஞாநானத்தால் தேஹ வியதிரிக்தன் என்கிற அறிவு.
ஸ்வாதந்ரிய புத்தி கழிய வேன்டுவது பகவத் சேஷ வஸ்து ஜீவாத்மா என்கிற அறிவு. அகாரத்திலே ஏறிக்கழிந்த லுப்த சதுர்த்தி இதைத் தெளிவிக்கும்.
அன்ய சேஷத்வ புத்தி கழிவது உகாரத்தால். ஏவ என்ற பொருளில், பகவானுக்கே சேஷப்பட்டவன் ஜீவாத்மா என்ற இத்தால்.
ஸ்வரக்ஷணே ஸ்வான்வய புத்தி கழிவதும் நம: பதத்தாலே. ம: ந என்று, பகவதேக ரக்ஷணத்வம் காட்டப்பட்டது இதிலே.
ஆபாச பந்துக்கள்பக்கல் புத்தி விலகுவதும் நாரயணனே ஸர்வவித பந்து என்று விஸ்வசித்த போது.
விஷய சபல புத்தி கழிகையும், ஆய என்கிற வியக்த சதுர்தி அநந்யப் ப்ரயோஜனதையை விளைவித்து.
பிராப்திக்கு வேண்டுவது ருசியும் விலக்காமையும். திரௌபதியும், கஜேந்திர ஆழ்வானும், ஸ்வயத்னத்தை விட்டவளவிலே - நம: பதார்த்தம் தெரிந்து அநுஷ்டான பர்யந்தம் ஆனவளவிலே - ரக்ஷணம் பிறந்தது. ’சசால சாபஞ்ச விமோச வீர: என்று ரக்ஷணதுக்காக பிடித்திருந்த வில் விலகின அளவிலே, ’இன்றுபோய் போர்க்கு நாளை வா’ என்கிற வார்த்தை பிறந்தது. தலை வணக்கி அப்போதே வாழ்ந்து போயிருக்கலாம். அதற்கு அவகாசம் கொடாதே, தாக சாந்திக்காக உண்டான தடாகத்திலே கழுத்திலே கல்லைக் கட்டி விழுந்து சாவாரைப்போலே, மாண்டு போனான் ராவணன்.
நீயும் தேறி, எங்களையும் தேறும்படியாக வந்து திற என்பதிலே உண்டான தெளிவு இவையே.
பதினோறாம் பாட்டு - பொருள் மாலை :
நீ எற்றுக்குறங்கும் பொருள் ஏல் என பிரச்னம் இடுகிறாள் ஆண்டாள். இதுபோன்ற பிரச்னங்கள்தாம் ஞாத பிரிச்னம் என்றும், அஞாத பிரச்னம் என்று இரண்டு வகை. தெரியாத விஷயத்தை தெரிந்து கொள்ளவே பிரச்னங்கள் எழுகின்றன.
பொருள் = அர்த்தம், பிரயோஜனம் ஏது என்று வினவுகிறாள் ஆண்டாள்.
எம்பெருமான், ஒரு ’வெள்ள வெள்ளத்தின்மேல் யோக நித்திரை’ செய்வது வைதிக உறக்கமாகும். நம்மவர்கள் உறக்கம் தமோகுண கார்யம். பகவான் கிருஷ்ணன் கீதை ௨-௬௬ ஸ்லோகத்தில், ’யா நிஷா ஸர்வ பூதாநாம்’, ’யஸ்யாம் ஜாக்ருதி பூதாநி’ எது என்று விளக்க மளிக்கிறான். இதர விஷயங்களில் வைராக்யம் உறக்கம். பகவத் விஷயத்தில் ஈடுபாடு உணர்த்தி என்று பொருள் படும் இதற்கு.
’ஸுப்ரபாதாஸ்ச மே நிஷா’ என்று அக்ரூரரும் ’அன்று நான் பிறந்திலேன், பிறந்தபின் மறந்திலேன்’ என்று திருமழிசை ஆழ்வாரும் பகவானின் முகத்தில் விழித்தலையே விடியலாக, ஸத்தா பிரயுக்தமாக நோக்க, மற்றது அதற்கு எதிர் தட்டான, இரவு (அ) அசத்கல்பம் என்னவும் வேண்டுமோ?
பன்னிரண்டாம் பாட்டு - அறிவு மாலை :
அனைத்தில்லத்தாரும் அறிந்து ஏலோரெம்பாவாய். அதாவது இவள் ஸகாசத்திலே எல்லோருக்கும் உணர்த்தி ஏற்பட்டது என்கிறாள். எம்பெருமானார் பிறந்தாற் போலே ஆயித்து, இவள் சேர்த்தியிலே எல்லோரும் பகவத் விஷயமறிந்தது.
