Tuesday, 21 January 2014

Thiruppavai 21=> 23

இருபத்தோராம் பாட்டு - போற்றியாம் வந்தோம் புகழ்ந்து - புகழ் மாலை :

துயிலுணர்ந்தவாறே வந்த வரத்துக்குக் காரணம் போற்றிப் புகழ்தல் என்கிறார்கள். குணத்துக்குத் தோற்று வந்தவர்களாதலால், அவைதம்மையே விஷயமாக்கிப் பாடுகிறார்கள்.

ஊற்றமுடையாய் - ’ஶாஸ்த்திர யோனித்வாத்’ என்கிறபடியே, ஶாஸ்த்திர வாக்கியங்களைக் கொண்டே ”ப்ரஹ்மம் ” அறியத்தக்கது .

பெரியாய் - யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மநஶாஸஹ’ என்கிறபடியே, வேதத்தாலேயே அறியப்படுமவனாகிலும், ’வேதாதிகன்’

உலகினில் தோற்றமாய் நின்ற - வேதாதிக்னாய் இருந்து வைத்தும், ஸகல மனுஜ நயன விஷயமாம்படி பிறந்து, அத்தால்

சுடரே - பிரகாசிக்கிறான். ’ஸ உ ஸ்ரேயான் பவதி ஜாயமாந:’ என்று பெருமை அடைகிறான். இதிலே ’உ’ என்பது ’ஏவ’ என்கிற பொருள்பட, பிறந்தே பெருமை அடைகிறான் என்றும், பிறந்து பெருமையே அடைகிறான் என்றும், பிறந்து பெருமை அடைந்தவனாகவே ஆகிறான் என, புரத: பஶ்சாதபி ஸ்தாந: என்பதாக ஸ்தானத்ரயத்திலும்  அந்வயம்.

அன்றியே,
ஊற்றமுடையாய் - ஆஶ்ருதர்களை ரக்ஷிப்பதில் சுதி இல்லாதவன். வானர முதலிகள்  விபீஷணனை ’கெட்டவன்’ சேர்கக்கூடாது என்ன, ஹநூமான் ’நல்லவன்’ சேர்த்துக் கொள்ளலாம் என்ன, இருவரையும் ஒப்புவித்து, ’கெட்டவன் அதனால் சேர்த்துக் கொள்ளலாம்’ என்று அங்கீகரிக்கிற விரத்ததை உடையவன்.

பெரியாய் - மறுதலித்த ஸுக்ரீவன் தானும், ராமனை இதற்காக கொண்டாடும்  படியாக அமைந்த பிரபாவத்தை உடையவன்.

தோற்றமாய் நின்ற - தன்னுடைய ஆஶ்ருத பக்ஷபாதம் பிரகாசிக்கும் படியாகவும், அத்தை ’தன் பேறாகவும்’ செய்து முடிப்பவன். ’பீஷ்ம, த்ரோண அதிக்ரம்ய, மாம்ஸ்ச மதுஸூதந. கிமர்த்தம் புக்தம் விருஷட போஜனம்’ என்று கேட்கும்படியாய் அமைந்த பக்ஷபாதம்.

சுடரே - ’ஐவர்க்கு அருள் செய்து, பார்மல்கு சேனை அவித்த, பரம் சுடர்!’ என்றும், ’இன்னார் தூதன் என நின்றான், எவுள் கிடந்தானே’ என்றும் அவனுடைய, நீர்மை, எளிவரவால் வந்த ஔஜல்யம்.

இப்புடைகளிலே போற்றிப்-புகழ்ந்து வந்தோம் என்பதான ’புகழ் மாலை’.


இருபத்திரண்டாம் பாட்டு - எங்கள்மேல் நோக்குதியேல், எங்கள்மேல் சாபம் இழிந்து - சாப நிவர்த்த மாலை :

நம்முடைய அபராதங்கள் எம்பெருமான் கண்களை செம்பளிக்கப் (மூடப்) பண்ணும். அவனுடைய அபராத ஸஹத்வம் (க்ஷமை) திருக்கண்களை அலரப்பண்ணும். கோடை ஓடிய பயிரிலே ஒருபாட்டம் மழை பெய்தாப் போலே, ஸாத்மிக்க, ஸாத்மிக்க அவனுடைய அருள் நோக்கை வேண்டுகிறாள், இப்பாசுரத்தில் ஆண்டாள்.