ஓராண்வழியாச் சென்ற உபதேசம் தான் ’ஆசையுடையோர்க் கெல்லாம் ஆரியர்காள்! கூறுமின்’ என்று பேசி வரம்பறுத்தார் எம்பெருமானார்.
’போதுவீர் போதுமினோ’ என்று இச்சையே அதிகார மாக்கினதும் இவளைக் கூடினபோதிறே. ஏல்லோரும் அறிய வேண்டும் என்கிற விசாலமான திருவுள்ளம் படைத்த எம்பெருமானார் போல்வாள் ஒருத்தி யல்லளோ இவள்?
’மனத்துக் கினியான்’ என்று திருவாய்ப் பாடியிலே கண்ணனைத் தவிற வேறு ஒருத்தரைப் பாடுவதா? ராமன் மனத்துக்கு இனியான் ஆகில், கண்ணன் இன்னாப்புக்கு விஷயமா என சில பெண்கள் கிளர்சி செய்ய, இவள் ஒருத்தி ’இருவரும் ஒரே வியக்திதான்’ என்று சமாதனப் படுத்தி, எல்லோரும் அத்தை உணரும்படிச் செய்தாள். அதுக்குச் சேர, கிருஷ்ண விருத்தாந்தமும், ராம விருத்தாந்தமும் மாறி மாறி பேசும்படியான ’புள்ளின்வாய் கீண்டானைப் போல்லாவரக்கனை' பாசுரம் பிறந்தது அடுத்தது என்று அந்வயம்.
13. கள்ளம் தவிர் மாலை :
போதரிக் கண்ணினாய் : போது = போதம் என்பது போது என்று ஆகியுள்ளது. அரிதலாவது அந்த ஞானத்தை சேகரிப்பதாகும். ஆசாரியனானவன் எப்போதும் ஞானத்தை சேகரிப்பதிலே கண்ணும், கருத்தாய் இருப்பர்.
பாவாய் : ஸ்த்ரீத்வம் அல்லது பாரதந்த்ரியத்துக்கு உடல். பரதாழ்வானைப் போலே வைத்த இடத்தில் இருக்கும் இருப்பு. இங்கே ஒரு ஐதிஹ்யம் காணலாம்.
ஒரு சமயம் பாஹ்யர்களால் ஸ்ரீரங்கத்துக்கு ஆபத்து வர, பெரிய நம்பிகள் எம்பெருமானாரிடத்தில் வந்து விண்ணப்பித்தார். பகவத் விஷயத்தில் ஆபத்தை போக்க அவனிடத்திலேயே பிரார்த்திக்க வேணுமாய் ''சூழ வலம் செய்ய கடுவினை களையலாமே'' என்கிறபடி திருவரங்க வீதிகளிலே பிரதக்ஷணமாய் வர ஆபத்து விலகும், அதற்கு பெரிய நம்பிகள் தன்பின்னே நிழல் போல் வருவாரைப் பிரார்த்தித்து வேண்ட, உடையவரும் கூரத்தாழ்வானை அனுப்பி வைத்தார் என்பது குருபரம்பரை சரித்திரம். முகுறும்பு அறுத்தவரான ஆழ்வானும் ப்ராசாரியரின் பின்னே செல்ல தயங்குவாரோ? ஆனபோது எம்பெருமானாருக்கு பரதந்திரராய் மாற்றுப் பேச்சு உண்டோதான்?
ஸ்ரீமத் ராமானுஜ சரனௌ சரணம் பிரபத்யே |
ஸ்ரீ மதே ராமானுஜாய நாம: ||
என்ற ஜகதாசாரியர் விஷயமான துவய மஹா மந்திரத்தில் ''மதுப்பு'' பிரத்யாத்தல் பகவத் விஷயமான துவயத்தில் பிராட்டிகீடாக இங்கே பேசப் படுமவர் கூரத்தாழ்வான் என்றால் அவருக்குண்டான ஸ்த்ரீத்வ பூர்த்தி யோடேயான ஆசாரியனைச் சொல்லுகிறது இங்கு.
கள்ளம் தவிர்கையாவது ''ஓராண் வழியாய்ப்'' மற்றையோர்க்கு ஒளித்துப் போந்ததை ''ஆசை உடையோர்க்கு'' எல்லாம் ஆக்கின கிருபாமாத்ர பிரசன்னா சாரியர் இருந்தபடி.
ஸ்வயம் பாகத்திலே வயிறு வளர்க்காமல் ''சாது கோஷ்டியில் உட்கொள்ளப் படுவாரே'' என்கிறபடி எம்மையும் அங்கீகரித்து அனுபவத்தை பகுமுகமாக்கப் பிரார்த்தனை.
No comments:
Post a Comment