’இவையும், அவையும் உவையும்’ (திருவா. ௧-௯-௧) - பதிகத்திலே ஆழ்வாருக்கு பகவான்  தனுடைய ’ஸாத்மிய போக பிரதத்வமாகிற’ குணத்தைக் காட்டிகொடுத்தான்.

போக மண்டபமாகிற ஶ்ரீரங்கத்தில், திருமணத் தூண்களைப் பற்றியன்றி பெரிய பெருமாளின் திருக்கண் நோக்காகிற பிரவாகத்திற்கு எதிர்விழி கொடுக்கப் போகாது.

’அற்றார்க்கு’ சீற்றத்துடனும், மற்றயோர்க்கு அருள் கொண்டும் நோக்க வேண்டி, திங்களும், ஆதித்யனுமாய் இருக்கிற கண்கள் என்றாள். பின்னை தவறு என்றுணர்ந்து, தேய்தல், வளர்தல், ராகு-கேதுவால் பீடித்தல் இவை உள்ள சூரிய-சந்திரர்கள் அவனுடைய திருக் கண்களுக்கு நேர்கொடு நேர் ஒவ்வார் என்று தெளிந்து, ’செங்கண்’ என்றே சொல்லி ”தத்-தஸ்ய சதுர்சம்” ஆக்குகிறாள்.

இவர்கள் சாபம் விஸ்லேஷ ஜனித விரக தாபமாகும். அதுக்கு வழி, அவன் சன்னதி யேற வந்து தலைப் பெய்தலாகிற யாதிருச்சிக சங்கதிகளை  ஆண்டாள் இயம்புகிறாள். எவை என்னில் -

தேஹாத்மாபிமானத்தை தொலைத்து -> ஆசார்ய ஸஹாசத்திலே -> ஈஸ்வர சேஷத்வத்துக்கு இசைந்தனாய் -> பகவாதேகே உபாயத்தின் மூலம் -> அவர்களின் கைங்கர்யமே பிராப்யம் என்பது வரையிலான யாதிருச்சிக, ஆநுஷங்கிக, பிராசங்கிக ஸுக்ருதங் களாகும்.

அகல்யை  திருவடியாலும், தூர்வாசர் திருகரங்களாலும், நள-கூபர்கள் முழந் தாள்களாலும், மது-கைடபர்கள் தொடையினாலும், ருத்ரன் மார்பு வேர்வையினாலும் சாபம் விலகப் பெற்றனர். அவனுடைய ஜாயமான கடாக்ஷத்தால் வந்த ஞானம், அவன் திருவடிகளிலே விழப்பண்ணும். விழுந்தவனை அஞேல் என்று கைகவித்து ரக்ஷிக்கும். ஆக, அவனுடைய, கண், கால், கை மூன்றும் உத்தேஸ்யம் நமக்கு.

பகவத் பிரபாவம் இதுவானால், ஆசாரியனின் ஒருகண் (உட்கண்) நோக்கு -திருஷ்டி யதிசயம்-  முக்கண்ணன், எண்கண்ணன், ஆயிரம் கண்ணர்களாகிற ஹரி, பிரம்மா, சிவன் இவர்கள் யாருக்கும் சமன் செய்யப் போகாது.

ஆளவந்தார், ’ஆமுதல்வன்’ என்று இளையாழ்வாரை கடாக்ஷித்த படியாலேயே அன்றோ ஸம்பிரதாயத்துக்கும், ஸம்சாரிகளுக்கும் வாழ்சி வானளவாயிற்று?.


இருபத்து மூன்றாம் பாட்டு - யாம் வந்த காரியம் ஆராய்ந்தருள் - அருள் மாலை(௨) :

’ஆவா வென்றருள்’ என்கிற திருப்பாவை ௮-ஆம் பாட்டில் ஒரு ’அருள் மாலை’ புனையப்பட்டது. இங்கே ௨௩ ஆம் பாட்டிலும் ஒரு ’அருள் மாலை’ பிரஸ்துதமாகிறது. அங்கே சொன்னது ’அருள்வான்’ என்று பவிஷ்யத் வசனமாக. தாங்கள் சொல்பாவினை   ’வினவி அருள்’ என்கிற பொருளிலே இங்கே இப்பாட்டு பிரஸ்துதமாகிறது எனலாம்.

அகதிகளாக வந்தோம். ஆற்றாமையால் குண ஜிதர்களாக வந்தோம். மற்றையோர்களுக்கு ஆகாதபடி வந்த எங்களை பெற்றாலும் பெறு! இழந்தாலும் இழ!! என்று வந்த சிறுமிகள் விண்ணப்பித் தார்களாக, தன்னைப் பெற்றும் அகதிகள் என்று சொல்லப் போமோ? உங்கள் காரியம் செய்ய சித்தமாய் இருகிற என்னிடம், வந்த காரணத்தை சொல்லுங்கோள் என்ன, கண்ணன் கிடந்த கிடக்கையும், ஸுப்ரபதாமும் சேவித்த தங்களுக்கு நடை அழகும், வீற்றிருந்த கோலமும் காட்டியருள வேண்டும் என்பதாக இப்பாசுரம்.

நடை, கொடை, வடை, முடி என்று கோயில், பெருமாள் கோயில், திருமலை, திருநாராயண புரம் பிரசிதமாய்  நம்பெருமள் நடை அழகு லோகவிஸ்ருதம். சிம்ம கதி, மத்த கதி, வியாகிர கதி, ஸர்ப்பகதி என்று சதுர்கதி பிரசித்தி அவருக்கு.

பெருமாள் நடையழகு காவ்ய பிரசித்தம் என்பதற்கு, சுமித்ரை வசனம் ஓர் எடுத்துக்காட்டு. ’ராமே பிரமாதம் மாகார்ஷி’ என்று லக்ஷ்மணனுக்கு அவள் செய்த உபதேச வார்த்தை இங்கு நினைவு கூறத்தக்கது.

’அக்ருதப் பிரயயௌ ராம, சீதா மத்யே, ஸுமத்யம’ என்கிற வால்மீகி வாக்குப் படி, சீதை ராகவ சிம்மத்தின் பின் நடந்தது, அவன் நடை அழகை பின் இருந்து காண ஆசைப்பட்டாப் போலே.  யாதவ சிம்மமாகிற கண்ணனெம் பெருமானுடைய  நடையழகை அனுபவிக்க ஆசைப்படுகிறாள் ஆண்டாள் இங்கு.

தாங்கள் வேண்டி வந்ததை கொடுக்கும்போது, படுக்கை அறை வார்த்தை ஆகாதபடி, கொலுமண்டபத்தில் சேர-பாண்டியன் சிம்மாசனத்தில் வீற்றிருந்து ஆராய்ந்தருள வேண்டும் என்கிறாள். எம்பெருமானார் கத்யம் விண்ணப்பித்த போது, ”அஸ்துதே|| தயைவ ஸர்வம் ஸம்பத்ஸ்யதே||” என்றருளிச் செய்தாப் போலே ’சீரிய சிங்காசனத் திருந்து’ வாக்தானம் பண்ண பிரார்த்திக்கிறாள்.

’முனிவேழம்’ (இரா.நூ-௬௪) என்றும், ’மறைவாதியராம் புலிமிக்கது’ (இரா.னூ-௮௮) என்கிற அமுதனார் வாக்குப்படி சடங்கர் வாயடங்க த்ரிவேதியாம் பத்ரவேதியிலே அமர்ந்து ’இரமானுச தர்சனத்தை’ நிர்வகித்தார், எம்பெருமானார்.

த்ரயீ வேத: என்று பொருள் படாமல், பேத ஸ்ருதிகளை நீக்கி அபேத ஸ்ருதிகளையே அவலம்பித்த சங்கரர், மற்றும் அபேத ஸ்ருதிகளை விலக்கி, பேத ஸ்ருதிகளையே கணிசித்த ஆநந்த தீர்த்தர் இவர்களைப்போல் அல்லாமல், கடக ஸ்ருதியோடு, பேத-அபேத ஸ்ருதிகள் வாசியற வேதம் முழுவதுமாக பிரமாண சித்தமாக்கின மதம் விசிஷ்டாத்வைத ஸித்தாந்தம் அல்லது இராமானுஜ தர்சனம் என்று இதற்குப் பெயர்.

அராய்ந்து அருள் - திருச்செவி சாத்தியருள் என்பதாய் அமைந்த மாலை ’அருள் மாலை’ (௨).

































No comments:

Post a Comment